/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
வங்கி வேலையை விட்டாலும் இசையை விடுவதாக இல்லை!
/
வங்கி வேலையை விட்டாலும் இசையை விடுவதாக இல்லை!
PUBLISHED ON : ஏப் 24, 2024 12:00 AM

மும்பையைச் சேர்ந்த கர்நாடக இசை கலைஞர் ஹேமா பால சுப்ரமணியம்:
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி என் பூர்வீகம். வளர்ந்தது மும்பையில். என் குடும்பத்தில் பலர் இசையில் ஈடுபாடு கொண்டவர்கள் என்பதால், நான் 5 வயதிலிருந்தே கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ள துவங்கினேன். பாடகர் சங்கர் மகாதேவனின் குருவான பாலாமணி தான் எனக்கும் குரு.
மேலும், வீட்டில் இருந்த வயலினில் பயிற்சி செய்ய எனக்கும் சகோதரருக்கும் போட்டியாகவே இருக்கும். எனவே, நான் வேறோர் இசைக்கருவியை கற்றுக்கொள்ள நினைத்து, புல்லாங்குழலை தேர்ந்தெடுத்தேன். என் சகோதரர், புல்லாங்குழலில் விரல்களை எப்படி வைக்க வேண்டும், சப்த ஸ்வரங்களை எவ்வாறு வாசிக்க வேண்டும் என்ற அடிப்படையை கற்றுக் கொடுத்தார். கேள்வி ஞானத்தில் சுயமாக அதில் என் கற்றலை தொடர்ந்தேன்.
வங்கியில் வேலை செய்து கொண்டே, உணவு இடைவேளையில் கிடைக்கும் ஒரு மணி நேரத்தில் அருகில் இருந்த இசை பள்ளிக்கு சென்று, என் கற்றலை தொடர்ந்தேன். எனக்கு இசை கற்று கொடுத்த குருவிடம், 'நான் புல்லாங்குழல் வாசிப்பேன்' என்று சொன்னபோது, 'பாடுவதற்கு பலர் இருக்கின்றனர், புல்லாங்குழல் இசை கலைஞர்கள் சிலர் தான் இருக்கின்றனர். எனவே, அதில் கவனம் செலுத்து' என்றார்.
நானும் அப்படியே செய்ய, எனக்கு புல்லாங்குழல் கச்சேரிக்கு வாய்ப்புகள் வர துவங்கின. ஆண்டுக்கு, 50-க்கும் மேற்பட்ட இசை கச்சேரிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகளில் புல்லாங்குழல் வாசிக்க துவங்கினேன்.
ஒரு கட்டத்தில், வேலையை ராஜினாமா செய்து விட்டு இசையில் முழுமையாக ஈடுபட்டேன். வாழ்க்கை எதிர்பார்த்தது போலவே சென்று விடாதே... என் கணவர் திடீரென இறந்தபோது, குடும்பத்திற்காக மீண்டும் ஒரு வங்கியில் வேலைக்கு சேர்ந்தேன்.
ஒவ்வோர் ஆண்டும், அமெரிக்காவில் இரண்டு மாதங்கள் இசைக் கச்சேரிகளில் புல்லாங்குழல் வாசிக்கவும், பாடவும் செய்தேன். அப்போது, அங்கு என்னிடம் இசை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போனது. இந்தியா திரும்பிய பின்னரும், மும்பையில் இருந்தபடியே, 'ஸ்கைப்' வாயிலாக அவர்களுக்கு புல்லாங்குழல் மற்றும் கர்நாடக இசை வகுப்புகள் எடுக்க துவங்கினேன்.
பெண்கள், தங்களுக்கு குழந்தை பிறக்கும் போது மட்டும் வேலையில் இருந்து பிரேக் எடுப்பதில்லை. பேரன், பேத்தி பிறக்கும்போது எடுப்பதுண்டு. அந்த வகையில், என் மகனுக்கு இப்போது குழந்தை பிறந்திருப்பதால் வங்கி வேலையை மீண்டும் விட்டு விட்டேன். ஆனால், இசையை இம்முறையும் விட போவதில்லை. இன்னும் முழுமையாக என்னை அதில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.
***

