PUBLISHED ON : செப் 23, 2025 12:00 AM

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளியை மாற்றியுள்ள, திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், சாலையப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை சத்யப்பிரியா:
என் சொந்த ஊர் கோவை மாவட்டம், செலக்கரிச்சல் கிராமம். ஆசிரியையாக, 19-வது ஆண்டு பயணம் இது. 2013ல் சாலையப்பாளையம் பள்ளிக்கு பணி மாறுதல் கிடைத்தது. எங்கள் பள்ளியில் குடிக்க, கழிப்பறை பயன்பாட்டுக்கு என, தண்ணீர் தேவைக்காக குழந்தைகள் சிரமப்பட்டனர்.
ஆசிரியர்களையும், பெற்றோரையும் ஒருங்கிணைத்து, 1 லட்சம் ரூபாய் திரட்டி, கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டினோம்.
பள்ளி குழந்தைகளுக்கு காய்கறிகள் சாப்பிடுறது, பேச்சுப் போட்டின்னு நிறைய நடத்தி, பரிசுகள் கொடுக்கத் துவங்கினேன். நாளிதழ்கள் வாங்கி, வாசிப்பு பழக்கத்தை முறைப்படுத்தினேன்.
என்னோட சம்பளத்துல, 5 முதல் 10 சதவீதம் வரை பள்ளி குழந்தைகளுக்காக செலவு செய்கிறேன். நான் சமூக வலைதளங்களில், 'ஆக்டிவ்'வா இருப்பதால், வெளியில் இருந்து நிறைய பேர் உதவிகள் செய்கின்றனர்.
என்ன தேவைப்படுதுன்னு சொல்லிட்டா வாங்கிக் கொடுத்துருவாங்க. எல்லா வகுப்பறைகளிலும், 'வைபை' இணைப்போட, 'டிவி'க்கள் மற்றும் கலர் பிரின்டர் வாங்கி கொடுத்தாங்க.
குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லை என்றால், உடனே வீட்டுக்கு சென்று கூட்டிட்டு வந்துருவேன். இடைநிற்றலை தடுக்க புதுப்புது முயற்சிகள் எடுத்துட்டு இருக்கேன்.
பள்ளிப்படிப்பு முடிச்சு, கல்லுாரி படிப்பை தொடர முடியாத ஆறு பேரை படிக்க வைக்கிறேன். நாம ஒருத்தனை கைதுாக்கி விட்டா, அவன் நாலு பேரை கைதுாக்கி விடுவான். சமூக மாற்றம் தானா நிகழும்.
நான் இந்த பள்ளிக்கு வந்தபோது, ஒரு மாணவியின் அப்பா தவறிட்டாரு. அடிப்படை செலவுக்கே தடுமாறிட்டு இருந்தாங்க.
அவங்களுக்கு, நண்பர்கள் வாயிலாக ஆறு மாசத்துக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொடுத்தேன்.
படிப்பு செலவுக்காக, மாணவி பெயர்ல 20,000 ரூபாயை என் நண்பர் 'டிபாசிட்' செய்தார்.
கூலி வேலைக்கு போயிட்டிருந்த அவங்க அம்மாவை, மாலை நேர தையல் வகுப்புல சேர்த்து விட்டேன். நண்பர்கள் வாயிலாக, தையல் மெஷினும் வாங்கி கொடுத்தேன்.
டுட்டோரியல் காலேஜில் சேர்த்து படிக்க வெச்சேன். இப்போ அவங்க பிளஸ் 2, அவங்க பொண்ணு பிளஸ் 1 படிக்குது. ஒருத்தருக்கு கல்வியை மட்டும் கொடுத்துட்டா போதும்... நிச்சயம் அவங்க வாழ்க்கை மாறும். ஆசிரியையா, அதை என் உரிமையாகவும், கடமையாகவும் நினைக்கிறேன்.