/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
திருமண சீராக எருமை மாடு கொடுப்பது வழக்கம்!
/
திருமண சீராக எருமை மாடு கொடுப்பது வழக்கம்!
PUBLISHED ON : பிப் 14, 2024 12:00 AM

பர்கூர் நாட்டு மாட்டின ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியரும், பர்கூர் எருமை இனங்கள் குறித்த ஆய்வில், களப் பணியாற்றியவருமான முனைவர் கணபதி:
தமிழகத்துக்கு என தனித்துவமான மாட்டினங்கள், நாய் இனங்கள், கோழி இனங்கள் உண்டு.
அந்த வகையில், ஈரோடு மாவட்டம், பர்கூர் மலையை பூர்வீகமாக கொண்ட, எருமையினத்தை, தனித்த எருமையினம் என தேசிய கால்நடை மரபணு வள அமைப்பு அங்கீகரித்துள்ளது.
'மலை எருமை' என்றழைக்கப்படும், பர்கூர் எருமை மாடுகள், பர்கூர் மலைப் பகுதிகளில் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, ஈரோடு மாவட்டம், அந்தியூர், சத்தியமங்கலம் வட்டங்களில் இவை அதிக அளவில் இருக்கின்றன. பர்கூர் மலை 1,000 மீட்டர் உயரமும், 85,000 ஏக்கர் பரப்பளவும், 32 கிராமங்களும் கொண்டவை.
இங்கு லிங்காயத்துகள் மற்றும் சோளகர் இன மக்கள் அதிகம் வாழ்கின்றனர். மேய்ச்சல் முறையில் தான் இந்த எருமைகள் அதிகம் வளர்க்கப்பட்டு வருகின்றன.
மலைகளில் உள்ள புதர்களில் நுழைந்து மேய்வதற்கு ஏற்றவாறு, இந்த எருமையின் உடல்வாகு நடுத்தரமாக இருக்கும்.
கொம்புகள் அரிவாள் போன்று முனை வளைந்து இருக்கும்; கால்கள் சற்றே சிறுத்து இருக்கும். அதனால் தான் இம்மாடுகளால் எளிதாக மலைகளில் ஏறி இறங்கவும், புதர்களில் நுழைந்து மேயவும் முடிகிறது.
ஒரு நாளைக்கு 6 கி.மீ., வரை சென்று மேய்ந்துவிட்டு திரும்பக் கூடியவை. எங்களுடைய ஆய்வுப்படி ஒரு நாளைக்கு 3 - 4 லிட்டர் வரை பால் கொடுக்கும் தன்மையுடையது இந்த எருமையினம்.
எருமை பாலை குடிப்பதற்கு பயன்படுத்துவதில்லை. தயிர், மோர், வெண்ணெய் ஆகியவற்றுக்கு தான் பயன்படுத்துகின்றனர். தற்போது, எருமை பாலை சொசைட்டிகளில் ஊற்ற துவங்கி இருக்கின்றனர். 1 லிட்டர், 40 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
இது மலைப் பகுதிக்கு மட்டுமே ஏற்ற இனமாக இருந்தாலும், சமவெளி பகுதிகளிலும் தாராளமாக வளர்க்கலாம்.
பர்கூர் எருமைகளை நாட்டினமாக அங்கீகரிப்பதில், களப்பணியாற்றிய தேசிய கால்நடை மரபு வள அமைப்பின் முதன்மை விஞ்ஞானி முனைவர் கே.என்.ராஜா:
தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு எருமை இனம், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தோடா எருமை. 2008ல் தோடா எருமை, நாட்டினமாக அங்கீகரிக்கப்பட்டது.
திருமணத்தின்போது பெண்களுக்கு சீராக எருமை கொடுக்கும் வழக்கம், தோடர் சமூகத்தில் இன்றளவும் இருந்து வருகிறது. தமிழகத்தில் தோடா, பர்கூர் என, இரண்டு எருமையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

