/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
விமர்சனங்களால் துவண்டபோது ஆறுதலாக இருந்தார்!
/
விமர்சனங்களால் துவண்டபோது ஆறுதலாக இருந்தார்!
PUBLISHED ON : ஜன 03, 2025 12:00 AM

மலையாள சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்களான, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த, கிறிஸ் வேணுகோபால்-- திவ்யா ஸ்ரீதர் தம்பதி:
திவ்யா ஸ்ரீதர்: நான் கண்ணுாரைச் சேர்ந்தவள். டிகிரி முடிக்கும் முன்னரே, ஏற்கனவே திருமணமான ஒருவரை, என் 18வது வயதில் காதல் திருமணம் செய்து கொண்டேன்.
திருமணத்திற்கு பின், அவர் என்னை படிக்க அனுமதிக்கவில்லை. நடிக்க வாய்ப்பு வந்தும், நான் நடித்த ஆல்பங்கள், குறும்படங்கள் என எதுவும் அவருக்கு பிடிக்கவில்லை.
இதனால், 14 ஆண்டுகளுக்கு பின், இருவரும் பிரிந்தோம். நான் நடிப்பை விடவில்லை. 24 'டிவி' சீரியல்களில் நடித்துள்ளேன். கதாநாயகியாக நடித்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
தனியாக இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நான், ஒரு சீரியல் ஷூட்டிங்கில் தான் கிறிஸ் வேணுகோபாலை சந்தித்தேன்.
ஆண் துணையில்லாமல் வாழ்ந்ததால், பல பிரச்னைகளை சந்திக்க நேரிட்டது. அதனால், குழந்தைகளுக்கான எதிர்கால பாதுகாப்பை முன்னிறுத்தி, இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.
அவருக்கு 49 வயது, எனக்கு 40 வயது. இன்றைக்குமே 9 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்வோர் இருக்கத்தான் செய்கின்றனர்.
சமூக வலைதளங்களில், பல மொழிகளில் எங்களை பற்றி மோசமாக எழுதினர். விமர்சனங்களால் நான் துவண்டபோது, வேணுகோபால் தான் ஆறுதலாக இருந்தார்.
கிறிஸ் வேணுகோபால்: என் முதல் மனைவி, 'உங்கள் அம்மா, அப்பாவிடம் பேசக்கூடாது; சமூக வலைதளத்தில் எழுதக்கூடாது' போன்ற பல கண்டிஷன்கள் போட்டதால், 2019ல் விவாகரத்து பெற்றேன்.
ஆனால், எனக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட என் தங்கை சவுமியா தான், திவ்யாவிடம் சென்று பேசினாள்.
பிறகு, திவ்யாவின் மகன், மகள் மற்றும் பெற்றோர் சம்மதத்துடன் குருவாயூர் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம்.
என் பூர்வீகம் தஞ்சாவூர். எங்கள் முன்னோர் பாலக்காடில் செட்டில் ஆகிவிட்டனர். நான் ஒன்பதாம் வகுப்பு படித்தபோதே இளநரை வர ஆரம்பித்தது.
என் அப்பாவுக்கும், எனக்கும் ஒரே சமயத்தில் முடி வெள்ளையானது. சிறிது காலம் கலர் பண்ணினேன்.
பின், என்னை நான் அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டேன். நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம்.