PUBLISHED ON : நவ 08, 2025 12:00 AM

பெண்களுக்கு, 'கியர் பைக்' ஓட்டும் பயிற்சி அளிக்கும் கோவையைச் சேர்ந்த, மாயா: எனக்கு, 6 வயது இருக்கும்போது, தீபாவளிக்கு மறுநாள் மீதமிருந்த பட்டாசுகளை கொளுத்துவதற்காக, தீக்குச்சியை பற்ற வைத்தபோது, என் உடம்பில், தீ பட்டு மளமளவென பரவியது. என் அலறல் கேட்டு ஓடி வந்து பெற்றோர் காப்பாற்றினர்.
உடம்பில் இருக்கும் தீக்காயத் தழும்புகள் வெளியில் தெரியக் கூடாது என்பதற்காக, பள்ளி சீருடையை கூட முழுக்கை சட்டையாகத் தான் அணிவித்தனர். வீட்டிலும் அரைக்கை சட்டை அணிய விடவில்லை.
இதனால் விளையாட்டு, டான்ஸ், டிராமா எதிலும் சேர்ந்ததே கிடையாது. அந்த தழும்புகள் என் தன்னம்பிக்கையை மட்டுப்படுத்திக் கொண்டே இருந்தன.
படிப்பு முடித்து, வேலையில் சேர்ந்த பின், என் வாழ்க்கையே மாற ஆரம்பித்தது. எடையை குறைக்க, 'சைக்கிளிங்' பண்ண தொடங்கினேன். டென்னிஸ் பயிற்சி மையத்திலும் சேர்ந்தேன். பல ஊர்களுக்கு தனியாக பயணிக்க ஆரம்பித்தேன்.
ஆனால், என் உடைகள் மட்டும் மாறவே இல்லை. ஒரு முறை பெங்களூரில் இருக்கிற நண்பனும், நானும் மாரத்தான் ஓடலாம் என முடிவு செய்தோம்.
திடீர் முடிவு என்பதால், என் நண்பன் அரைக்கை டி ஷர்ட்டை கொடுத்தார். வாழ்க்கையிலேயே அன்றுதான் என் தழும்புகள் தெரிகிற மாதிரியான ஆடையை அணிந்தேன்.
யாரும் என்னை வித்தியாசமாக பார்க்கவில்லை; அன்று நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
அடுத்து, என் அப்பாவின் கியர் பைக்கை ஓட்ட ஆரம்பித்தேன். ஓராண்டுக்கு பின், எனக்காக புது கியர் பைக் வாங்கினேன். ஒரு நாளைக்கு, 650 கி.மீ., வரை கூட பயணம் செய்திருக்கிறேன். சென்னை வந்த பின், பல பெண்களுக்கு கியர் பைக் ஓட்ட கற்றுக் கொடுத்தேன்.
முதலில் பலருக்கும் இலவசமாகவே கற்றுக் கொடுத்தேன். 'இலவசமாக பயிற்சி கொடுத்தால் மதிப்பு இருக்காது' என, சிலர் அறிவுரை கூறினர். இதை ஒரு தொழிலாக துவங்கலாம் என முடிவு செய்து, கட்டண பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன்.
கல்லுாரி மாணவியருக்கு, 20 சதவீதம் சலுகை கட்டணத்தில் கற்றுக் கொடுத்தேன். 61 வயது பெண்ணுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறேன். டூ - வீலர் ஓட்டத் தெரிந்தவர், முக்கால் மணி நேரத்தில் கியர் பைக் ஓட்ட கற்றுக் கொள்ளலாம்.
அடுத்து, 10 மணி நேரத்தில், 100 பெண்களுக்கு பைக் ஓட்டும் பயிற்சி கொடுத்து, 'கின்னஸ்' சாதனை செய்ய வேண்டும்.
அரசு சாரா தொண்டு நிறுவனம் எனும் என்.ஜி.ஓ., துவங்கி, கிராமங்களுக்கு சென்று, பெண்களுக்கு இலவசமாக கியர் பைக் ஓட்ட கற்றுக் கொடுக்கும் எண்ணமும் இருக்கிறது.
தொடர்புக்கு:
90870 30060

