/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
'ரைடிங்' செய்யும்போது இளவரசியாக உணர்கிறேன்!
/
'ரைடிங்' செய்யும்போது இளவரசியாக உணர்கிறேன்!
PUBLISHED ON : ஆக 21, 2025 12:00 AM

'டெலானோ ஹார்ஸ் ரைடிங் அகாடமி' என்ற பெயரில், பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் குதிரையேற்ற பயிற்சி அளித்து வரும், கன்னியாகுமரியைச் சேர்ந்த சுகன்யா: பெற்றோருக்கு நான் ஒரே மகள். பி.ஜி., ஹோமியோபதி மருத்துவம் முடித்ததும், 2009ல் திருமணம் நடந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லுாரியில், பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறேன்.
கணவருக்கு குதிரையேற்றத்தில் ஆர்வம் அதிகம் இருந்ததால், 2011ல் குதிரை ஒன்றை வாங்கி வளர்த்து வந்தார்.
கணவருக்கும், என் மகனுக்கும் குதிரை ரைடிங் தெரியும்; எனக்கு தெரியாது. 2023ல் கணவர் பிசினஸ் சம்பந்தமாக பெங்களூரு சென்றிருந்தார்.
அந்த சமயத்தில் வீட்டில் குதிரைக்கு பயிற்சியளிக்க யாரும் இல்லை. தினமும் பயிற்சி அளித்தால் தான் குதிரை ஆரோக்கியமாக இருக்கும் என்பதால், குதிரையை பராமரிக்க வேண்டி, நானும் குதிரையேற்ற பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன்.
அடிப்படை பயிற்சியை என் மகன் கற்றுக் கொடுத்தான். முதல், 'ஹார்ஸ் ரைடிங்'கின்போது என் வயது 40. மூன்று மாத பயிற்சியை நிறைவு செய்தபோது, குதிரை சவாரி உடலுக்கு நல்ல பயிற்சியாகவும், தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகவும் இருந்ததை உணர்ந்தேன்.
அகாடமியில் முறையாக கற்றுக் கொண்டால், டெக்னிக்கலான விஷயங்கள் தெரியவரும் என்பதால், கோவை, புனே நகரங்களில் பயிற்சி எடுத்து, பயிற்சியாளராக தகுதி பெற்றேன்.
ஆரம்பத்தில் திற்பரப்பில் பயிற்சி கொடுத்தபோது, 10க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுவர்கள் பயிற்சி எடுக்க வந்தனர். 'கிராமப் பகுதியிலேயே இவ்வளவு பேரா' என, ஆச்சரியம்அடைந்தேன்.
நகரத்திலும் பயிற்சி வகுப்பை துவங்க வேண்டும் என்று முடிவெடுத்து, நாகர்கோவிலில் துவக்கினேன். 6 முதல் 35 வயது வரை உள்ள பெண்களும், சிறுமியரும் அதிகமாக வருகின்றனர்.
ஒரு மாதம் பயின்றாலே, 'ரைடு' செல்ல முடியும். தற்போது, அடிப்படை பயிற்சி மட்டுமே கொடுத்து வருகிறோம். எதிர்காலத்தில் ஸ்போர்ட்சில் ஆர்வம் உள்ளவர்களுக்கு தனி பயிற்சியாளர்களை நியமித்து, பயிற்சி அளிக்க உள்ளோம்.
குதிரை மீது ஏறி உட்கார்ந்தால், அதுவே, 'ஒர்க் அவுட்' தான்; 30 நிமிடங்கள் ரைடு போனாலே உடல் முழுதும் வியர்த்துவிடும். குதிரையில் செல்லும்போது, நம்மை பலரும் ஆச்சரியமாக திரும்பி பார்ப்பர்; அப்போது, என்னை ஓர் இளவரசி போன்று உணருவேன்.
தினமும் அதிகாலை, 4:00 மணிக்கு எழும் நான், இரவு, 11:00 மணிக்கு தான் துாங்கச் செல்வேன். அதுவரை புத்துணர்ச்சியுடன் வேலை செய்வேன். அதற்கு, 'ரைடிங்' தான் காரணம்.