/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
முதியோரை தேடி சென்று இலவச சிகிச்சை அளிக்கிறேன்!
/
முதியோரை தேடி சென்று இலவச சிகிச்சை அளிக்கிறேன்!
PUBLISHED ON : பிப் 10, 2024 12:00 AM

சென்னை, திருவான்மியூரில், 27 ஆண்டுகளாக இயங்கி வரும், சாரா டென்டல் கிளினிக்கை நடத்தி வரும் மருத்துவர் தயாஸ்ரீ:
பூர்வீகம், தஞ்சை மாவட்டத்தில் சூரக்கோட்டைக்கு அருகில் உள்ள காசவலநாடு புதுார். விவசாயக் குடும்பம். சிறுவயது முதல் விளையாட்டில் ஆர்வம் அதிகம்.
தடகள விளையாட்டு களான 100, 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் இவற்றில் மாநில அளவில் பங்கு பெற்று பரிசுகள் வென்றிருக்கிறேன்.
தடகள வீராங்கனையாக இருந்த என்னை கூடைப்பந்து வீராங்கனையாக்கினார், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர். விளையாட்டில் முழு கவனம் செலுத்திய என்னை மருத்துவராக்கும் கனவு அம்மாவுக்கு இருந்தது.
நானும் மேல்நிலைப் பள்ளி தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தாலும், மருத்துவத்திற்கான நுழைவுத் தேர்வில் தொடுகோட்டுக்கு அருகே வந்தும் மருத்துவம் கிடைக்கவில்லை.
அம்மாவின் அறிவுறுத்தலின்படி, மீண்டும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை எழுதினேன்.
எனக்கு விளையாட்டு ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தது; 'விவசாய குடும்பத்தில் ஒரு மருத்துவர்' என்ற அம்மாவின் கனவு நிறைவேறியது. பல் மருத்துவராகத் தேறினேன்.
ஆண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில், மணமுறிவுக்குப் பின் திருவான்மியூரில் தனியாக பல் மருத்துவமனையை துவக்கினேன்.
என் மருத்துவமனைக்கு வரும் முதியோருக்கு மட்டுமல்லாமல், படுத்த படுக்கையாக அல்லலுற்ற முதியோருக்கு அவர்களது இல்லம் தேடிச்சென்று இலவசமாக சிகிச்சை அளிக்கிறேன்.
ஓய்வு நேரங்களில், பாலவாக்கத்தில் இருக்கும், 'காக்கும் கரங்கள்' என்ற ஆதரவற்ற சிறார் இல்லத்துக்கு சென்று அந்தக் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவேன்.
ஒருமுறை, அங்கு, 'இறக்கும் ஆதரவற்றோர்' பிரிவின் துவக்க விழாவுக்கு அழைத்திருந்தனர்; அந்த நிகழ்வே என்னை மிகவும் பாதித்தது.
வயது முதிர்ந்து, ஆதரவற்ற முதியோர், இறக்கும் தருவாயிலாவது சுயமரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று முடிவெடுத்து, அவர்களுடன் அதிக நேரத்தை செலவிட்டேன். அவர்களுக்கான பல் மருத்துவ சிகிச்சையை கட்டணம் பெறாமல் மேற்கொண்டேன்.
மேலும், முதியோர் பராமரிப்பு பற்றி ஆழமான தெளிவு வேண்டி, ஒன்றரை ஆண்டுகள் அது குறித்து பயின்று, முதியோர் பராமரிப்பில் பட்ட மேற்படிப்பை முடித்தேன்.
நான் கற்றதை, என்னிடம் மருத்துவத்துக்காக வரும் முதியோரிடமும் செயல்படுத்தத் துவங்கினேன்.
பள்ளிப் பருவத்தில் மாநில அளவில் தடகள விளையாட்டில் வெற்றி பெற்றிருந்தாலும், உலகளவில் இந்திய வீராங்கனையாக பங்கேற்க வேண்டும் என்பது என் நிறைவேறாத கனவாகவே இருக்கிறது.