PUBLISHED ON : ஜன 06, 2025 12:00 AM

ஒரு பட்டதாரியாக இருந்தும் கூத்துக்கலை மீது இருந்த ஆர்வத்தால், கடந்த, 10 ஆண்டுகளாக, 2,000க்கும் மேற்பட்ட மேடைகள் ஏறியுள்ள, சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சேர்ந்த செந்தாமரை: எங்கள் குடும்பம் கூத்துக்கட்டும் குடும்பம் இல்லை. நான் ஒரு பட்டதாரியாக இருந்தும், இந்த கலை தான் என் வாழ்க்கை. எங்கள் வீட்டில் நான் இளையவள். எனக்கு இரண்டு அக்காக்கள் உள்ளனர்.
சிறு வயதில் அம்மா என்னை பல தெருக்கூத்து நிகழ்ச்சிகளுக்கு அழைத்து செல்வார். அப்போதே என் மனதில் இந்த கலை ஆழமாக ஒட்டிக் கொண்டது. 10ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து விட்டு, பெற்றோர்களிடம் சென்று தெருக்கூத்து ஆட அனுமதி கேட்டேன்.
அப்போது உறவினர்கள் எல்லாம், 'ஒரு பெண்ணை எப்படி ராத்திரி நேரத்தில் ஆண்களோடு தெருக்கூத்து ஆட விடுவது...' என்று முட்டுக்கட்டை போட்டனர்.
நானும் என் பிடிவாதத்தை விடவே இல்லை. என்னோட உறுதியைப் பார்த்த எங்கப்பா, 'உறவுகளை விட என் மகள் சந்தோஷம் தான் முக்கியம்' என்று என் பக்கம் பேசிய போது, கண் கலங்கி விட்டேன்.
காலையில் பள்ளிக்கூடம் போயிட்டு, இரவில் தெருக்கூத்து ஆடப் போய் விடுவேன். துாக்கமில்லாமல் தலைவலிக்கிற நாளில் தைலம் தேய்ச்சுக்கிட்டு வகுப்பில் உட்காருவேன்.
பள்ளி இறுதி வகுப்பு வரை நான் தெருக்கூத்து ஆடுவது யாருக்கும் தெரியாது. கல்லுாரியில் சேர்ந்தவுடன் அனைவரிடமும், 'நான் ஒரு தெருக்கூத்து கலைஞர்' என்று பெருமிதத்துடன் கூறினேன். படிப்பை முடித்து முதல் தலைமுறை பட்டதாரி ஆனேன்.
இந்த, 10 ஆண்டுகளில், 2,000க்கும் மேற்பட்ட மேடைகளில், பல்வேறு கூத்துகளை ஆடும்போது கிடைத்த கைத்தட்டல்கள், எனக்கு இன்னும் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை துாண்டின.
எந்த வேலையாக இருந்தாலும் சில கஷ்டங்களை அனுபவித்து தான் ஆக வேண்டும். அது இங்கும் உண்டு. தெருக்கூத்து ஆடப்போகும் போது கழிப்பறை மற்றும் ஆடை மாற்றும் அறை கூட சரியாக இருக்காது.
இதனால், நாங்கள் அனைவரும் மாதவிடாய் காலத்தில் பெரும் சிக்கல்களை சந்திப்போம். இந்த கலை மீது எனக்கு இருக்கும் பக்தியால் தான் எதையும் பொருட்படுத்தாமல் இன்னும் ஓடி கொண்டிருக்கிறேன்.
எனக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது. அவரும் ஒரு தெருக்கூத்து கலைஞர் தான். திருமணத்திற்கு பின் என் மாமனார் மற்றும் மாமியார், நான் தெருக்கூத்து ஆடுவதை அனுமதிக்கவில்லை.
இருப்பினும், என்னால் ஆடாமல் இருக்க முடியாது என்று என் கணவர் புரிந்துகொண்டு, அவருடைய, 'செட்'டுக்கே என்னை கூட்டிச் செல்வார். தெருக்கூத்து கலைஞர்களுக்கு அரசு என்ன தான் செய்தாலும், அது அவர்களுக்கு சரியாக சென்று சேருவதில்லை!