/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கணவரும், நானும் மண் மேளம் தயாரிக்கிறோம்!
/
கணவரும், நானும் மண் மேளம் தயாரிக்கிறோம்!
PUBLISHED ON : பிப் 17, 2025 12:00 AM

தர்மபுரி மாவட்டம், நெருப்பாண்டக்குப்பத்தை சேர்ந்த மண் மேளக் கலைஞர் ஓங்காளி: எங்கள் கிராமத்தில், 100 குடும்பங்கள் இருக்கின்றன. கரகாட்டம், மயிலாட்டம் என, ஏதோ ஒரு கலையை அறிந்த கலைஞர்கள் ஒவ்வொரு வீட்டிலுமே இருக்கின்றனர்.
எங்கள் குடும்பம், நான்கு தலைமுறைகளாக மண் மேளம் வாசிப்பவர்கள். எங்கள் பாட்டன் காலத்தில் செய்த இந்த மண் மேளத்தை பாதுகாத்து வைத்திருக்கிறேன்.
தாத்தாவும், அப்பாவும் மண் மேளம் வாசிப்பதை பார்த்து நான் கற்றுக்கொண்டேன். அதன்பின் என் மனைவியும் இதை வாசிக்க கற்றுக் கொண்டார்.
மண் மேள கருவியின் உடம்பு பகுதி, பானை போல இருக்கும். செம்மண்ணையும், களி மண்ணையும் துாளாக்கி, சலித்து, கட்டி இல்லாமல் எடுத்து, தண்ணீர் ஊற்றி, மிதித்து, பிசைந்து நான்கு நாட்களுக்கு புளிக்க வைப்பர்.
அதன் பின், அவர்கள் குல தெய்வத்தை வணங்கி, பாதி பாதியாக இரண்டு பானை உருவம் செய்து ஒற்றாக கோத்து கட்டி, காய வைப்பர்.
நல்ல பதத்துக்கு வந்ததும் மண் மேளம் தயாரிக்கிறவங்ககிட்ட கொடுப்பர். அந்த உடல் பகுதியின் இரண்டு பக்கவாட்டு பகுதியில், மாட்டுத்தோலை கட்ட வேண்டும். மண் மேளத்தை பொறுத்தவரை இரண்டு பக்கமும் வெவ்வேறு அளவில் இருக்கும்.
ஓங்காளி மனைவி ஜெயசுதா: மண் மேளக் கலையில் பெண்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. நம் கலையை, நாமே கற்றுக்கொள்ளவில்லை எனில், யார் கற்றுக் கொள்வர் என நினைத்து, அதை கற்று, மேடை நிகழ்ச்சிகள் செய்கிறேன்.
முதலில் மாட்டு தோலை வாங்கி வந்து, அதை இழுத்துக்கட்டி, சுருக்கம் இல்லாமல் ஆணி அடித்து வைத்து விடுவோம். வெயிலில் நன்கு காய்ந்ததும், கூர்மையான கத்தியை வைத்து முடிகளை சுரண்டி எடுத்து, தண்ணீரில், 18 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
அதன்பின், மேளத்தின் அளவுக்கு ஏற்ற மாதிரி தோலை வட்டமாக வெட்டுவோம். புளியங்கொட்டையை உடைத்து, ஊறவைத்து, அதை ஆட்டுக் கல்லில் கூழாக அரைத்து, பசை பதத்துக்கு காய்ச்ச வேண்டும்.
இந்த பசையை மாட்டுத்தோலில் தடவி, மண் உடலுடன் பொருத்தி, தோல் வைத்து இறுக்கி கட்டி, நிழலில் மூன்று நாள், வெயிலில் மூன்று நாட்கள் காய வைத்து எடுக்க வேண்டும். இப்படி தோலும், மண்ணும் மண் மேளமாக மாற கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகும். ஒரு மேளம் செய்து கொடுத்தால், 500 ரூபாய் கிடைக்கும்.
ஒரு ஆட்டத்துக்கு, 500 - 800 ரூபாய் வரை கிடைக்கும். ஆறு மாதம் தொழில் இருக்கும். ஆறு மாதம் எதுவுமே இல்லாமல் எங்கள் கருவிகளுடன், நாங்களும் மூலையில் இருப்போம்.
மண் மேளம் அழிவின் விளிம்பிற்கு போய் விட்டது. இதை கற்றுக் கொள்ள தயாராக இருப்போருக்கு சொல்லி கொடுக்க தயாராக இருக்கிறோம். நம்முடன் சேர்ந்து, நம் கலைகளும், பாரம்பரியமும் வளரட்டுமே!
தொடர்புக்கு
95975 72284

