PUBLISHED ON : நவ 29, 2026 12:00 AM

துக்க வீட்டில் ஒப்பாரி பாடும் தொழில் செய்து வரும், விழுப்புரம் மாவட்டம், வசந்தகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த, 31 வயதாகும் விஜயகாந்த்:
பாட்டு பாடுவது எனக்கு உயிர். அதிலும், எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் போன்று பாட வேண்டும்; அவர் முன் பாட வேண்டும் என்று ஆசை. பள்ளியில் பாட்டுப் போட்டி நடந்தால் முதல் ஆளாக நிற்பேன்; பாடி முடித்த பின், பார்வையாளர்கள் கை தட்டும்போது உள்ளம் குளிர்ந்து விடும்.
முறைப்படி பாட்டு கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை. விவசாயத்தை நம்பியே என் குடும்பம் இருந்தது. என்னுடன் பிறந்தவர்கள் ஆறு பேர். எங்கள் ஏழு பேருக்கும் சாப்பாடு போடவே, பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டனர். இதில், எங்கிருந்து பாட்டு வகுப்புக்கு செல்வது?
ஆயினும், மேடையில் பாட வேண்டும் என்ற ஆசை மட்டும் என் கூடவே சேர்ந்து வளர்ந்தது. ‘டிவி’யில் கேட்டு பாட்டு கற்றுக்கொள்வேன். எங்கள் உறவினர் ஒருவர் ஒப்பாரி பாடல் பாடுவார். அவர் பாடினால், கலங்காத கல் மனமும் கலங்கி விடும். கண்களை மூடி கையை அசைத்தபடியே பாடுவார்; அதை பக்கத்தில் நின்று பார்ப்பேன்.
வீட்டுக்கு வந்து அவர் பாடுவது போல பாடி பார்ப்பேன். அவர், துக்க வீட்டுக்கு செல்லும் போது என்னையும் அழைத்து செல்வார். அவர் பாடி ஓய்ந்த இடைவெளியில், ‘நீ ஒரு பாட்டு பாடுடா’ என்று கூறுவார். அப்போது என் வயது 14. முதன் முதலில் ஒரு துக்க வீட்டில் பாடினேன்.
பாடும்போது பக்கத்தில் நின்று கொண்டிருந்த சிலர் அழுதனர். எல்லாம் முடிந்து கிளம்பும்போது, ‘குரல் நல்லா இருக்குடா; நீ பாடும்போதே அழுகை வந்துடுச்சு’ என்று கூறினர். முதன் முதலில் என் பாட்டுக்கு கிடைத்த அங்கீகாரம். மேடையில் பாடினால் என்ன; துக்க வீட்டில் பாடினால் என்ன... எல்லாமே பாட்டு தானே!
நான், 10ம் வகுப்பு முடித்ததும் ஐ.டி.ஐ., படிக்கச் சென்றேன். வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமே வரவில்லை. மனமெல்லாம் பாடுவதில் தான் இருந்தது. நாம் பாடும் பாடலையும் கேட்டு, அதற்கு பணமும் தருகின்றனரே என்று ஒப்பாரி பாடுவதையே தொழிலாக மாற்றிக் கொண்டேன்.
நான் ஒப்பாரி பாடுவதில் வீட்டில் யாருக்கும் உடன்பாடு இல்லை. ‘இதெல்லாம் ஒரு வேலையா; வேறு வேலைக்கு செல்லலாமே... இப்படி துக்க வீட்டில் பாட்டு பாடிக்கொண்டு இருந்தால், யாருடா உனக்கு பொண்ணு கொடுப்பா?’ என்று உறவினர்கள் அனைவரும் திட்டினர்.
நான் பொய் சொல்லல, திருடல... எனக்கு பிடித்த ஒரு வேலையை மனநிறைவாக செய்கிறேன், அவ்வளவு தான்!
