/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பெண்கள் இணைந்தால் உலக சாதனை படைக்க முடியும்!
/
பெண்கள் இணைந்தால் உலக சாதனை படைக்க முடியும்!
PUBLISHED ON : ஜூலை 18, 2025 12:00 AM

'குரோஷா' என்ற கொக்கி பின்னல் முறையில் ஆடைகள் பின்னும், சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ நடராஜன்:
என் சொந்த ஊர், தஞ்சை மாவட்டம், திருநாகேஸ்வரம். பாட்டி வீட்டுக்கு செல்லும்போதெல்லாம், அவர் வெள்ளியால் ஆன கொக்கி ஊசியை வைத்து, பருத்தி நுாலை பயன்படுத்தி, கொக்கி பின்னல் முறையில் பல ஆடைகள் உருவாக்குவதை பார்த்திருக்கிறேன்.
பாட்டியை போல குரோஷா செய்தால், பலருடைய பாராட்டை பெறலாம் என்ற எண்ணம் எனக்குள்ளே ஆழமாக ஊறிப்போனது. அப்போது எனக்கு வயது, 10.
நான் படிக்கிற காலத்தில் தையல், ஓவியம், ஹேண்ட் எம்பிராய்டரி, மிஷின் எம்பிராய்டரி, குரோஷா என பலவித கலைகளையும் கற்றுக் கொண்டேன்.
திருமணமாகி, குழந்தைகள், அவர்களின் படிப்பு என, பல பொறுப்புகள் இருந்தன. மூத்த மகளின் திருமணத்திற்கு பின் குடும்ப பொறுப்புகள் ஓரளவுக்கு குறைந்த சூழ்நிலையில், குரோஷா மீது கவனம் திரும்பியது.
குரோஷா கலையில் திறமை வாய்ந்த பெண்கள் பலரையும் ஒன்று திரட்டி, எல்லாரும் இணைந்தால் உலக சாதனை புரியலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது.
கடந்த 2015ல் முகநுாலில், 'மதர் இந்தியா குரோஷா குயின்ஸ்' என்ற குழுவை ஆரம்பித்தேன். துவக்கத்தில், 150 உறுப்பினர்கள் இருந்தனர்.
தற்போது, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பல்வேறு அரபு நாடுகள் என்று உலகின், 13 நாடுகளை சேர்ந்த, 2,500 பெண்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
எங்கள் குழு துவங்கிய ஆறு மாத காலத்தில், சென்னை, துரைப்பாக்கம் தனியார் பொறியியல் கல்லுாரி வளாகத்தில், 11,449 ச.மீ., பரப்பளவில் குரோஷா துணி தயாரித்தோம்.
கடந்த 2017ல், அதே கல்லுாரி வளாகத்தில், 7 அங்குல அகலத்தில், 14.09 கி.மீ., நீளமுள்ள ஸ்கார்ப் தயாரித்து, இரண்டாவது கின்னஸ் சாதனையை நிகழ்த்தினோம். இப்படி, அடுத்தடுத்து பல பிரமாண்ட நிகழ்ச்சிகள் செய்து, ஐந்து கின்னஸ் சாதனை படைத்தோம்.
சமீபத்தில், 5.5 அங்குல சதுர அளவில், 1 லட்சத்து 500 குரோஷா துணி துண்டுகள் உருவாக்கி, 'இந்திய ஜவான்களின் சேவைகளுக்கு சல்யூட்' என்று கூறி, ஆறாவது முறையாக கின்னஸ் சாதனை படைத்தோம். இவற்றில் போர்வைகள், ஸ்கார்ப்கள் தயாரித்து, நம் ராணுவத்தினருக்கு அனுப்பி வைக்க இருக்கிறோம்.
இந்த கின்னஸ் சாதனை முயற்சிகள் எல்லாம், எங்களுக்கு நாங்களே ஊக்கமளித்து கொள்வதுடன், பெண்கள் இணைந்தால் உலக சாதனை படைக்க முடியும் என்பதற்கு உதாரணம்!