/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
76 வயதிலும் மகிழ்வுடன் உழைக்கிறேன்!
/
76 வயதிலும் மகிழ்வுடன் உழைக்கிறேன்!
PUBLISHED ON : செப் 23, 2024 12:00 AM

மைசூரில் வசிக்கும் காமாட்சி: பூர்வீகம் தஞ்சையாக இருந்தாலும் அப்பாவின் வேலை காரணமாக இந்தியா முழுக்க பல ஊர்களில் வசித்தோம். வாசிப்பு, இலக்கியம் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். வீட்டில் எப்போதும் தமிழ் பத்திரிகைகள் இருக்கும்.
புதுடில்லியில் நாங்கள் வசித்த போது, என் 14வது வயதில், ஒரு ரஷ்ய நாவலின் மொழிபெயர்ப்பை அப்பா வாங்கி வந்தார். அதை ஆங்கிலத்தில் படிக்கவே, 'இந்தளவுக்கு சுவாரசியமாக இருக்கிறதே... அதன் மூல மொழியான, ரஷ்ய மொழியிலேயே படித்தால் எப்படி இருக்கும்' என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது.
பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, பல்கலைக்கழகத்தில் இளங்கலை இயற்பியல் சேர்ந்த போது, அங்கேயே பகுதி நேரமாக செயல்பட்ட ரஷ்ய மொழி வகுப்பில் சேர்ந்தேன்.
மேலும், 19 வயதில், ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவுக்கு சென்று முதுகலை படித்தேன். பின், அமெரிக்கா சென்று, ரஷ்ய மொழியில், பிஎச்.டி., முடித்தேன். இந்தியா திரும்பி ஹைதராபாத், சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவனத்தில் பணிபுரிந்தேன்.
அந்த இடைப்பட்ட காலத்தில் திருமணம் முடிந்தது. கணவர் தன் பணிக்காக நைஜீரியா நாட்டுக்கு பயணமானார். பின், மகன்கள் படித்த கொடைக்கானல் கான்வென்டிலேயே எனக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது.
அதை தொடர்ந்து மீண்டும் பணிக்காக கணவர் மஸ்கட் சென்றார். அங்கு, ஒரு பள்ளி ஆசிரியர் பணி என்று ஓடிக்கொண்டே இருந்த வேகத்துக்கு, 60 வயதில், 'பிரேக்' போட்டேன். உடல்நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்க எண்ணி, கணவரும், நானும் இந்தியாவுக்கு திரும்பி, மைசூரில் வசிக்க ஆரம்பித்தோம்.
உடலுக்கு தான் ஓய்வு; மனதிற்கு இல்லையே... எனவே, தமிழ் இலக்கியங்களை படிக்க ஆரம்பித்தேன். அப்போது தான், 'சுளுந்தீ' நாவல் என் கைகளுக்கு கிடைத்தது.
என் கைகளில், சுளுந்தீயை எடுத்த பின், என்னால் அதை கீழே வைக்கவே முடியாத அளவுக்கு அதில் மூழ்கி போனேன். அதன் ஆசிரியரான, ரா.முத்து நாகுவை தொடர்பு கொண்டு பேசினேன்.
தன் ஒவ்வொரு வரிக்கும் முத்துநாகுவிடம் ஆதாரம் இருந்தும், அந்த வரலாற்று உண்மைகளின் தொகுப்புக்காக அவர் பல துாரம், பல காலம் பயணப்பட்டது ஆச்சரியத்தையும், மரியாதையையும் ஏற்படுத்தியது.
முத்துநாகுவிடம் நான், 'இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யுங்கள். மொழி கடந்து இது பரவலாக சென்றடைய வேண்டும்' என்று கூறினேன். ஆனால், அவர் என்னை மொழிபெயர்க்க கூறினார். ஒரு தயக்கம் இருந்தாலும், அவர் உறுதியாக இருந்ததால், அதற்கான வேலைகளை ஆரம்பித்தேன்.
இப்போது நுால் முடிந்து, வெளியீட்டுக்கு தயார். இப்போது எனக்கு வயது, 76. இந்த வயதிலும் என் இலக்கிய ஆர்வம், முயற்சிக்கு எல்லாம் துணையாக நிற்கிறது என் குடும்பம்; தொடர்ந்து பயணிக்கிறேன்.
இங்கு பெரும்பாலான பெண்களின் சுய முன்னேற்றப் போராட்டங்களில் பாதியை, அனுமதி, அங்கீகாரம் கேட்டு வீட்டுக்குள் நடத்த வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு குடும்பத்தின் உறுதுணை கிடைத்து விட்டால், அவர்களின் சுமை குறைந்து பயணத்தின் வேகம் கூடிவிடும்!