/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
மழை நீரை சேகரித்து குடிநீராக பயன்படுத்துறேன்!
/
மழை நீரை சேகரித்து குடிநீராக பயன்படுத்துறேன்!
PUBLISHED ON : மார் 20, 2024 12:00 AM

விவசாயத்தில் அசத்தும், திருச்சியைச் சேர்ந்த பொறியாளர் பாலமுருகன்:
எனக்கு பூர்வீகம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்குடி கிராமம். தாத்தா காலம் வரைக்கும், விவசாயம் தான் எங்களது வாழ்வாதாரம்.
அப்பாவுக்கு திருச்சி, பொன்மலையில் ரயில்வே வேலை கிடைத்ததால், இங்கு வந்தோம். இங்கு தான் பிறந்து வளர்ந்தேன். இன்ஜினியரிங் முடிச்சு, பல வேலைகள் பார்த்தும், மன திருப்தியின்றி விவசாயத்தில் இறங்கினேன்.
என் வீட்டை சுற்றி, மா, தென்னை, எலுமிச்சை, நாட்டு நெல்லி, நாவல், வில்வம் உட்பட பல வகையான மரக்கன்றுகளை நட்டேன்.
இது தவிர, மொட்டை மாடியிலேயும், வீட்டுக்கு முன்புறம் உள்ள போர்டிகோவுலயும் விழக்கூடிய மழைநீரை சேகரித்து, குடிநீராகப் பயன்படுத்துறதுக்கான கட்டமைப்பு வசதிகளையும் செய்தேன்.
வருமுன் காப்போம், உணவே மருந்து, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்... இப்படி இன்னும் ஏராளமான பொன்மொழிகளை நம்மோட முன்னோர் சொல்லிட்டு போயிருக்காங்க.
இதை சாத்தியப்படுத்த மாடித் தோட்டம் மிகவும் அவசியம் என முடிவெடுத்தேன்.
இப்போது என் மாடித் தோட்டத்தில், வல்லாரை, தண்ணீர்விட்டான் கிழங்கு, அக்கரகாரம், சுண்ணாம்புக் கீரை, நெருஞ்சி, பேய்விரட்டி, புளியாரை, மஞ்சள் கரிசலாங்கண்ணி, முடக்கத்தான்.
கள்ளி முளையான், ஓமவல்லி, சிறியாநங்கை, ஆடாதொடை, சித்தரத்தை, திப்பிலி, கற்றாழை, லெமன்கிராஸ், கீழாநெல்லி உள்ளிட்ட, 60 வகையான மூலிகைச் செடிகள் இருக்கு.
அன்றாடம் சமையலுக்குப் பயன்படக் கூடிய, ஆறு வகையான கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், அவரை, பாகல், பீர்க்கன், புடலை உள்ளிட்ட காய்கறிகள்... மணத்தக்காளி கீரை, முளைக்கீரை, பசலி, பொன்னாங்கண்ணி, சுக்கான் கீரை, காசினி உள்ளிட்ட பல வகையான கீரைகளும் இங்கு பயிர் செய்கிறேன்.
கடந்த 2014ல், புதுக்கோட்டை மாவட்டம், குலையாபட்டி கிராமத்தில், 50 சென்ட் நிலம் வாங்கி, 70 வகையான மரங்கள் சாகுபடி செஞ்சிருக்கேன்.
மொத்தம், 200 மரங்கள் இருக்கு. பெரும்பாலான மரங்கள், நல்லா செழிப்பா விளைஞ்சிட்டு இருக்குறதை பார்த்து பலரும் ஆச்சர்யப்படுறாங்க.
இந்தத் தோட்டம் வாயிலாக, ஒரு ஆண்டிற்கு, 1.60 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. மாடித் தோட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மூலிகைகள் விற்பனை வாயிலாக, 12,000 ரூபாய் வருமானம் வருகிறது.
ஆக மொத்தம், ஆண்டிற்கு, 1.72 லட்சம் ரூபாய் வருமானம் பார்க்கிறேன். இதில் செலவுகள் போக, 1.20 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும்.
தொடர்புக்கு:
88700 64344.

