PUBLISHED ON : ஆக 20, 2025 12:00 AM

தள்ளுவண்டி கடையில் தொழிலை துவங்கி தற்போது, 'தோசா பிளாசா' என்ற பெயரில், உலகம் முழுதும் கடைகள் நடத்தும், துாத்துக்குடியைச் சேர்ந்த கணபதி:
நான், 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு, பிழைப்பு தேடி சென்னைக்கு வந்து வேலை பார்த்தேன். ஒரு நாள் அங்கிருந்த ஒருவர், தன்னுடன் வந்தால், மாதம், 1,200 ரூபாய் சம்பளம் கொடுப்பதாக கூறினார். கூடுதல் சம்பளம் என்பதால், அந்த நபருடன் மும்பைக்கு பயணித்தேன்.
மும்பையில் இறங்கியதும், 'சிறிது நேரத்தில் வருகிறேன்' என்று சொல்லிச் சென்றவர், திரும்ப வரவே இல்லை. நான் அங்கு மொழி தெரியாமல் சுற்றிக் கொண்டிருப்பதை பார்த்த டாக்சி டிரைவர் ஒருவர், நான் தமிழ் பேசுவதை பார்த்து, தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் கொண்டு விட்டார்.
அங்கு, புதிதாக திறக்கப்பட்ட பிரேம் சாகர் என்ற ஹோட்டலில், தேநீர் விற்பனை செய்யும் வேலையை செய்தேன். அப்போது, வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் எடுத்ததுடன், வியாபாரத்தையும் உயர்த்தி காட்டினேன். அதன்பின், சுயதொழில் துவங்க முடிவெடுத்து, வாஷி என்ற பகுதியில் தள்ளுவண்டி கடையில் இட்லி, தோசை விற்பனை செய்ய துவங்கினேன். அது தான் என் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல, அடித் தளம் அமைத்து கொடுத்தது.
தள்ளுவண்டி வியாபாரம் நன்றாக நடந்தது. அனைத்து மசாலாக்களையும் என் அம்மாவிடம் தயார் செய்து வாங்கினேன். உதவிக்கு என் தம்பியை ஊரில் இருந்து வரவழைத்தேன்.
அடுத்து, 'பிரேம் சாகர் தோசா பிளாசா' என்ற பெயரில், 1997ல் மும்பையில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில், முதல் கடையை துவக்கினேன். எங்களது கடைக்கு அருகில் இருந்த ஒரு சைனீஸ் கடையை வாடகைக்கு எடுத்து நடத்தி பார்த்து முடியாமல், மூடிவிட்டோம்.
அந்த கடையில் இருந்த சைனீஸ் சாஸ் வகைகளில், புதிய வகை தோசைகளை தயாரித்து, வாடிக்கையாளர்களுக்கு வழங்கினோம்.
அடுத்த கட்டமாக ஒரு மாலில், 'தோசா பிளாசா' துவக்கினோம். அடுத்தடுத்து மும்பை முழுதும் எங்கள் தோசா பிளாசா கடைகள் பரவின. எங்களது பிராண்டுக்கு டிரேட் மார்க் பதிவு செய்தோம். பெரிய நிறுவனங்களை போல் எங்களது பிராண்டையும் பிரான்சைஸ் கொடுத்து, இந்தியா முழுதும் கடைகளை திறந்தோம். தற்போது, 60 வகையான தோசைகளை வழங்கி வருகிறோம்.
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, துபாய் நாடுகளிலும் எங்கள் கிளைகளை திறக்குமளவுக்கு வளர்ந்துள்ளோம். இப்போது, எங்களுடைய ஆண்டு, 'டர்ன் ஓவர்' 60 கோடி ரூபாய். அடுத்து அமெரிக்காவில், 100 கடைகளை துவங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளோம்; நிச்சயம் ஜெயிப்போம்.