/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
உணவு என்பது உடலுக்கு கேடு விளைவிக்க கூடாது!
/
உணவு என்பது உடலுக்கு கேடு விளைவிக்க கூடாது!
PUBLISHED ON : ஜன 06, 2026 01:26 AM

இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து, அரிசி, சத்து மாவு, அவல் என மதிப்பு கூட்டி விற்பனை செய்து வரும் தஞ்சை மாவட்டம், மாரநேரி கிராமத்தைச் சேர்ந்த, 65 வயதாகும் பசுபதி:
மக்கள் அதிக நாள் வாழ வேண்டும். ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் என்ற நோக்கத்துடன், நஞ்சில்லாத பாரம்பரிய நெல் ரகங்களை மட்டும், 25 ஆண்டுகளாக சாகுபடி செய்து வருகிறேன்.
இயந்திர பொறியியல் எனும், 'மெக்கானிக்கல் இன்ஜினியரிங்' படித்துள்ள என் மகனும் உதவியாக இருந்து வருகிறார்.
நம் பாரம்பரிய ரகங்களான கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, ஆத்துார் கிச்சிலி சம்பா, துாய மல்லி, காட்டுயானம், இலுப்பப்பூ சம்பா, சீரக சம்பா, ரத்தசாலி உள்ளிட்ட பல நெல் ரகங்களை, மாற்றி மாற்றி சாகுபடி செய்து வருகிறேன்.
ஆற்று பாசனத்தை நம்பி, ஆண்டுக்கு இரு போகம் மட்டும் சாகுபடி செய்கிறேன். கருங்குறுவை நெல் ரகம், 110 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். இது, இயற்கை மருத்துவத்தில் பல மருந்துகள் தயாரிக்க பயன்படுகிறது; இரும்புச்சத்து அதிகம்; உடலில் கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது.
அரிசி, சத்து மாவு, அவல் என மதிப்புகூட்டி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகிறேன். முக்கியமாக, பெங்களூரில் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்கள், கருப்பு கவுனி அரிசியை அதிகம் வாங்குகின்றனர். சிங்கப்பூர், அமெரிக்கா, குவைத் நாடுகளுக்கும் அனுப்பி வந்தேன்.
இப்போது, அரிசியாக அனுப்ப தடை இருக்கிறது. அதனால், வெளிநாட்டில் வசிப்போரின் உறவினர்கள் கருப்பு கவுனி, காட்டுயானம், மாப்பிள்ளை சம்பா ஆகியவற்றை வாங்கி, மாவாக அரைத்து எடுத்து செல்கின்றனர்.
என் வயலை சுற்றிலும் தேக்கு, தென்னை மற்றும் செம்மரங்களை நட்டு வளர்க்கிறேன். இவை அனைத்தும் இயற்கை முறை சாகுபடி என்பதால், நன்கு வளர்ந்து பயன் தருகின்றன.
மேலும், விவசாயிகள் குழு அமைத்து, பலரையும் இயற்கை விவசாயத்திற்கு மாற்றியுள்ளேன். வேளாண் கல்லுாரி மாணவ - மாணவியர், பயிற்சிக்காக என் வயலுக்கு வந்து கற்கின்றனர்.
சராசரியாக, ஏழு மாதங்களில் இரண்டு போகத்திற்கும் சேர்த்து, 30,000 முதல் 40,000 ரூபாய் வரை செலவு ஆகும். லாபமாக, 3.50 லட்சம் ரூபாய் கிடைத்து வருகிறது.
ஒரு பிடி உணவாக இருந்தாலும், அது உடலுக்கு கேடு விளைவிக்காததாக இருக்க வேண்டும். எனக்கு லாபமும் கிடைக்கிறது; உடலுக்கு கேடு விளைவிக்காத இயற்கை சாகுபடி செய்கிறோம் என்ற மன திருப்தியும் உள்ளது.
தொடர்புக்கு: 96007 19525

