'நாங்கள் பாம்பு பிடிப்போர் இல்லை பாம்பு மீட்பாளர்கள்!'
'நாங்கள் பாம்பு பிடிப்போர் இல்லை பாம்பு மீட்பாளர்கள்!'
PUBLISHED ON : ஜூன் 27, 2026 12:22 AM

'அருகானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை'யை நடத்தி வரும், தஞ்சாவூர், பர்மா காலனியை சேர்ந்த 40 வயதாகும் சதீஷ்குமார்: நான் முதுகலை வன விலங்கு உயிரியல் பட்டப் படிப்பும், 'மனித உடலில் நச்சு ஏற்படுத்தும் பாம்புகளின் விஷம்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து, முனைவர் பட்டமும் பெற்று உள்ளேன்.
என் அறக்கட்டளையில், தமிழகம் முழுதும் 300 தன்னார்வலர்கள் உள்ளனர். தலைமை அலுவலகம் தஞ்சையிலும்; டெல்டா மாவட்டங்களில் எட்டு கிளைகளும் உள்ளன.
நாங்கள் பல்வேறு சமூக பணிகளுடன், வன உயிரினங்கள் பாதுகாப்பில் ஈடுபட்டாலும், பாம்புகள் மீட்பு தான் எங்களது முதன்மை சேவை. 13 ஆண்டுகளாக இதை செய்து வருகிறோம். இதற்கென கட்டணம் எதுவும் பெறுவதில்லை.
இதுவரை 23,500க் கும் அதிகமான பாம்புகளை மீட்டு, பாதுகாப்பான இடத்தில் விட்டுள்ளோம். நாங்கள் பாம்பு பிடிப்போர் இல்லை; பாம்பு மீட்பாளர்கள்.
பாம்புகள், தங்களி ன் வழக்கமான இருப்பிடங்களிலேயே வசிக்க விரும்புகின்றன. ஆனால், அவ்விடங்களை மக்கள் ஆக்கிரமித்து, குடியிருப்புகளாக மாற்றி விட்டால், பாம்புகள் வேறு எங்கு செல்லும்?
உண்மையில் பாம்புகளிடம் கொடூர குணம் கிடையாது; அதிக கூச்ச சுபாவமும், பய உணர்வும் உடையவை. தங்களை தற்காத்துக் கொள்ளவே சில நேரங்களில் மனிதர்களை கடிக்கின்றன.
எங்கள் அறக்கட்டளையில் சேர விரும்புவோருக்கு, முதல் கட்டமாக பல மாதங்கள் அடிப்படை வகுப்புகள் எடுத்த பின், பாம்பு மீட்புக்கு செல்லும் மூத்த பணியாளர்களுடன், இரண்டு ஆண்டுகள் பயிற்சிக்கு அனுப்பி வைப்போம்.
பயிற்சியில் தேறிய பின், விஷமில்லாத பாம்புகளை மீட்க அனுப்புவோம். அதிலும் நன்றாக தேர்ச்சி பெற்ற பின், விஷமுள்ள பாம்புகளை பிடிக்க அனுப்புகிறோம்.
கடந்த 13 ஆண்டுகளில், எங்கள் குழுவில் ஒருவரைக் கூட பாம்பு கடித்ததில்லை. சில சமயங்களில் நள்ளிரவு 12:00 மணிக்கு பாம்பு மீட்புக்கு சென்று வந்து, அசதியுடன் அப்போது தான் துாங்கியிருப்போம்.
சிறிது நேரத்திலேயே, 'பாம்பு மீட்க வாருங்கள்' என்று பதற்றத்துடன் அழைப்பு வரும்; மறுப்பேதும் கூறாமல், நானோ அல்லது எங்கள் குழுவினரோ, அடுத்த அரை மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று விடுவோம்.
நாங்கள் செல்லவில்லை என்றால், பாம்பின் உயிருக்கோ அல்லது அங்கு உள்ளோரின் உயிருக்கோ பாதிப்பு ஏற்படும் என்பதால் தாமதிக்க மாட்டோம். இயற்கை சீற்றங்களில் கூட, பாம்புகளை மீட்டு பாதுகாப்பான இடங்களில் விட்டுள்ளோம்.
தொடர்புக்கு
98432 26695
