/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
வருமானம் இல்லா விட்டாலும் விவசாயம் செய்வேன்!
/
வருமானம் இல்லா விட்டாலும் விவசாயம் செய்வேன்!
PUBLISHED ON : டிச 19, 2024 12:00 AM

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள மலை கிராமமான பூலத்துாரில், 10 ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணை வைத்துள்ள, 'இந்தியன் ஆடிட் அண்ட் அக்கவுன்ட்ஸ் சர்வீஸ்' எனப்படும் ஐ.ஏ.ஏ.எஸ்., அதிகாரி அம்பலவாணன்:
எங்கள் குடும்பம், ஏழு தலைமுறைகளாக இங்கு விவசாயம் செய்து வருகிறோம். பள்ளி மாணவனாக இருக்கும்போதே, அப்பாவுக்கு துணையாக விவசாய வேலைகள் பார்ப்பேன்.
மதுரை வேளாண் கல்லுாரியில் பி.எஸ்சி., அக்ரியும், கேரள மாநிலம், கொச்சியில் எம்.எஸ்சி.,யும் படித்தேன். பின், சென்னை அண்ணா பல்கலையில் எம்.டெக்., முடித்தேன்.
வெளிநாடுகளில் பல லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்புகள் கிடைத்தும், தவிர்த்து விட்டேன். யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதி, ஐ.ஏ.ஏ.எஸ்., அதிகாரியாக வெற்றி பெற்றேன்; சிம்லா, டில்லி, கேரளா உட்பட பல பகுதிகளில் வேலை பார்த்தேன்.
நான் எங்கெல்லாம் வேலை பார்த்தேனோ, அங்கெல்லாம் நிறைய மரக்கன்றுகள் நட்டிருக்கிறேன்; பூங்காக்கள், அலுவலகத்தில் தோட்டம் அமைத்திருக்கிறேன்.
எனக்கு கொடுக்கப்பட்ட குடும்பச் சொத்தான 10 ஏக்கர் நிலத்தில், என் உறவினர்கள் வாயிலாக விவசாயம் செய்கிறேன். பலா, அவகேடோ, சந்தனம், மா, ஆரஞ்சு, ரம்பூட்டான் உள்ளிட்ட பல வகையான மரங்களை பயிரிட்டிருக்கிறேன். 2017 முதல், ஊடுபயிர்களாக மலை வாழை, நெல்லி, அத்தி, ஸ்டார் புரூட், மிளகு, காபி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்ய ஆரம்பித்தேன்.
மலை காய்கறிகளான பீன்ஸ், சவ்சவ், கேரட், காலிபிளவர், முள்ளங்கி உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்கிறேன். இயற்கை உரத் தேவைக்காக இரண்டு மாடுகள், 50-க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள் வளர்க்கிறேன். காளான் பண்ணையும் அமைத்திருக்கிறேன்.
இந்த பண்ணை வாயிலாக கணிசமான வருமானம் கிடைக்கிறது. வருமானம் கிடைக்கவில்லை என்றாலும், தொடர்ந்து விவசாயம் செய்வேன். எந்த ஒரு சூழ்நிலையிலும், விவசாயத்தை கைவிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த ஐந்து குடும்பங்கள் என் பண்ணையில் வேலை செய்கின்றனர்; அவர்களுக்கு இது ஒரு வாழ்வாதாரமாக இருக்கிறது.
இதற்கு முன், கொடைக்கானலில் பெரும்பாலான பகுதிகளில் செழிப்பாக விவசாயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், நாளுக்கு நாள் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கவே, விவசாய நிலங்கள் எல்லாம் தங்கும் விடுதிகளாக மாற ஆரம்பித்தன.
அதனால், விவசாயிகளை விவசாயத்தில் ஈடுபடுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

