/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ஓவியத்துறையில் 60 ஆண்டுகளை நெருங்க போகிறேன்!
/
ஓவியத்துறையில் 60 ஆண்டுகளை நெருங்க போகிறேன்!
PUBLISHED ON : மே 13, 2025 12:00 AM

பிரபல ஓவியர் மணியம் செல்வன்: கடந்த 1967ல், என் 17வது வயதில் துவங்கிய இந்த ஓவிய வாழ்க்கை, இன்னும் தொடர்ந்து கொண்டே இருப்பதற்கு முக்கிய காரணம், ஓவியத்தின் மீது இருந்த ஆர்வமும், தேடலும் தான். கலைஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் ஓய்வு என்பதே இல்லை.
வாழ்க்கையின் மீது ஆர்வமும், ரசனையும் இருந்தால் ஓய்வு குறித்த நினைப்பே வராது. மூன்று தலைமுறைகளாக பணியாற்றுகிறேன். ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை என்னை நானே புதுப்பித்துக் கொள்கிறேன்.
போட்டிகள் நிறைந்த பத்திரிகை உலகில் ஜெயித்து காட்டுவது ஒரு சவால் தான். அந்த சவாலில் ஜெயிக்கும்போது, இன்னும் பணியாற்ற வேண்டும் என்ற வேகம் பிறக்கும்.
ஓவியத்துறையில், 60 ஆண்டுகளை நெருங்கப் போகிறேன். 1997ல் சில கணினி வடிவமைப்பு மென்பொருட்களின் உதவியுடன், டிஜிட்டல் ஊடகங்களின் வாயிலாக என்னை மெருகேற்றிக் கொண்டேன். தொழில்நுட்பத்துடன் இணைந்து, நம்மையும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், என்னை அதற்குள் தள்ளியது.
வெவ்வேறு கோணங்களில் என் பார்வை விரிவடைந்தது.
இன்றுவரை ஒரு ஓவியத்தை வரைவதற்கு முன், என் மனதில் தோன்றும் விஷயங்களை, உருவங்களை, கோணங்களை என் கரங்களால் காகிதங்களுக்கு கொண்டு வந்து வரைந்து கொண்டிருப்பதுதான், அந்த ஓவியத்திற்கு உயிரை தருகிறது என்றே நினைக்கிறேன்.
சிறு வயதில் நிறைவேறாத ஆசைகளை, ஓய்வுக்குப் பின் நிறைவேற்றி கொள்ளலாம். அது ஓவியம் என்றில்லை; இசையாகவோ, மொழியாகவோ அல்லது எழுதுவதாகவோ இருக்கலாம்.
எனக்கு ஓவியம் வரைவது தொழிலாக மாறிவிட்ட நிலையில், போட்டோகிராபியின் மீது இருந்த ஆர்வம், இப்போது வரை எனக்கு புத்துணர்ச்சியை அளித்துகுபு கொண்டே இருக்கிறது. போட்டோகிராபர் அனுபவங்கள், என் ஓவியக் கலையை மெருகேற்றிக் கொள்ளவும் உதவியாக இருக்கிறது.
பல்வேறு படைப்பு களை அளித்திருந்தாலும், என் பயணம் முழுமை பெறவில்லை என்றே நினைக்கிறேன். காலம் என்ற படகு, படைப்புகளை மட்டுமே ஏற்றிச் செல்லும்; படைப்பாளிகளை அல்ல.
அந்த வகையில், இன்னும் நான் ஒன்றும் சாதிக்கவே இல்லை என்றுதான் தோன்றுகிறது. உண்மையான திருப்தி இதுவரை எனக்கு ஏற்படவில்லை.
என் தேடலுக்கும், வாழ்க்கை முறைக்கும், என் ஓவியப் பணிகளுக்கும் உறுதுணையாக இருந்தவர்கள் அம்மாவும், மனைவியும் தான்.
அவர்கள் இல்லாவிட்டால், இந்த வயதில் ஆரோக்கியமான மனநிலையில் பேச முடியாது; இப்போதும் பணியாற்ற முடியாது. அதேபோல, பத்திரிகைகளில் என் ஓவியத்தை பார்க்கும் ஒருவர், 'மணியம் செல்வன் என்பவர் நல்ல ஓவியங்கள் வரைவார்' என்று, தன் தலைமுறைக்கு சொன்னால் போதும்.