/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
புலம்பெயர் தமிழனாக எனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்!
/
புலம்பெயர் தமிழனாக எனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்!
புலம்பெயர் தமிழனாக எனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்!
புலம்பெயர் தமிழனாக எனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்!
PUBLISHED ON : செப் 24, 2024 12:00 AM

ஒலிம்பிக் தீபத்தை சுமக்கும் வாய்ப்பு கிடைத்த, பிரான்சில் வசிக்கும், புலம் பெயர் தமிழரான தர்ஷன் செல்வராஜா:
சொந்த ஊர், இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருக்கும் தெல்லிப்பளை. பள்ளிப்படிப்பு முழுதும் வவுனியாவில் தான் படித்தேன். அதன்பின் கல்லுாரியில் சேர இயலவில்லை. அந்த சமயத்தில் அப்பாவின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மிகவும் கஷ்டப்பட்டேன். என் உறவினர் பிரான்சில் இருந்தார். அங்கு சென்று வேலை தேடலாம் என்ற யோசனையில் பிரான்ஸ் பயணப்பட்டேன்.
பல்வேறு சிரமங்களுக்கு பின், ஒரு பேக்கரியில் பணிக்கு சேர்ந்தேன். அங்கு ஆர்வத்துடன் பணிபுரிந்தேன். அந்த ஆர்வம் தான் என்னை படிப்படியாக பேக்கரியின் தலைமை மேற்பார்வையாளர் பதவிக்கு கொண்டு போனது.
அதிலும் எட்டு ஆண்டு அனுபவங்கள், பிரான்சின் பாரம்பரிய உணவான பாண் ரொட்டி தயாரிப்பதில் ஸ்பெஷலிஸ்ட் என்று சொல்லும் அளவுக்கு திறமையை கொடுத்தது.
அதன்பின் நான் வேலை செய்த பேக்கரியை குத்தகைக்கு எடுத்து, அடுத்த நிலைக்கு சென்றேன்.
நீண்ட வடிவில், பிரட் போல் இருக்கும் பிரான்ஸ் நாட்டின் பாண் ரொட்டிக்கு தனி வரலாறு உண்டு. அது வெறும் உணவாக இல்லாமல் அவர்கள் வாழ்வியலின் உயிராக இருக்கிறது.
ஏனெனில், பிரெஞ்சு புரட்சியில் கொடுங்கோல் மன்னராட்சியை எதிர்த்த களவீரர்களின் பசியாற்றிய உணவு என்பது அதன் சிறப்பு.
இப்போதும், பிரான்ஸ் நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் அதற்கென பிரத்யேக போட்டி நடத்தி, அதில் சிறப்பாக செயல்படும் சமையல் கலைஞர்களுக்கு பரிசு வழங்குவது வழக்கம்.
அதிலும் தலைநகர் பாரிசில் நடக்கும் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு, பிரான்ஸ் அதிபருக்கே பாண் ரொட்டி தயாரித்துக் கொடுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். 2023ல் போட்டியில் பங்கேற்றேன். அதில், என் ரொட்டி தான் முதல் பரிசை வென்றது.
அந்த வெற்றி, ஒரு புது உத்வேகத்தை கொடுத்தது. அந்த வெற்றியின் வாயிலாக, எனக்கான பேக்கரியை துவங்கினேன். பின், தினமும் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றோம்.
ஜனாதிபதி சாப்பிடும் அதே பாண் ரொட்டியை நாங்களும் உண்ணுகிறோம் என்று எங்கள் வாடிக்கையாளர்கள் மிகவும் சந்தோஷப்பட்டனர்.
இப்படியாக ஒருநாள், பிரான்ஸ் நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் எங்கள் ரொட்டியை உண்ண, ஒலிம்பிக் தீபம் ஏந்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அந்த தீபத்தை ஏந்தி நான் ஓடிய போது பெரிய பெரிய அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் வணக்கம் வைத்தனர். அது, ஒரு புலம்பெயர் தமிழனாக எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.

