PUBLISHED ON : நவ 28, 2026 12:00 AM

மகனை கஷ்டப்பட்டு படிக்க வைத்து, டாக்டர் ஆக்கியிருக்கும் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த, தில்லை மாகாளி:
தறி நெசவு தான், எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரம். 17 வயதில் எனக்கு திருமணமானது. அடுத்தடுத்து ஐந்து குழந்தைகள் பிறந்ததால், கடினமாக உழைத்து பிள்ளைகளை கரை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். முதல் மூன்று பிள்ளைகளும், ‘பள்ளி செல்ல மாட்டேன்’ என்று கூறியபோது, நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை; வீட்டிலேயே தறி நெய்ய விட்டு விட்டோம்.
எங்களது நான்காவது மகன் முத்துக்கனி மட்டும், ஏழாம் வகுப்பு படித்தபோது, ‘நன்கு படித்து டாக்டராவேன்’ என்று கூறினான். விளையாட்டுக்கு கூறுகிறான் என்று நினைத்து விட்டு விட்டேன். ஆனால், அவன் மனதில் இருந்த அந்த ஆசை மாறவே இல்லை. 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 449 மதிப்பெண்கள் வாங்கினான்.
குறைவான பாத்திரங்கள், மூன்று தறி, இரண்டு கம்பளி, ஒரு ஆளுக்கு இரண்டு, ‘செட்’ உடைகளை தவிர, எங்களிடம் வேறு எதுவுமே இருந்ததில்லை. அந்நேரம், அவன் வாங்கியிருந்த மதிப்பெண்களை பார்த்து, சந்தோஷத்தை விட, இனி அவனை எப்படி படிக்க வைக்கப் போகிறோம் என்ற கவலை தான் அதிகமானது.
பிளஸ் 1 படிக்க, 400 ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும் என்று கூறினர். அதற்காக ஒரு நாளைக்கு ஒரு புடவை நெய்ய வேண்டிய இடத்தில், மூன்று புடவைகள் நெய்ய ஆரம்பித்தேன். அவனும் பள்ளி விடுமுறை நாட்களில் வேலைக்கு செல்வான்; இரவு, பகல் பாராமல் படித்தபடியே இருப்பான். பிளஸ் 2 பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மாணவனாக வந்தான்.
‘டாக்டராக வேண்டுமெனில் நுழைவுத்தேர்வு எழுதணும்’ என்று கூறினான். எங்கள் வீட்டில் இருந்த ஒரே தங்கம், என் காதில் இருந்த குண்டுமணி மட்டுமே. அதை கழற்றிக் கொடுத்து, அவன் படிப்புக்காக சந்தோஷமாக செலவு செய்தேன். அந்த நுழைவுத்தேர்வில், தமிழகத்திலேயே முதல் ஆளாக தேர்ச்சி பெற்றான்.
ஆயினும், முதலாண்டு கல்விக் கட்டணம், 25 ஆயிரம் ரூபாய் கட்டச் சொல்லியிருந்தனர். நல்ல மனிதர்கள் ஒரு சிலர் அவன் படிப்பிற்கு உதவினர். அடுத்தடுத்த ஆண்டுகளில் அவனே வங்கியில் கல்விக்கடன் பெற்று, படித்து முடித்தான்; அதன்பின், மேல் படிப்பிற்கும் அவனே கடன் வாங்கி படித்து முடித்தான்.
என் வாழ்க்கையில் ஆசைப்பட்டு எனக்கு கிடைத்த விஷயம், என் மகனை மருத்துவர் உடையில் பார்த்தது தான். தற்போது சென்னையில் வேலை பார்க்கிறான். இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டதை எல்லாம் நினைத்து பார்க்கும்போது, சந்தோஷமாகத் தான் இருக்கிறது. இப்போது நான் டாக்டரின் அம்மா!
