/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
80,000 கிலோ 'ஸ்நாக்ஸ்' ஏற்றுமதி செய்கிறோம்!
/
80,000 கிலோ 'ஸ்நாக்ஸ்' ஏற்றுமதி செய்கிறோம்!
PUBLISHED ON : ஜன 14, 2024 12:00 AM

தமிழகத்தின் பல ஊர்களில் இருக்கும் பிரபல ஸ்நாக்ஸ் வகைகளை வாங்கி, வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கும், 'ஊர்ல.காம்' என்ற, 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தை சேர்ந்த சரவணன், அரவிந்த்:
சரவணன்: கடந்த 2021ல் கோவிட் தொற்று காலம். அப்போது தான், இந்த ஸ்வீட் பிசினசை துவங்கினோம். எங்கள் நிறுவனத்தின் நான்கு பார்ட்னர்களில் ஒருவரான காயத்ரி, அமெரிக்காவில் வசிக்கிறார். அவருடைய ஐடியாவில் தான் இந்த நிறுவனமே துவங்கப்பட்டது.
'நம்ம ஊர் இனிப்பு, கார வகைகளை சாப்பிட வேண்டும். அதற்கு ஏதேனும் ஏற்பாடு செய்யுங்கள்' என, எங்களிடம் காயத்ரி கேட்க, நாங்களும் தமிழகத்தில் பல ஊர்களில் இருந்து கிடைக்கும் பிரபல ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்களை வாங்கி அனுப்பி வைத்தோம்.
இதை ஒரு பிசினஸ் வாய்ப்பாகப் பார்த்த காயத்ரி, எங்களிடம் நிறைய பார்சல்களை அனுப்பும்படி கூறினார்.
அந்த ஆண்டு தீபாவளிக்கு சில நாட்களே இருந்த நிலையில், அவர் கேட்ட பெரிய ஆர்டரை தருவது, எங்களுக்கு மலைப்பாக இருந்தது.
ஆனால், அதை ஒரு சவாலாக எடுத்து, 2,000 கிலோ ஸ்நாக்ஸ் வகைகளை அனுப்பி வைத்தோம்; எங்கள் முதல் முயற்சியே, அமோக வெற்றியை தந்தது.
அதன்பின் தான், இதை பெரிய அளவில் பிசினசாக செய்யலாம் என்ற யோசனை எங்களுக்கு வந்தது. 'ஊர்ல' என்ற பெயரை அதன்பின் தான் தேர்வு செய்து, வெப்சைட் ஒன்றை துவங்கினோம்.
ஆரம்பத்தில் சில நாடுகளுக்கு தான் ஸ்நாக்ஸ்களை அனுப்பினோம். இப்போது, 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்புகிறோம். 2,000 கிலோவில் ஆரம்பித்த பிசினஸ், இப்போது ஆண்டுக்கு, 80,000 கிலோவாக வளர்ந்திருக்கிறது.
பரம்பரை பரம்பரையாக தொழில் செய்து வரும் கடைகள் அல்லது 25 ஆண்டுகள் பழமையான கடைகளாக பார்த்து தான் வாங்குவோம்.
பொருட்களின் தரத்தை நன்கு பரிசோதித்த பின், 'பேக்கிங்' செய்வதால், நீண்ட நாட்கள் வரை சுவையிலும், தரத்திலும் குறை இல்லாமல் ஸ்நாக்ஸ்கள் இருக்கின்றன.
அரவிந்த்: எங்களுடைய பிராண்டின் ஸ்பெஷலே, பலகார பெட்டி தான். ஒவ்வொரு ஸ்நாக்ஸ் வகைகளையும் சிறப்பான முறையில், 'பேக்' செய்து பலகார பெட்டிகளில் போட்டு அனுப்புவோம்.
மூன்று பேருடன் துவங்கிய இந்த பிசினசில் தற்போது, 40 பேர் வேலை செய்கின்றனர்.
நாங்கள் விற்பனை செய்யத் துவங்கியது இனிப்பு மற்றும் கார வகைகளைத் தான்.
நிறைய ஊர்களில் இருந்து, கைவினைப் பொருட்கள், சேலை ரகங்கள், மசாலா, ஊறுகாய், காபி பொடி போன்ற பல வித பொருட்களை வாங்கி, அவற்றை வாடிக்கையாளரிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதே எங்களின் அடுத்த 10 ஆண்டிற்கான இலக்கு.
மார்ச்சில் விதைத்தால் அக்டோபர் வரைமகசூல் கிடைக்கும்!
சுற்றிலும் நாலு பக்கமும் கடல் சூழ இருப்பதாலும், பூமியின் வட துருவத்துக்கு அருகில் இருப்பதாலும், 'டெம்ப்பரேட் ஓஷியானிக்' என்று சொல்லக்கூடிய அயர்லாந்தில், வீட்டிலேயே இயற்கை விவசாயம் செய்து வரும், கோவையை சேர்ந்த ராஜ்குமார்:
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு படித்து, அயர்லாந்து நாட்டில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறேன்.
இந்தியாவைப் போல விவசாயத்துக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை அயர்லாந்தில் இல்லை. ஆண்டின் பெரும்பாலான மாதங்கள், கடுமையான குளிரும், அதிவேக காற்றும், தொடர்ச்சியான மழை பொழிவும் நிலவும்.
மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே வெப்பநிலை, 15 டிகிரி செல்ஷியசை தாண்டும். இந்த நான்கு மாதங்களிலும் கூட இரவு நேரத்தில், 10 டிகிரி செல்ஷியஷ் கீழே செல்லும்.
இந்தச் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த பின் தான், வீட்டுத்தோட்ட விவசாயத்தை துவங்கினோம். கடும் குளிர் நிலவுவதால், மேட்டுப்பாத்தியில் நேரடியாக விதைகளை விதைப்பு செய்தால், முளைக்காது.
அதனால், வீட்டுக்குள் பிளாஸ்டிக் குழித்தட்டுகளில் மண்ணை நிரப்பி விதைகளைப் போட்டு, ஹீட்டர்கள் வாயிலாக, 20 டிகிரி செல்ஷியசை தாண்டிய வெப்பநிலை வாயிலாக பராமரித்தோம்; அடுத்த சில நாட்களிலேயே விதைகள் நன்கு முளைக்கத் துவங்கின.
பின், ஒரு மாதம் கழித்து, குழித்தட்டுகளிலிருந்து நாற்றுகளை எடுத்து மேட்டுப்பாத்தியில் நடவு செய்தோம். இரவில் கடும் குளிர் நிலவுவதால், மேட்டுப்பாத்திக்கு மேலே, 3 அடி உயரத்தில் மரச்சட்டம் மற்றும் பி.வி.சி., குழாய்களை அமைத்து, அதில்
துணியைப் போட்டு மூடிவிடுவோம்.
கடும் குளிர் மற்றும் மழைநீரைகட்டுப்படுத்தக்கூடிய துணிகள் அயர்லாந்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் வெளிச்சம், காற்று மற்றும் மழைநீர் மிதமாக ஊடுருவதால், பயிர்கள் வளர்வதற்கு ஏற்ற சூழல் கிடைக்கிறது.
பகல் பொழுதில் மழை இல்லாத நேரங்களில் மட்டும் அந்தத் துணியைத் திறந்துவிடுவோம். இதனால் செடிகளுக்குச் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் கிடைக்கும்.
மார்ச் மாதம் விதைப்பு செய்த பயிர்களிலிருந்து, மே கடைசி வாரத்திலிருந்து அக்டோபர் வரை மகசூல் கிடைக்கும். அதன்பின், சீதோஷ்ண நிலை ஒத்துழைக்காது; அதிக குளிர் காரணமாக, செடிகள் கருக துவங்கி விடும்.
எங்கள் தோட்டத்தில் முள்ளங்கி, உருளைக் கிழங்கு, டர்னிப், பட்டாணி, பெரிய வெங்காயம், சுரைக்காய், பீன்ஸ், தக்காளி, பச்சை மிளகாய், கேரட் உள்ளிட்ட காய்கறிகளையும், கீரையில், புதினா, புளிச்சகீரை, மூலிகையில் துளசி, பெப்பர் மின்ட் உள்ளிட்ட சில வகைகளையும் வளர்க்கிறோம்.
மின்னஞ்சல்: successrajkumar08@gmail.com

