/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
சமூக வலைதளத்தால் வெற்றியடைந்தபெண்களில் நானும் ஒருத்தி!
/
சமூக வலைதளத்தால் வெற்றியடைந்தபெண்களில் நானும் ஒருத்தி!
சமூக வலைதளத்தால் வெற்றியடைந்தபெண்களில் நானும் ஒருத்தி!
சமூக வலைதளத்தால் வெற்றியடைந்தபெண்களில் நானும் ஒருத்தி!
PUBLISHED ON : ஆக 24, 2025 12:00 AM

சமூக வலைதளத்தால் வெற்றியடைந்தபெண்களில் நானும் ஒருத்தி!
சமூக வலைதளங்கள் வாயிலாக வருமானம் ஈட்டும், சேலம் மாவட்டம், கோரிமேடு பகுதியைச் சேர்ந்த மெகதாப் பேகம்: பி.ஏ., படித்துள்ளேன். திருமணம் முடிந்து வாழ்க்கையை ஆரம்பித்தபோது, குடும்பத்திற்காக நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.
'சமூக வலைதளங்கள் வாயிலாக எத்தனையோ பேர் வருமானம் ஈட்டும்போது, நம்மால் முடியாதா?' என்று நினைத்து, கடந்தாண்டு 'இன்ஸ்டாகிராம்' என்ற 'ஆப்' வாயிலாக எனக்கென ஒரு பக்கத்தை ஆரம்பித்தேன்.
அதில், தினசரி வேலைகள், சமையல் குறிப்புகள், புதிய இடங்களுக்கு சென்றதை எல்லாம் வீடியோக்கள் எடுத்து பதிவிட ஆரம்பித்தேன்; நல்ல வரவேற்பு கிடைத்தது. என் வீடியோக்களை பார்ப்போர் எண்ணிக்கை அதிகரித்தது.
ஆரம்பத்தில், சிறு தொழில் செய்வோர் என்னிடம் விளம்பரம் கொடுக்க ஆரம்பித்தனர். அவர்களின் நிலையை பொறுத்து, சிலருக்கு இலவச விளம்பரம் கூட செய்து கொடுப்பேன்.
தொடர்ந்து, சேலத்தில் உள்ள பிரபலமான துணி மற்றும் நகைக் கடைகள் விளம்பரத்துக்காக என்னை அணுகின. என் வருமானமும் அதிகரித்தது.
நான் போடும் பல வீடியோக்கள் மில்லியன் பார்வையாளர்களை கடந்தன. இதெல்லாம், வெளிநாடுகள் வரை என் சமூக வலைதளங்கள் பக்கத்தை எடுத்துச் சென்றது.
'எத்தனையோ பிசினசுக்கு நாம் விளம்பரம் செய்து கொடுக்கிறோம். அப்போது, நாமே பிசினஸ் ஆரம்பித்தால் என்ன?' என்று தோன்றியது. பரிசு பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையை ஆரம்பித்தேன். அதற்கான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டேன்; விற்பனை அதிகமானது.
அடுத்து அலங்கார சீர்வரிசை தட்டுகளை செய்து விற்றேன். அதற்கும் நல்ல வரவேற்பு. குறிப்பாக, கொங்கு மண்டலம் மற்றும் காரைக்கால் பகுதியில் இருந்து அதிக ஆர்டர்கள் வரும். சிங்கப்பூர், மலேஷியா நாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் வருகின்றன.
இதனால், பொருளாதார ரீதியாக பலம் கிடைத்திருக்கிறது; கூடவே சமூக அங்கீகாரமும். முன்பெல்லாம் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு அழைக்காத உறவினர்கள் கூட, என்னால் வர முடியும் நேரத்தை கேட்டு, விழாவை துவங்குகின்றனர்.
இன்னும் பல சமூக விழாக்கள், புதிதாக துவங்குகிற கடைகள் என்று என்னை பலரும் சிறப்பு விருந்தினராக அழைக்கின்றனர். விருது விழாக்களில் பங்கேற்று, விருதும் வாங்கியுள்ளேன்.
சமூக வலைதளங்களால் வாழ்க்கையில் வெற்றியடைந்த பெண்களில் நானும் ஒருத்தி. அப்படி வெற்றி அடைகிற பெண்களுக்கு ஆதரவாக இருக்கிற குடும்பங்களில், என் குடும்பமும் ஒன்று. குறித்து வைத்துக் கொள்ளுங்கள்... வெற்றிக்கு அவ்வளவு, 'பவர்' இருக்கிறது!
மூங்கிலில் 64 பொருட்கள்
!
மூங்கில் சார்ந்த கப், ஜக், புட்டுக்குழல், வாட்டர் பாட்டில், மூங்கிலரிசி, மூங்கில் டீத்துாள், சோப்பு, பற்பொடி, ஊறுகாய் உள்ளிட்ட, 64 பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும், மதுரை மாவட்டம், காளவாசலைச் சேர்ந்த
சுதாகர்:
என் அப்பா கட்டட வேலை செய்தார். நாங்கள் ஐந்து பிள்ளைகள். மிகவும் சிரமமான வாழ்க்கை. ஒரு நாள் விறகு லாரியில் ஏறி சென்னைக்கு வந்துவிட்டேன். பீச்சில் சுண்டல் விற்றேன். பட்டம் செய்து விற்றேன். வீடுகளில் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்தேன்.நண்பர் ஒருவர், நகரங்களில் பிறந்தவர்களை, கிராமப்புறங்களுக்கு டூர் அழைத்து செல்லும், 'எக்கோ டூரிசம்' என்ற
நிறுவனத்தை நடத்தி வந்தார்; அதில் சேர்ந்து நிறைய பயணங்கள் செய்தேன். பழங்குடி மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
அவர்களிடம் தான் மூங்கிலால் செய்த பொருட்களை பார்த்தேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை செய்து பார்த்தேன். சிறிது நாட்களில், 'மதுரை எக்கோ டூரிசம்' என்ற நிறுவனத்தை
ஆரம்பித்தேன்.கொரோனா ஊரடங்கு, டூரிசத்தை முழுமையாக முடக்கி போட, அப்போது தான் எனக்கு மூங்கில் நினைவுக்கு வந்தது. வீட்டில் நிறைய மூங்கில் இருந்தது. அதில் சின்ன சின்ன பொருட்கள் செய்ய ஆரம்பித்தேன். கப்,ஜக், தோசை கரண்டிகள் செய்தேன். பக்கத்து வீடுகளில் வாங்க ஆரம்பித்தனர். அப்படியே பலரும் வாங்க ஆரம்பித்தனர்.
மூங்கில் குறித்த தொழில்நுட்பத்தை முழுதும் கற்றுக்கொள்ள, வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணித்து, ஒரு கைவினைஞர் வீட்டில் ஆறு மாதம் தங்கி கற்றுக் கொண்டேன். மூன்று வேளை உணவு கொடுத்தனர்; சம்பளம் இல்லை. அது மிக முக்கியமான அனுபவம்.
அதன்பின், நானே தனியாக செய்ய துவங்கினேன். ஒரு கட்டத்தில் ஆர்டர்கள் நிறைய வரத் துவங்கின. மிஷின் வாங்கி போட்டு செய்தேன். உள்ளூரில் பிசினசுக்கு அதிக வரவேற்பு கிடைக்கவே, ஆர்டர் வரும் அளவிற்கு பொருட்களை செய்ய முடியவில்லை.
காரணம், மூங்கில் பொருட்கள் செய்ய தெரிந்த ஆட்கள் இல்லை. அதற்காக, சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி தந்து, பொருட்களை செய்து வாங்கினோம். 2022ல், 'அரோலா' என, 'பிராண்டிங்' செய்து, ஆன்லைன் விற்பனையை ஆரம்பித்தோம்; உலகெங்கும் இருந்து ஆர்டர்கள் வர ஆரம்பித்தன.
தற்போது இந்தியா முழுக்க சப்ளை செய்கிறோம். திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக பொருட்கள் செய்ய பயிற்சியும் கொடுக்கிறோம். 2.50 லட்சம் ரூபாயில் மூங்கில் வீடு அமைத்து தருகிறோம்; இன்டீரியர் டிசைனும் செய்து தருகிறோம்.தொடர்புக்கு:94867 55447,95001 37477.