/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
இயற்கை விவசாயத்தில் எனக்கு லாபம்!
/
இயற்கை விவசாயத்தில் எனக்கு லாபம்!
PUBLISHED ON : ஜூலை 21, 2025 12:00 AM

கடந்த, 10 ஆண்டுகளாக, 60 ஏக்கரில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து, அதை அரிசியாக மதிப்பு கூட்டி விற்பனை செய்து வரும், தஞ்சையைச் சேர்ந்த வழக்கறிஞர் குலோத்துங்கன்: எங்களுடையது விவசாய குடும்பம். எங்களுக்கு மொத்தம், 60 ஏக்கர் நிலம் இருக்கிறது.
அப்பா, அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்தவர்; அத்துடன் விவசாயத்தையும் கவனித்துக் கொண்டார். ஆரம்பத்தில் இயற்கை விவசாயம் செய்தவர், கால மாற்றங்களால் ரசாயன விவசாயத்துக்கு மாறினார்.
அவர் மறைவுக்கு பின் நானும், ரசாயன உரங்களைத் தான் பயன்படுத்தி வந்தேன். அவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம்மாழ்வார் கூறிய தகவல்கள், என்னை மிகவும் யோசிக்க வைத்தன.
அதனால், சோதனை முயற்சியாக, 2 ஏக்கரில் மட்டும் இயற்கை விவசாயம் வாயிலாக நாட்டு ரக வெள்ளை பொன்னி சாகுபடி செய்தேன். பயிர் நன்கு செழிப்பாக விளைந்தது.
மூட்டைக்கு, 60 கிலோ என்ற அளவில் ஏக்கருக்கு, 20 மூட்டை நெல் மகசூல் கிடைத்தது. அதை அரிசியாக்கி, குடும்ப தேவைக்கு பயன்படுத்திக் கொண்டோம்.
பின், படிப்படியாக இயற்கை விவசாய பரப்பை அதிகப்படுத்தி, பல வகையான பாரம்பரிய ரகங்களை சுழற்சி முறையில் பயிர் செய்தேன். நாட்டு மாடுகள் இருந்தால் கூடுதல் பலன் கிடைக்கும் என கருதி, 30 மாடுகள் வாங்கி வளர்த்தேன்.
மாப்பிள்ளை சம்பா மற்றும் துாயமல்லி அரிசிக்கு அதிக விற்பனை வாய்ப்பு இருப்பதால், கடந்த சில ஆண்டுகளாக இந்த இரு ரகங்களை மட்டும் பயிர் செய்கிறேன். நிரந்தர வாடிக்கையாளர்கள் இருப்பதால், விற்பனையில் சிரமம் இல்லை.
மாப்பிள்ளை சம்பா மூட்டைக்கு, 60 கிலோ என்ற அளவில், ஏக்கருக்கு, 25 மூட்டை வீதம், 40 ஏக்கரில், 1,000 மூட்டை நெல் கிடைக்கிறது.
அதை அரிசியாக மதிப்பு கூட்டினால், 34,000 கிலோ கிடைக்கும். 1 கிலோ, 90 ரூபாய் என விற்பதால், 30 லட்சத்து 60,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
துாய மல்லியில், 1 ஏக்கருக்கு, 25 மூட்டை வீதம், 20 ஏக்கரில், 500 மூட்டை நெல் கிடைக்கும். அரிசியாக மதிப்பு கூட்டினால், 17,000 கிலோ; 1 கிலோ, 80 ரூபாய் என, 13 லட்சத்து 60,000 ரூபாய் வருமானம்.
நெல் சாகுபடி வாயிலாக கிடைக்கும் வைக்கோலை, மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்திக் கொள்கிறேன். 60 ஏக்கரில் கிடைக்கும் வைக்கோல், 2 லட்சத்து 40,000 ரூபாய்.
ஆண்டுக்கு, 60 ஏக்கர் நெல் சாகுபடி வாயிலாக மொத்தம், 46 லட்சத்து 60,000 ரூபாய் வருமானம். நாற்று உற்பத்தி முதல் அரிசி மதிப்பு கூட்டல் வரை, ஏக்கருக்கு 30,000 ரூபாய் வீதம், 60 ஏக்கருக்கு, 18 லட்சம் ரூபாய் செலவு போக, 28 லட்சத்து 60,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது!
தொடர்புக்கு: 94437 46666