தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ஆரோக்கியமான உணவுடன் வருமானமும் கிடைக்கிறது!

ஆரோக்கியமான உணவுடன் வருமானமும் கிடைக்கிறது!

ஆரோக்கியமான உணவுடன் வருமானமும் கிடைக்கிறது!


PUBLISHED ON : பிப் 11, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 11, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இயற்கை விவசாயம் செய்து வரும், தஞ்சாவூர் மாவட்டம், பூதலுார் பகுதியில் வசித்து வரும் உதயகுமார்:

கடந்த 2015ல், அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், இயற்கை விவசாயம் செய்யணும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே, என் குடும்பத்தோடு, சொந்த ஊரான பூதலுாருக்கு குடியேறினேன்.

அதனால், கிணறு வசதியோடு இருந்த இந்த 2 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி, இயற்கை விவசாயம் செய்ய துவங்கினேன்.

கடந்த சம்பா பட்டத்தில், 1.75 ஏக்கரில் துாயமல்லி சாகுபடி செய்தது வாயிலாக, நெல் 60 கிலோ மகசூல் கிடைத்தது. அதில், 2 மூட்டையை, விதை நெல்லாக விற்பனை செய்தேன்.

பாரம்பரிய நெல் ரகங்கள் பரவலாக்கம் அடையணும் என்பது தான் என் நோக்கம். அதனால் 1 கிலோ, 40 ரூபாய்னு விற்பனை செய்தேன். 120 கிலோ விதை நெல் விற்பனை வாயிலாக, 4,800 ரூபாய் வருமானம் கிடைத்தது. 40 மூட்டை நெல்லை அரிசியாக மாற்றினேன்.

அந்த வகையில், 2,000 கிலோ நெல் அரைத்தது வாயிலாக, 1,400 கிலோ அரிசி கிடைத்தது. 700 கிலோ அரிசியை குடும்பத் தேவைக்கு வச்சுக்கிட்டேன்.

மீதி, 700 கிலோ அரிசியை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் விற்பனை செய்தேன். 1 கிலோ, 70 ரூபாய்னு விற்பனை செய்தது வாயிலாக, 49,000 ரூபாய் வருமானம் கிடைத்தது.

குடும்ப தேவைக்கு வச்சுக்கிட்ட, 700 கிலோ அரிசியோட மதிப்பு, 49,000 ரூபாய். அரிசி வாயிலாக மொத்தம், 98,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

அரிசி அரைக்கும்போது, 50 கிலோ குருணை கிடைக்கிறது. அதை சொந்த தேவைக்கு வைத்து கொண்டோம்; அதன் மதிப்பு, 1,750 ரூபாய்.

நான் அரிசி அரைக்கிற ஆலையில், தவிடு கொடுக்க மாட்டாங்க. அதுக்கு பதிலாக, அரவை கூலியை குறைச்சுக்குவாங்க. 1.75 ஏக்கர் நெல் சாகுபடி வாயிலாக கிடைக்குற வைக்கோலின் மதிப்பு, 6,000 ரூபாய்.

அந்த வைக்கோலை என்னோட மாடுகளுக்கு பயன்படுத்திக்கிறேன். ஆக, 1.75 ஏக்கரில் துாயமல்லி நெல் சாகுபடி வாயிலாக, 1 லட்சத்து, 10 ஆயிரத்து, 550 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

இதில் எல்லா செலவு களும் போக, 65,000 ரூபாய் லாபமாக கிடைக்கும்.

அரசு போக்குவரத்து கழகத்தில் பல ஆண்டுகள் வேலை பார்த்த நான், ஓய்வுக்கு பிறகும் நல்லா உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கிட்டு இருக்கிறேன்னா, அதுக்கு இயற்கை விவசாயம் தான் முக்கிய காரணம்.

இதன் வாயிலாக, ஆரோக்கியமான உணவு கிடைப்பதுடன், கணிசமான வருமானமும் கிடைக்கிறது. நிம்மதியான வாழ்க்கைக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்.தொடர்புக்கு:

97888 63277

*********************

சிறு முதலீட்டில் இந்த தொழிலை துவங்கலாம்!


சேலம், குகை பகுதியில், 'ஆனந்தா கேட்டரிங்ஸ்' நிறுவனத்தை நடத்தி வரும் கிருஷ்ணவேணி:சேலம் மாநகரில், பரபரப்புக்கு பஞ்சமில்லாத குகை பகுதியில், நெசவு மற்றும் விசைத்தறி கூடங்கள், வெள்ளி பட்டறைகள், ஏற்றுமதி நிறுவனங்கள் நிறைந்துள்ளன. இன்று இங்கு, திரும்பிய பக்கமெல்லாம் வீட்டு வாசல்களிலும், பல்வேறு கடைகளிலும் குழம்பு வியாபாரம் ஜோராக நடக்கிறது.கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், வீட்டில் இருந்தபடியே குழம்பு வியாபாரத்தை துவங்கி, இந்த தொழிலுக்கு விதை போட்டது நான் தான். ஒரு நாள் விசேஷத்துக்கு போயிட்டு, மதியம் வீட்டுக்கு வர லேட்டாகிடுச்சு; பக்கத்தில் எந்த ஹோட்டலிலும் சாப்பாடு இல்லை.

'இப்போது சமைச்சு எத்தனை மணிக்கு சாப்பிடுறது... குழம்பு ஏதாச்சும் கிடைச்சாலாவது வீட்டிலேயே சாதம் வெச்சுக்கலாமே' என நானும், கணவரும் புலம்பினோம்.அப்போது தான், குழம்பு வியாபாரம் செய்து பார்க்கலாம்னு நினைத்தேன். மறுநாள் சிறிது காய்கறிகள் வாங்கி, சாம்பார், ரசம் செய்து விற்க துவங்கினேன்.

எங்கள் பகுதியில் கருப்பு மற்றும் வெள்ளை அவரையில் செய்யும் கூட்டுக்குழம்பு பிரபலம். இதை, பெரும்பாலும் விசேஷ வீடுகளில் தான் செய்வர்.இந்தக் கூட்டுக்குழம்புடன், புளிக்குழம்பு, வத்தக்குழம்பு, காளான் குழம்பு, துவையல், பலவித பொரியலையும் செய்து விற்க துவங்கினேன். மெதுவாக வியாபாரம் சூடு பிடிக்க துவங்கியது.

பின், வயசானவங்க, சமைக்க வாய்ப்பில்லாதவங்களுக்கு சாப்பாடும் தயாரித்தோம். குழம்பு தவிர, காலையும், மாலையும் டிபன் வகைகளும், மதியத்தில் பலவித சாப்பாடும் விற்பனை செய்கிறோம். இது தான், ஆனந்தா கேட்டரிங்ஸ் என, வளர்ந்து நிற்கிறது.போட்டிகள் அதிகமானாலும், தொடர் வாடிக்கையாளர்கள் எங்களிடம் தான் வருவர். அதனால், எங்களுக்கான வியாபாரம் சிக்கலின்றி நடக்கிறது.அதிகமான லாபம் எதிர்பார்க்காமல், இந்தத் தொழிலை வீட்டில் இருந்தபடியே பண்றவங்க தான் அதிகம். அதனால், உப்பு, காரம், எண்ணெய் எல்லாமே அளவா தான் பயன்படுத்துவோம்.

அக்கம் பக்கத்தினருக்கு மட்டும் சமைத்து கொடுப்பது என்றால், சிறு முதலீட்டிலேயே இந்த தொழிலை துவங்கலாம். இதுவே, ஒரு நாளைக்கு 100 பேர் எனில், குழம்பு, பொரியல், சாப்பாடுன்னு விற்பனை செய்வதாக இருந்தால், முதலீட்டுக்கு, 5,000 ரூபாய் தேவைப்படும்.

விற்பனையில் தொய்வில்லாமல் பார்த்துக்கிட்டால், வெளி வேலைக்கு போறதை விடவும், இந்த தொழிலில் நிறைவாக சம்பாதிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us