'சிறப்புக் குழந்தைகளின் அரசுத் திட்டங்கள் காகிதத்தில் மட்டுமே!'
'சிறப்புக் குழந்தைகளின் அரசுத் திட்டங்கள் காகிதத்தில் மட்டுமே!'
PUBLISHED ON : நவ 14, 2026 12:00 AM

சிறப்பு குழந்தையான, 28 வயது மகனை தனி நபராக பராமரித்து வரும், சென்னையைச் சேர்ந்த 66 வயதாகும் சங்கர நாராயணன்:
எனக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். மகள் பி.காம்., முடித்திருக்கிறாள். மகனுக்கு வயது 28. அவனுக்கு, 'செரிப்ரல் பால்சி' என்று சொல்லக்கூடிய பெருமூளை வாதம் என்ற பாதிப்பு இருக்கிறது. இந்த பாதிப்பால் உடல் இயக்கம் இருக்காது; பேச முடியாது.
அவன் பிறந்த ஒன்பதாவது மாதத்தில் இது தெரியவந்தது. அவனால் சுயமாக எந்த வேலையும் செய்து கொள்ள முடியாது. 'இது வேண்டும், இது வேண்டாம்' என்று சொல்லத் தெரியாது. என் மனைவியும், நானும் அவனை எப்படி நல்லபடியாக வளர்ப்பது என்று யோசித்தோம். பிறந்தது முதல், 17 வயது வரை, அவனை என் மனைவி தான் பார்த்துக் கொண்டார்.
கடந்த 2015ல் மனைவிக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் என்று கண்டுபிடித்தோம். அதற்குள் அவரது நுரையீரல் வரை பரவி காப்பாற்ற முடியவில்லை.
மனைவி இறந்ததும், மகனை பார்த்துக் கொள்ளும் முழு பொறுப்பையும் நான் எடுத்துக் கொண்டேன். மனைவி இறந்த பின், 10 ஆண்டுகளாக சமையல் உட்பட அனைத்து வீட்டு வேலைகளையும் நான் கவனித்துக் கொள்கிறேன்; மகளும் உதவி செய்வாள்.
தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த நான், 2018ல் விருப்ப ஓய்வு வாங்கினேன். மகன் துாங்கி எழுந்தது முதல், இரவு துாங்கச் செல்லும் வரை, அவனுக்கு எல்லா வேலைகளையும் நான் தான் செய்வேன். வீடே உலகம் என மாறியது.
கடந்த 25 ஆண்டுகளாக சிறப்பு பள்ளிக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். பள்ளியில், சக்கர நாற்காலி வசதி உள்ள வண்டியை வீட்டுக்கே அனுப்பி அழைத்து செல்வர். இப்போது, பள்ளியில் சிறப்புக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால், வாரத்தில் இரு நாட்கள் மட்டும் அனுப்பச் சொல்கின்றனர். வீட்டில் இருக்கும் நாட்களில் அவனை சமாளிக்க முடியவில்லை.
சிறப்புக் குழந்தைகளுக்கான பல அரசுத் திட்டங்கள், வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கின்றன. அவற்றை எல்லாம் நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை, அரசு கண்டுகொள்வது போல் தெரியவில்லை.
எனக்கு இப்போது வயது, 66. இத்தனை கஷ்டங்களை அனுபவிக்கும் யாருக்கும், 'எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது... நான் என்ன பாவம் செய்தேன்?' என்று கேட்கத் தோன்றும். நான் அப்படியெல்லாம் ஒருநாளும் யோசித்ததே இல்லை.
கடவுளிடம் எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள்... எனக்கு முன் என் மகன் போய் விட வேண்டும். இல்லையெனில், நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் போய் சேர்ந்துவிட வேண்டும் என்பது மட்டுமே.
