'சாமானிய மக்களின் நியாயமான தேவைகள் நிறைவேற வேண்டும்!'
'சாமானிய மக்களின் நியாயமான தேவைகள் நிறைவேற வேண்டும்!'
PUBLISHED ON : நவ 20, 2026 12:51 AM

கிராமப்புற பெண்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான முனைவர் மீனா:
நான் பாரதிதாசன் பல்கலை மாணவி; நன்கு படிப்பேன். எம்.எஸ்சி., இயற்பியலில் தங்கப்பதக்கம் பெற்று, அங்கேயே எம்.பில்., முடித்தேன். அதன்பின் கணினி அறிவியல் படித்தேன். தொடர்ந்து, பொறியியல் துறையிலும் என் கல்விப் பயணத்தை விரிவுபடுத்தினேன். அண்ணா பல்கலையில் எம்.இ., மற்றும் பிஎச்.டி., பட்டங்கள் பெற்றேன்.
நான் மாணவியாக வலம் வந்த பாரதிதாசன் பல்கலையிிலேயே துணைவேந்தராக பொறுப்பேற்றேன். அது, மறக்க முடியாத அனுபவம்.
அதுவும் முதல் பெண் துணைவேந்தராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றதில் கூடுதல் மகிழ்ச்சி. ஆனால், அதை என் தனிப்பட்ட சாதனையாக நினைக்கவில்லை.
உயர்கல்வி என்பது, பெண்களின் முன்னேற்றத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பது புரிந்தது. நான் துணைவேந்தராக இருந்த காலத்தில் உயர்கல்வி, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு சார்ந்த புதிய படிப்புகள், 'டிஜிட்டல்' கற்றல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றினேன்.
சமூக பொறுப்பிலும் என் செயல்களை விரிவுபடுத்தினேன். அந்த பணியின் தொடர்ச்சியாக, 'விஷ்' எனும் இயக்கத்தைத் துவக்கினேன். இதன் பிரதான நோக்கம், மாதவிடாய் சுகாதாரம் குறித்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்கள், இளம் சிறுமியரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான்.
இன்றைய கால கட்டத்தில் பெண்களுக்கும், சமூகத்திற்கும் மாதவிடாய் குறித்த தகவல்கள் தெரிகின்றன.
ஆனால், நாங்கள் இயக்கம் துவங்கிய காலத்தில், இந்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. மாதவிடாய் என்பது இயற்கையான உடலியல் நிகழ்வு.
என்றாலும், அதைச் சார்ந்துள்ள தயக்கம், தவறான நம்பிக்கைகள், போதிய தெளிவின்மை மற்றும் சுகாதார வசதிகள் பற்றாக்குறை போன்றவை பெண்களின் தினசரி வாழ்க்கையையும், உடல்நலத்தையும் பாதிக்கின்றன.
இதனால், மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசவும், சரியான தகவல்களை பெண் களிடம் கொண்டு சேர்க்கவும் உடனடி தேவை உள்ளதை உணர்ந்தோம்.
அது குறித்த துண்டு பிரசுரங்கள், சிற்றேடுகள், நிகழ்ச்சிகள் மற்றும் களப்பணிகள் வழியாக மாதவிடாய் மேலாண்மை, சுகாதாரம், உடல்நலம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் அதிகபட்ச பங்களிப்பை வழங்கினோம்; இப்போதும் அந்த முயற்சி தொடர்கிறது.
எதுவும் கிடைக்காத சாமானிய மக்களுக்கும், அவர்களின் நியாயமான தேவைகள் நிறைவேற வேண்டும் என்பதே, என் எல்லா முயற்சிகளுக்குமான அடிப்படை நோக்கம்.
