/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
திரைப்பட பின்னணி பாடகியாக வேண்டும்!
/
திரைப்பட பின்னணி பாடகியாக வேண்டும்!
PUBLISHED ON : ஜன 23, 2025 12:00 AM

கிராமிய பாடகியாக, மேடைகளில் அசத்தும் புதுகை பிரவீணா: புதுக்கோட்டை மாவட்டம், கல்லுக்காரன்பட்டியில் தான் பிறந்து வளர்ந்தேன். பெற்றோர், கூலித் தொழிலாளர்கள். மிகவும் கஷ்டமான குடும்பம். வறுமை காரணமாக, பிளஸ் 2 வரை தான் படித்தேன்.
என் சித்தப்பா, நாட்டுப்புற பாடகர்; இன்னொரு சித்தப்பா, ஆடல் கலைஞர். அவர்கள் இருவரையும் பார்த்து தான் கிராமிய பாடல்கள் பாடுவதில் ஆர்வம் வந்தது. 7 வயது முதலே, சித்தப்பாவுடன் சேர்ந்து மேடையில் பாட ஆரம்பித்தேன்.
தற்போது வரை, 2,000க்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பாடி இருக்கிறேன். பல்வேறு கலைக்குழுக்களில் பாடி வருகிறேன். மேலும் திரைப்பட பாடலாசிரியர், களபம் செல்ல.தங்கையா குழுவில் பாடி வருகிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, 'புதுகை பிரவீணா' என்ற பெயரில் ஒரு கலைக்குழுவை உருவாக்கி, நடத்தி வருகிறேன்.
எங்கள் குழுவின் வாயிலாக பக்திப் பாடல்கள், பக்தி நடனங்கள், கிராமிய பாடல்கள் வழங்கி வருகிறோம். 'யு டியூப் சேனல்' ஒன்றும் நடத்தி வருகிறேன். சமூக வலைதளங்களிலும் என் பாடலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
சிறுவயதில் பாடும்போது யாரும் அதிகமாக வாய்ப்பு தர மாட்டார்கள்; அப்படியே கிடைக்கும் வாய்ப்புகளுக்கும் அப்பா தான் என்னை அழைத்துச் செல்வார்.
அங்கு சென்ற பின்னும், 'இந்த பொண்ணு, ரொம்ப கருப்பா இருக்கு. ஒழுங்கா பாடத் தெரியாது போல...' என்று விமர்சித்து, என்னை பாடவே விட மாட்டார்கள்.
அப்போதெல்லாம், எனக்கே ஒன்றிரண்டு பாடல்கள் தான் தெரியும். அதனால், மற்ற பாடகியரிடம், 'அந்த ரெண்டு பாட்டையும் நீங்க பாடிடாதீங்க' என்று வேண்டுகோள் வைப்பேன்.
ஆனால், அவர்களோ, அந்த இரண்டு பாடல்களை முதலிலேயே பாடி விடுவர். எனக்கும் வேறு பாடல்கள் பாடத் தெரியாத காரணத்தால், எனக்கான வாய்ப்பு பறிபோய் விடும்.
நான் பாடகியானதன் வாயிலாக, 15 ஆண்டுகளாக, எங்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்துள்ளது.
சிறுவயது முதலே சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், முதல் மேடையில் எனக்கு கிடைத்த, 500 ரூபாய், அப்போதைக்கு மிகப்பெரிய வருமானமாக இருந்தது.
நாட்டுப்புற பாடல்களுக்கு மக்களிடம் இப்போதும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
என் கிராமிய பாடல்களுக்காக கவுரவ டாக்டர் பட்டம், இசைக்குயில், கலைச்சுடர் ஒளி போன்ற பட்டங்களை பெற்றிருக்கிறேன்.
எந்த பின்புலமும் இல்லாமல் வந்து, கலைக்குழுவை அமைத்து, எனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி உள்ளேன்.
ஆனாலும் நாட்டுப்புற கலையுலகில் எனக்கென தனித்துவமான அங்கீகாரத்தைப் பெற வேண்டும்; திரைப்பட பின்னணி பாடகியாக வேண்டும் என்பதே என் லட்சியம்.

