/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கல்வியும், வேலையும் இருந்தால் எதையும் சமாளித்து விடலாம்!
/
கல்வியும், வேலையும் இருந்தால் எதையும் சமாளித்து விடலாம்!
கல்வியும், வேலையும் இருந்தால் எதையும் சமாளித்து விடலாம்!
கல்வியும், வேலையும் இருந்தால் எதையும் சமாளித்து விடலாம்!
PUBLISHED ON : ஏப் 19, 2025 12:00 AM

பெற்றோரை இழந்து, ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து, கல்வியால் உயர்ந்த நிலையை எட்டியுள்ள சேலத்தைச் சேர்ந்த சுமிதா:
என் குழந்தைப் பருவத்திலேயே பெற்றோரை இழந்து விட்டேன்; 5 வயதிலேயே ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டேன். நல்லா படித்து எல்லா செமஸ்டர்களிலும் நிறைய மதிப்பெண்கள் எடுத்தேன். கடைசி செமஸ்டரில் கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கேற்றேன்.
என் மதிப்பெண்கள், ஆங்கிலப் புலமை, திறன் எல்லாம் எனக்கு கைகொடுக்க, நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்தது. படிப்பை முடித்த கையுடன் வேலையில் சேர்ந்ததை, என் வெற்றியாக மட்டும் பார்க்கவில்லை. அதுவரை எனக்கு உதவிய எல்லாரின் நம்பிக்கையையும் காப்பாற்றி விட்டேன் என்ற நிறைவுதான் வந்தது.
வேலைக்காக வந்தபோது, சென்னை மிரட்சியைக் கொடுத்தது. புதிதாக இருந்த கலாசாரம், கொஞ்சம் பயமாகவும் இருந்தது. 'இத்தனை பேரை முன்னேற்றி விட்ட ஊர் உன்னை கைவிட்டு விடுமா?' என்று எனக்கு நானே, 'பாசிட்டிவிட்டி' கொடுத்துக் கொண்டேன்.
பதவி உயர்வு கிடைத்து, பெங்களூரில் சிறிது காலம் வேலை பார்த்தேன். அந்த அனுபவத்துடனும், அடுத்த வேலையுடனும் மீண்டும் சேலம் வந்தேன். இங்கு ஒரு தனியார் நிறுவனத்தில், வணிக வினியோக நிர்வாகியாக வேலை பார்த்து வருகிறேன்.
முதல் மாத சம்பளம் வாங்கியபோது, எனக்கு ஏற்பட்ட உணர்வை எப்படி சொல்றது என தெரியவில்லை. ஒரு சாதாரண வாழ்க்கையில் பெற்றோர் கூட இருந்து, அடிப்படைத் தேவைகள் எல்லாம் கிடைத்து வளர்ந்த ஒருவருக்கே முதல் சம்பளம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், எல்லாவற்றிலும் சிரமங்களை மட்டுமே பார்த்து வளர்ந்த எனக்கு எப்படி இருந்திருக்கும்.
ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த நான் போட்ட டிரஸ் எல்லாம் பெரும்பாலும், யாரோ பயன்படுத்திய ஆடைகளாகத்தான் இருக்கும். அதனால், ஆசை ஆசையாக நிறைய ஆடைகள் வாங்கினேன். என் அடிப்படைத் தேவைகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டேன். என்னை ஆளாக்கிவிட்ட இல்லத்துக்கு முடிந்த உதவிகளை செய்தேன்.
என் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக உணர்ந்தது, என் திருமண தருணம்தான். அதை ஆடம்பரமாக செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டபடியே நடத்தி முடித்தபோது, ரொம்ப பெருமையாக இருந்தது. என் கணவர் வீடு கட்டவும், என் சம்பளம் உறுதுணையாக இருந்தது.
வாழ்க்கை எப்பவும், எப்படியும் மாறலாம். கஷ்டத்தில் இருந்து நம்மை காப்பாற்றி விடலாம் அல்லது சந்தோஷமாக போகும் நம் பாதையை சிரமங்களுக்கு மாற்றி விடலாம். அதனால், கல்வி, வேலை, சுய சம்பாத்தியம் இவற்றால் நம்மை மேம்படுத்திக் கொள்வது மிக முக்கியம். அதன்பின் எதையும் சமாளித்து விடலாம்.

