/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
வாய்ப்புகளை நாமே உருவாக்குவோம்!
/
வாய்ப்புகளை நாமே உருவாக்குவோம்!
PUBLISHED ON : ஜன 07, 2026 04:01 AM

கடந்த, 45 ஆண்டுகளாக நாட்டுப்புற பாடல்கள் சார்ந்து இயங்கி வரும், துாத்துக்குடி மாவட்டம், பேய்க்குளத்தைச் சேர்ந்த, 61 வயதான சந்திரபுஷ்பம்: நம் வாழ்வியலை, அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லும் சக்தி, நாட்டுப்புற பாடல்களுக்கு இருக்கிறது.
நம் முன்னோர் எழுதிய நாட்டுப்புற பாடல்களை இப்போது எடுத்து பார்த்தால், இன்றைய தலைமுறையினர் இழந்திருப்பதை, அந்த வரிகள் சொல்லும்.
கலாசாரத்தை, வாழ்க்கை முறையை வரலாறாக்கும் தன்மை, நாட்டுப்புற பாடல்களுக்கு இருக்கிறது. ஆனால், அது சார்ந்து இயங்கத்தான் இளைஞர்கள் இல்லை.
என் பெற்றோரும் நாட்டுப்புற பாடகர்கள் தான். என், 4 வயது முதலே நாட்டுப்புற பாடல்களை பாட ஆரம்பித்தேன். வார்த்தைகளை கோர்ப்பது, மெட்டுகள் போடுவதெல்லாம், 10 வயதிலேயே அத்துப்படி.
நாட்டுப்புற பாடல்கள், சாமானிய மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்தாலும், மக்கள் கைதட்டி ரசித்தாலும், நாட்டுப்புற பாடகர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்ற விஷயம், சிறு வயதிலேயே எனக்கு புரிந்தது.
நாட்டுப்புற பாடல்களை பாடத் தெரிந்தாலும், உரிய ஆதாரங்களுடன் பேசும்போது தான் மக்கள் நம்புவர். அதனால், நாட்டுப்புற பாடலில் முனைவர் பட்டம் வாங்கினேன்.
கல்லுாரி முடித்ததும் கோவில் திருவிழாக்கள், ஊர் நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற பாடகராக பங்கேற்க ஆரம்பித்தேன். 'பொம்பளப் புள்ள ராத்திரி முழுக்க வீட்ல இல்லாமல் நிகழ்ச்சிக்கு போகுது' என, ஊர் மக்கள் கண்டபடி பேசினர். ஆனால், எந்த விமர்சனமும் என்னை தடுத்து நிறுத்தவில்லை.
திருமணம் முடிந்ததும், கணவரின் ஒத்துழைப்பும் கிடைத்தது. எந்த கருத்து சார்ந்து பாட்டு கேட்டாலும், ஐந்து நிமிடத்தில் எழுதிக் கொடுக்கும் அளவுக்கு என்னை தயார்படுத்தி கொண்டேன். அகில இந்திய வானொலி நிலையத்தில், அறிவிப்பாளர் வேலை கிடைத்தது. ஓய்வு நேரத்தில் இலவசமாக இசை நிகழ்ச்சிகள் செய்து கொடுத்தேன்.
பணி ஓய்வுக்கு பின், முழுமையாக நாட்டுப்புற பாடல்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறேன். நிகழ்ச்சிகள் இல்லாத நாட்களில், என் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன். நான் பதிவிட்ட ஒரு தாலாட்டு வீடியோவை, 40 லட்சம் பேர் பார்த்தது, எனக்கு கூடுதல் உத்வேகமாக அமைந்தது.
நாட்டுப்புற பாடல்களை கேட்க, மேடை நிகழ்ச்சிகளுக்கு வராத இளைஞர்கள் கூட, சமூக வலைதளங்களில் நான் பதிவிடும் வீடியோக்கள் பிடித்திருப்பதாக கூறுகின்றனர்.
அடுத்த தலைமுறையினர், எங்களை கவனிப்பதையே பெரிய மாற்றமாக நினைக்கிறேன். நமக்கான வாய்ப்புகள் வரவில்லை எனில், நாம் வாய்ப்புகளை உருவாக்குவோம்!

