/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
வெற்றியை வசப்படுத்த அனுபவங்களே மூலதனம்!
/
வெற்றியை வசப்படுத்த அனுபவங்களே மூலதனம்!
PUBLISHED ON : செப் 21, 2024 12:00 AM

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், 'வி.பி.கே., புட்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வரும் விஷ்ணுப்ரியா கண்ணன்: கடந்த 2001ல் திருமணமானது. அடுத்த ஆண்டே என் கணவர் கண்ணன், கடலை மிட்டாய் தொழிலை ஆரம்பித்தார்.
சில மாதங்களில், அடையாளம் தெரியாத நபர்கள் எங்கள் நிறுவனத்துக்கு தீ வைத்து விட்டனர்; பெரும் நஷ்டம். கோவில்பட்டியில் இருந்து மதுரைக்கு குடியேறினோம்.
நான் மேற்படிப்பு முடித்து விட்டு, மலேஷியா மற்றும் மத்திய பிரதேசத்தில் பேராசிரியையாக சில ஆண்டுகள் வேலை செய்தேன். என் கணவர் குடும்பத்தை கவனித்து கொண்டார்.
சொந்த ஊரான கோவில்பட்டியில் கடலை மிட்டாய் தொழிலில் ஜெயிக்கணும் என்பது தான் கணவரின் லட்சியம்.
அதற்காக, 2016ல் சில லட்சம் ரூபாய் முதலீட்டில் இந்த தொழிலை ஆரம்பித்தார். அப்போது, மத்திய பிரதேசத்தில் தனியார் நர்சிங் கல்லுாரியில் முதல்வராக நான் பணிபுரிந்தேன்.
தொழிலை விரிவாக்கம் செய்யவும், அவருக்கு எல்லா வகையிலும் உதவுவதற்காகவும் என் பணியை ராஜினாமா செய்து, 2017ல் கோவில்பட்டிக்கு வந்தேன்.
மூலப்பொருட்களின் தரம் பிரிப்பதற்கு மட்டுமே மிஷின்களை பயன்படுத்துகிறோம். மற்றபடி கை வேலைப்பாடுகளில் தான் தின்பண்டங்களை தயாரிக்கிறோம். சுவை மற்றும் ப்ளேவருக்கு ஏலக்காய், சுக்கு, வெல்லம் மட்டும் தான் பயன்படுத்துகிறோம்.
ரோஜா இதழ்கள், தேங்காய், சாக்லேட், சோளப்பொரி உட்பட பல வகையான ப்ளேவர்களிலும் கடலை மிட்டாய் தயாரிக்கிறோம். இந்தியா முழுக்க சில்லரை மற்றும் மொத்த விலைக்கு நேரடியாக விற்பனை செய்கிறோம்.
அது மட்டுமல்லாமல், எங்கள் தயாரிப்புகளை வாங்கி, சில நிறுவனங்கள் அவர்கள் கம்பெனி பெயரிலும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கின்றனர்.
கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் உட்பட இனிப்பு வகைகள் மட்டும் தினமும், 1,000 கிலோ தின்பண்டங்களை தயாரிக்கிறோம். ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய் வர்த்தகம் செய்கிறோம்.
போட்டி அதிகமாகி விட்டாலும், தனித்துவ தயாரிப்புகள் மற்றும் தரம் தான் எங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றன. என்ன சிரமம் வந்தாலும், பணியாளர்களுக்கு ஆண்டு முழுக்க வேலைவாய்ப்பு கொடுப்பதே எங்கள் முதல் கடமை.
முதல் நான்கு ஆண்டுகள் நிறைய போராட்டங்களை எதிர்கொண்டோம். கிடைத்த படிப்பினைகளும், தளராத தன்னம்பிக்கையும் தான் இப்போது எங்களுக்கு முகவரி கொடுத்துள்ளது.
எந்த தொழிலாக இருந்தாலும், ஆரம்பத்தில் சில ஆண்டுகளுக்கு போராட்டங்களும், சவால்களும் துரத்தும். சோர்ந்து போய்விடாமல், அனுபவங்களை மூலதனமாக கொண்டு உழைத்தால், அதற்கு பலனாக வெற்றியை வசப்படுத்தலாம்.