/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
700க்கும் மேற்பட்ட பந்தயங்களில் பரிசுகளை குவித்துள்ளேன்!
/
700க்கும் மேற்பட்ட பந்தயங்களில் பரிசுகளை குவித்துள்ளேன்!
700க்கும் மேற்பட்ட பந்தயங்களில் பரிசுகளை குவித்துள்ளேன்!
700க்கும் மேற்பட்ட பந்தயங்களில் பரிசுகளை குவித்துள்ளேன்!
PUBLISHED ON : நவ 21, 2024 12:00 AM

கிட்டத்தட்ட, 4,000 குதிரை பந்தயங்களில் பங்கேற்றுள்ள, ராஜஸ்தானைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பெண், 'ஜாக்கி' ருபா கன்வார் சிங்: எனக்கு தற்போது 40 வயதாகிறது. 17 வயதிலிருந்தே குதிரை பந்தயங்களில் ஜாக்கியாக பணியாற்ற துவங்கி, 4,000 போட்டிகளில் குதிரைகளை ஓட்டிஇருக்கிறேன்.
அவற்றில், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான, 700க்கும் அதிகமான போட்டிகளில் பரிசுகளை குவித்திருக்கிறேன்.
ஜாக்கிகளின் எடை எப்போதும் 50 முதல் 60 கிலோவுக்குள் தான் இருக்க வேண்டும். என் உடல் எடை 50 கிலோ மட்டுமே. பயிற்சிகளின் வாயிலாக, என் எடையையும், தோற்றத்தையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன்.
முதன் முதலில் குதிரைகள் மீது சவாரி செய்ய ஆரம்பித்தபோது, என் வயது 4.
பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் குதிரைகளுக்கு பயிற்சியளிக்கும் பணியை செய்து வந்த என் தாத்தாவிடமிருந்து தான், குதிரைகளை கட்டுப்படுத்தும் அடிப்படை பயிற்சிகளையும், ஜாக்கியாக பணியாற்றிய என் தந்தை நர்பத் சிங் ரத்தோரிடமிருந்து, ஜாக்கி பணியின் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டேன்.
கட்டுப்பாடுகள் நிரம்பியது என் குடும்பப் பின்னணி. எங்கள் சமுதாய மக்கள், ஆரம்பத்தில் ஊக்குவிக்கவில்லை. காரணம், பல ஜாக்கிகளுக்கு மிகப்பெரிய காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சிலர் இறந்தும் போயிருக்கின்றனர்.
அதேபோல் பந்தயங்களின்போது எனக்கும் பல சமயங்களில் அடிபட்டிருக்கிறது; எலும்பு முறிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. ஒருமுறை, தோள்பட்டை எலும்பு உடைந்து போயிருக்கிறது.
பெண் என்பதால் பல பாகுபாடுகளுக்கும் ஆளானேன். குறிப்பாக, போட்டிகளில் நல்ல குதிரைகள் எனக்கு அளிக்கப்படவில்லை.
ஆரம்பத்தில், குதிரைகளின் எஜமானர்களும், ஆண் பயிற்சியாளர்களும் நல்ல குதிரைகளை எனக்கு அளிப்பதில் பெரிதும் தயக்கம் காட்டினர்.
அதன்பின், ராபர்ட் போலே என்ற பயிற்சியாளர் என் மீது நம்பிக்கை வைத்து, ஊக்கமளித்தார். 50 போட்டிகளுக்கு மேல் வென்றதும் தான் உரிய அங்கீகாரம் கிடைத்தது. 2014ல் போலந்தில் நான் வென்றபோது தான், உலக அளவில் பேசப்பட்டேன்.
ஜெர்மனி, அபுதாபி, நெதர்லாந்து போன்ற நாடுகளிலும்கூட வெற்றிகளை குவித்திருக்கிறேன்.
சென்னை எம்.ஏ.எம்., ராமசாமி லாயத்தில் 18 குதிரைகளை கையாண்ட அனுபவம் எனக்கு உண்டு. மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் ஓடக்கூடிய, 540 கிலோ எடையுள்ள குதிரைகளை கட்டுப்படுத்துவது என் அன்றாட பணியாக மாறிவிட்டது.
என் வாழ்க்கை, ஷிவம் நாயர் என்பவரால், 2019-ல் திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

