PUBLISHED ON : ஜூன் 26, 2026 12:00 AM

மதுரை கோரிப்பாளையம், அமெரிக்கன் கல்லுாரி எதிரில் உள்ள, 'சண்முகம் மெஸ்' உரிமையாளர் சரவணன்:
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், என் அப்பா சண்முகம் இந்த உணவகத்தை ஆரம்பித்தார். ஹோட்டல் ஆரம்பித்து சம்பாதிக்க வேண்டும் என்று பலரும் நினைப்பர்.
ஆனால், நியாயமான விலைக்கு, நல்ல சாப்பாடு கொடுக்க வேண்டும் என்ற கொள்கையுடன் தான் கடைசி வரைக்கும் அப்பா இருந்தார்.
அம்மா வீட்டு வேலை பார்த்தபடியே, அப்பாவுக்கு அனைத்து வேலைகளிலும் நேரம் காலம் பார்க்காமல் உதவி செய்வார். இட்லி 1 ரூபாய், தோசை 5 ரூபாய், சாப்பாடு 20 ரூபாய்க்கு விற்பனை செய்தார். 'இதில் வரும் வருமானமே போதும்' என்பார் அப்பா.
அப்பாவின் கொள்கையை கடைசி வரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே நானும், மனைவியும் சேர்ந்து இந்த உணவகத்தை நடத்தி வருகிறோம்.
தற்போது இட்லி 6 ரூபாய், தோசை 10 ரூபாய், சாப்பாடு 60 ரூபாய் என விற்பனை செய்கிறோம். மாணவ - மாணவியர் எனில், 50 ரூபாய்க்கு சாப்பாடு கொடுக்கிறோம்.
விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள், வீட்டு சமையலை தவற விடுவர். அதனால், வீட்டு சுவையின் தரம் குறையாமல் செய்து தருகிறோம்.
வாடிக்கையாளரின் மன திருப்திக்காகவும், அப்பாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும், எந்த குறையும் இல்லாமல் இந்த கடமையை செய்து வருகிறேன்; இனியும் செய்வேன்.
இங்கு வரும் அனைவருமே, இது நம் வீட்டு சமையல் என்று உணர வேண்டும். விடுதியில் தங்கி படிக்கும் மாணவ - மாணவியர் பலரும், 'நீங்கள் தரும் சாப்பாடு, அம்மாவின் சமையலை நினைவூட்டுகிறது' என்று கூறுவர். இந்த பாராட்டை விட எங்களுக்கு வேறு எதுவும் பெரிதல்ல.
படித்து முடித்து வேலைக்கு சென்ற பின்னும், பழைய மாணவர்கள் சிலர் குடும்பத்துடன் இங்கு வந்து சாப்பிட்டு செல்வது மகிழ்ச்சியாக இருக்கும்.
சமீபத்தில் ராணுவ வீரர் ஒருவர் எங்கள் உணவகத்தில் சாப்பிட்டு பில் கொடுக்கும் போது, 'எதிரில் உள்ள அமெரிக்கன் கல்லுாரியில் தான் படித்தேன்; இங்கு பலமுறை சாப்பிட்டுள்ளேன்' என்றார்.
இதேபோல, அப்பா காலத்தில் சாப்பிட்ட வழக்கறிஞர் ஒருவர், சமீபத்தில் எங்கள் உணவகத்திற்கு சாப்பிட வந்தார். 'அந்த சுவை இன்னும் மாறவே இல்லை' என்று கூறினார்.
மக்களின் இந்த அன்பும், இந்த உணவகமும் இருக்கும் வரை, அப்பா இந்த இடத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்.
