அரசு பள்ளிகளுக்கு 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' திட்டம் வேண்டும்!
அரசு பள்ளிகளுக்கு 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' திட்டம் வேண்டும்!
PUBLISHED ON : அக் 22, 2026 01:12 AM

பெண்கள், குழந்தைகள் மற்றும் மாணவர்கள் என பல தரப்பினருக்கும், சமூக வலைதளங்கள் வாயிலாக ஆங்கிலம் கற்று தரும், சேலம் மாவட்டம், ஏற்காட்டைச் சேர்ந்த, 55 வயதாகும் அரசு பள்ளி ஆசிரியை இவாஞ்சலின் பிரிசில்லா:
ஏற்காட்டில் தான் பிறந்து வளர்ந்தேன். தமிழ் வழியில் படித்தேன் என்பதால், ஆங்கிலம் அவ்வளவாக வராது.
அப்பா, என் ஆங்கிலத்தையும், கற்பிக்கும் திறனையும் மேம்படுத்துவதற்காக, ஆங்கிலோ - இந்தியன் பள்ளியில் வேலைக்குச் சேர்த்து விட்டார். அங்கு தான், ஆங்கில உச்சரிப்பு முதல் அனைத்தையும் கற்றுக் கொண்டேன்.
கடந்த 2001ல், ஏற்காடு அரசு பள்ளியில் வேலை கிடைத்தது. 2024ல், ஏற்காடு நாகலுார் மேல்நிலைப் பள்ளிக்கு மாறுதலாகி வந்தேன். இங்கு சரியான பஸ் வசதி கிடையாது. இங்குள்ள மாணவர்கள் பள்ளிக்கு வருவதே மிகவும் சிரமம். அந்த மாணவர்களுக்கு ஆங்கிலம் என்பதே எட்டாக்கனி தான்.
முதன்முதலாக தேசிய கீதத்தை தமிழில் பாடி, அந்த காணொளியை
முகநுாலில் பதிவிட்டேன். அது, பல லட்சம் பார்வையாளர்களைக் கடந்தது.
அப்போது தான், ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பதை காணொளி எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டால், பல அரசு பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் என்று முடிவெடுத்து, 'இங்கிலீஷ் பேசலாம் வாங்க' என்ற தலைப்பில், 'யூ டியூப் சேனல்' துவங்கி, காணொளிகள் எடுத்து பதிவிட
ஆரம்பித்தேன்.
முதலில் ஆங்கில பாடல்களை தமிழில் பாடி, மாணவர்களும் கூட சேர்ந்து பாடும் மாதிரியான காணொளிகளைப் பதிவிட்டேன்; நல்ல வரவேற்பு கிடைக்கவே, வகுப்பறையில் நடத்தும் பாடங்களையும் காணொளிகள் எடுத்து வெளியிட்டேன்.
நானும், என் பள்ளிக் குழந்தைகளும் ஆங்கிலத்தில் கலந்துரையாடுவது மாதிரியான காணொளிகள், தமிழ் வாக்கியங்களை ஆங்கிலத்தில் எப்படி சொல்ல வேண்டும், இலக்கண வார்த்தைகளை எங்கெல்லாம் பயன்படுத்த வேண்டும், தினமும் ஐந்து புது வார்த்தைகள், நடனமாடி பாடல் கற்றுக் கொள்வது மாதிரியான பல காணொளிகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறேன்.
என் காணொளிகளைப் பார்த்த வெளிநாட்டினர் பலரும், 'உங்க பள்ளிக்கு உதவி செய்ய விரும்புகிறோம்' என்று தகவல் அனுப்புவர்; பலரும் உதவி
செய்திருக்கின்றனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு, அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. அதேபோன்று, 'ஸ்போக்கன் இங்கிலீஷ்'க்கும் ஒரு திட்டம் கொண்டு வர வேண்டும். மலைக்கிராம குழந்தைகளின் படிப்பை, அவர்களின் பெற்றோரால் சரியாக கவனிக்க முடியாது.
அதனால், இந்த பகுதி குழந்தைகளுக்கு தனி பயிற்சி மையம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.
