'தடை அதை உடை எனும் துணிச்சலை அம்மாவிடம் கற்றேன்!'
'தடை அதை உடை எனும் துணிச்சலை அம்மாவிடம் கற்றேன்!'
PUBLISHED ON : ஜூன் 25, 2026 12:41 AM

வீடற்றவர்களின் உரிமைக்காக உறுதியான குரலாக ஒலிக்கும், சென்னையைச் சேர்ந்த வனஜா பீட்டர்: என், 13 வயதிலேயே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் தான் வளர்ந்தேன். 21 ஆண்டுகளாக சமூக செயற்பாட்டாளராக பணியாற்றி வருகிறேன்.
நகர்ப்புறத்தில் வீடற்ற மக்களுக்கு வாழ்விட உரிமையை பெற்றுத் தருவது மட்டு மல்ல, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை வழங்குவது, குழந்தைகளின் கல்வியை உறுதிப்படுத்துவது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகளுக்கு சட்ட உதவிகள் செய்து தருவது, வீட்டு மனை பட்டா பெற்று தருவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் செய்து வருகிறேன்.
கடந்த 2004ல் ஏற்பட்ட, 'சுனாமி' பாதிப்புக்கு பின், கடலோர மக்களின் மேம்பாட்டுக்காக களப்பணியாற்ற துவங்கினேன்.
'நகர்ப்புற ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான தகவல் மையம்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை, 2011ல் துவக்கி வீடற்ற மக்களின் உரிமைகளுக்காக பணியாற்றி வருகிறேன்.
அரசின் திட்டங்கள், அவற்றை சேவை நோக்கத்துடன் செயல்படுத்தும் அமைப்புகள், சேவை தேவைப்படும் மக்கள் என மும்முனைகளையும் இணைப்பதே எங்களின் முக்கிய பணி.
நான் பணியாற்ற ஆரம்பித்த போது, சென்னையில் வீடற்றவர்களுக்கென ஒரு குடியிருப்பு கூட இல்லை. எங்களின் தொடர் முயற்சியால், இன்று சென்னையில் மட்டும் 50 குடியிருப்புகள் இருக்கின்றன.
எங்கள் ஆய்வின் பலனாக முதியோர், பெண்கள், திருநங்கையருக்கு என, பிரத்யேக குடியிருப்புகள் கூட அமைக்கப்பட்டுள்ளன.
பிரச்னைகளை சுட்டிக்காட்டுவதுடன், எங்கள் வேலை நிறைவடையாது; அதற்கான தீர்வையும் பரிந்துரைப்போம். எல்லா குடியிருப்புகளிலும், எங்களுடன் இணைந்து வேலை பார்ப்பது அங்குள்ள பெண்கள் தான்.
பெண்கள், தங்கள் உரிமைகளை கேட்டு போராடும் அதிகாரத்தையும், தைரியத்தையும் பெறுவதை தான் உண்மையான வெற்றியாக பார்க்கிறேன்.
தற்போது நகர்ப்புறத்தில், 'வீடற்றவர்களுக்கான காப்பகம்' என்ற மத்திய அரசின் திட்டத்தை கண்காணிக்க, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மாநில அளவிலான குழுவின் உறுப்பினராகவும் உள்ளேன்.
தடைகளை எல்லாம் உடைத்தெறியும் தைரியத்தை, என் அம்மாவை பார்த்து கற்றுக் கொண்டேன். வாழ்க்கையின் கடினமான தருணங்களில் கைகொடுத்து உதவ ஒருவர் இருந்தால் கூட, அது மிகப்பெரிய தைரியத்தை கொடுக்கும்.
இன்று பல மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறேன் என்பது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
