PUBLISHED ON : நவ 21, 2026 12:00 AM

சொல்கிறார்கள்
'மேடைகளில்
நிகழ்ச்சி நடத்தும்
திட்டமும் உள்ளது!'
'பரிதாபங்கள்' என்ற, 'யூ டியூப் சேனலை' வெற்றிகரமாக நடத்தி வரும், திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட கோபி மற்றும் சுதாகர்.
* கோபி: மற்றவர்களை போல் பேசும் பழக்கம் எனக்கு அம்மா, அத்தையிடம் இருந்து வந்தது. தாத்தா, பெரியப்பா போல் பேசிக் காட்டுவதில் துவங்கியது, 'பெரியவங்களை கேலி செய்றியா'ன்னு திட்டும் விழுந்திருக்கிறது. ஆனால், சம்பந்தப்பட்டவர்களே ஒரு நொடி சிரித்து விட்டால், தப்பித்தோம் என்று அர்த்தம். பின், பள்ளியில் பேச்சு போட்டி, மாறுவேட போட்டி என்று ஒன்று விட மாட்டேன்.
சிவகங்கையில் இருந்து திருச்சி ஜே.ஜே., இன்ஜினியரிங் கல்லுாரி வரும் வரை, நான் இப்படி தான் இருந்தேன். பொதுவாக, தமிழகத்தில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வருவோர் எழும்பூரிலும், வடக்கே இருந்து வருவோர் சென்ட்ரலிலும் இறங்குவர். நாங்கள் இருவரும், 'தினமலர்' நாளிதழில் வேலை கேட்டு சென்றோம். இருவருக்கும் சேர்த்தே அங்கு வேலை கிடைத்தது.
சென்னையில் இருக்கும் வெளியூர்காரர்கள் தீபாவளி, பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்லும்போது படும் பாடு இருக்கே... அதற்கு முடிவே கிடையாது. இன்னும் எத்தனை அரசுகள் மாறினாலும், இது மட்டும் மாறவே மாறாது. அது மாதிரியான விஷயங்களை நாங்களே நடித்து காணொளி எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்ட போது, அதற்கு கிடைத்த வரவேற்பு பெரிதாக இருந்தது.
அதேபோல் சென்னைக்கு வரும் புது ஆட்கள் வழி தெரியாமல் படும் சிரமங்கள் என, நிறைய பாவக்கதைகள் கிடைத்ததால், 'பரிதாபங்கள்' என்ற பெயரில் நாங்களே நடித்து, 'யூ டியூப்' சேனல் துவக்கி, காணொளிகளாக பதிவிட ஆரம்பித்தோம். இப்போது காணொளியில் செய்வதை விட, நேரடியாக மேடைகளில் செய்யும் திட்டமும் எங்களிடம் இருக்கிறது.
* சுதாகர்: அந்நியன் படத்தில் நடிகர் விக்ரம் பேசுவாரே... அதேபோல் மற்றவர்களின் குரல், பேச்சு மற்றும் செயல்பாடுகளை போலவே செய்து காட்டும், 'மிமிக்ரி'யை நானும் செய்வேன். படிக்கிற இடத்தில், 'இன்னொரு முறை செஞ்சு காட்டு'ன்னு பலரும் நண்பர்கள் ஆயினர். அம்மாபாளையத்தில் இருந்து திருச்சி ஜே.ஜே., காலேஜ் வந்து கோபியை சந்தித்த பின், அது அடுத்த கட்டத்துக்கு நகரத் துவங்கியது.
எங்கள் இருவரது வீட்டிலும், 'பசங்க இன்ஜினியர் ஆகப் போறாங்க'ன்னு கனவுடன் அனுப்பி வைத்தனர். ஆனால், நாங்கள், 'மிமிக்ரி' சாகசங்களை கல்லுாரியில் அரங்கேற்றினோம். நாங்கள் துணிந்து வெளியிட்ட பல நகைச்சுவை காணொளிகளுக்கு, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்கவே பிரபலமாகி விட்டோம்.
போன் எண்கள்
கோபி : 96003 59930
சுதாகர் : 88 700 32077

