/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கடன் கேட்குற நிலைக்கு கடவுள் வைக்கலை!
/
கடன் கேட்குற நிலைக்கு கடவுள் வைக்கலை!
PUBLISHED ON : மார் 04, 2024 12:00 AM

'கன்னியாகுமரி மார்க்கெட்ஸ்' என்ற, 'யு டியூப்' சேனலை நடத்தும் மேரி கில்டா ராணி:
கன்னியாகுமரி மாவட்டத்தில், நுள்ளி விளை என்ற சிற்றுா ரைச் சேர்ந்தவள் நான். எம்.ஏ., முடித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். என் கணவர் ராபின் ஜினோ ஆட்டோ ஓட்டுனர்.
இந்தியாவில் மட்டும், 46.2 கோடி, 'யு டியூப் சேனல்'கள் ஆக்டிவ்வாக இயங்குகின்றன என்கின்றன புள்ளி விபரங்கள். இந்தப் போட்டியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஒரே வழி, பெருவாரியானவர்களுக்கும் பிடித்தமான கன்டென்ட்டை கொடுப்பது தான்.
அப்படியான கன்டென்ட்டை கொடுத்து சேனல் துவங்கிய ஒரே ஆண்டில், 6 லட்சம் சப்ஸ்கிரைபர்களை சம்பாதித்திருக்கிறேன்.
'ஹாய் பிரெண்ட்ஸ்... இன்னிக்கு மீன் வாங்கியாச்சி... என்ன மீன் வாங்கியிருக்குன்னு பாத்திருவோமா?' என்று ஆரம்பிக்கும் வீடியோக்களில், முகம் காட்டாமல் கைகளை மட்டுமே காண்பித்து ஹிட் அடித்திருக்கிறார். 365 நாளும் வீடியோ போடணும்.
அதுக்கு என்னை சுத்தி என்ன இருக்கோ, அதைத் தான் கன்டென்ட்டாக மாத்தணும்னு நினைச்சேன். எங்கள் பகுதியில் வாரத்தில், ஆறு நாட்களும் சமையலுக்கு மீன் வாங்குவோம்.
மீன் வாங்குறது, வெட்டுறது, குழம்பு வைக்கிறதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதையே கன்டென்ட்டாக மாத்திட்டேன். எனக்கு பெருசாக எடிட் பண்ணவும் தெரியாது.
அதனால், சின்ன சின்ன காட்சிகளாக ஷூட் பண்ணிட்டு எல்லாத்தையும் ஒன்றாக சேர்த்து, 'வாய்ஸ் ஓவர்'ல பேசிருவேன்.
சேனல் துவங்கியபோது, 90 சதவீதம் நல்ல கமென்ட்ஸ் வந்தாலும், 10 சதவீதம் மோசமான கமென்ட்ஸ் வரும்.
முகம் காட்டாம வீடியோ போடும்போதே என் கை, குரல்னு எல்லாத்தையும் கமென்ட் செய்வர்.
அது மாதிரியான ஆட்களை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல் தான் முகம் காட்ட விரும்பவில்லை.
நான் பேசும் தமிழ் நல்லா இல்ல, என் குரல் நல்லா இல்லன்ற எண்ணம் எனக்கு உண்டு. ஆனால், அதுக்கெல்லாம் தான் இப்ப சேனலில், 'பேன்ஸ்' இருக்காங்க. 10,000 சப்ஸ்கிரைபர்ஸ் வந்த பின்தான், என் குரல் மேல் எனக்கே ஒரு நம்பிக்கை வந்துச்சு.
சேனலில் நான் பயன்படுத்துற மண் பாத்திரம், பொருட்கள் எல்லாம் பார்த்துட்டு எங்களுக்கும் வேணும்னு நிறைய பேர் கேட்குறாங்க.
அதை வாங்கிக் குடுக்குற பிசினஸ் பண்ணலாம்னு ஒரு ஐடியா இருக்கு. கடன் வாங்காமல் ஒரு மாசத்தைக்கூட நகர்த்த முடியாமல் இருந்தோம். இன்னிக்கு யார்கிட்டயும் போய் கடன் கேட்குற நிலைமைக்கு கடவுள் எங்களை வைக்கலை.

