/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
முதல்வர் கையால் விருது வாங்கியது உச்சபட்ச சந்தோஷம்!
/
முதல்வர் கையால் விருது வாங்கியது உச்சபட்ச சந்தோஷம்!
முதல்வர் கையால் விருது வாங்கியது உச்சபட்ச சந்தோஷம்!
முதல்வர் கையால் விருது வாங்கியது உச்சபட்ச சந்தோஷம்!
PUBLISHED ON : பிப் 03, 2025 12:00 AM

துார்தர்ஷன் பொதிகை சேனலின் செய்தி வாசிப்பாளர் பொற்கொடி: என் சொந்த ஊர், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகில் உள்ள நாட்டார்மங்கலம் என்ற குக்கிராமம். நான்கு சகோதரர், சகோதரிகளுடன் வளர்ந்தேன். சிங்கம்புணரியில் பள்ளிப் படிப்பை முடித்து, மதுரையில் பி.காம்., முடிக்கும் முன்னரே திருமணம் நடந்தது.
பேஷன் டிசைனிங், ஹிந்தி, மாண்டிசோரி பள்ளி ஆசிரியர் பயிற்சி என்று சில கோர்ஸ்களை முடித்தேன். இரண்டு ஆண்டுகள் உளவியல் ஆலோசகருக்கான பயிற்சியும் முடித்தேன்.
திடீரென குடல்வால் ஆப்பரேஷன், கர்ப்பப்பையில் பிரச்னை என உடலில் அடுத்தடுத்து பிரச்னைகள் ஏற்பட்டன. ஆப்பரேஷன் தியேட்டருக்குள் சென்றபோது, 'இம்முறை மீண்டு வந்ததும் நமக்கென்று நிச்சயம் ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்' என நினைத்தேன்.
சிறுவயதில் அப்பா, என்னை எதற்குமே திட்ட மாட்டார். ஆனால், செய்தி பார்க்கும்போது தொந்தரவு செய்தால் மட்டும் அவருக்கு கோபம் வந்துவிடும். எனவே நானும், 'டிவி' பெட்டிக்குள் போய் பேச வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
கடந்த 2007 - 2020 வரை ஆல் இண்டியா ரேடியோவில் அறிவிப்பாளராக வேலை பார்த்தேன். கூடவே, துார்தர்ஷன் சேனலில் செய்தி வாசிப்பாளர் பணிக்கும் விண்ணப்பித்தேன்.
இறுதிக்கட்ட நேர்காணலில், 'நீங்கள் சென்னை வர வேண்டும்' என்றனர். 'கோவையில் இருந்து வந்து செல்கிறேன்' என்றேன். 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. வேலையில் இருக்கும் வார நாட்களில் கோவை - சென்னை என்று பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
மொழி உச்சரிப்பில் ஏற்ற, இறக்கங்களை சரியாகக் கையாளுவது, முக்கியமாக வார்த்தைகளை எப்படி, எந்த அளவில் உச்சரிக்க வேண்டும், அதற்கேற்ப எப்படி முகத்தில் உணர்வுகளை கையாள வேண்டும் என்பதை அறிவதுடன், அரசியல், பொது அறிவை வளர்த்துக் கொள்வதும் அவசியம்.
செய்தியாளர் ஆக விரும்பும் தம்பி - தங்கைகளுக்கு என் அடிப்படை டிப்ஸ் இதுதான்.
சிறந்த தமிழ் மொழி உச்சரிப்பாளர் விருதை, 2023ல் முதல்வர் ஸ்டாலின் கையால் வாங்கியது என் வாழ்வின் உச்சபட்ச சந்தோஷ தருணம். நான் கற்றுக்கொண்ட எந்த விஷயத்தையும் செயல்படுத்தவில்லை என்றாலும், மாண்டிசோரி கல்வியை மட்டும் விட்டுவிடவில்லை.
என் கணவருடன் இணைந்து, நான்கு ஆண்டுகளுக்கு முன் கோவையில் மாண்டிசோரி பள்ளியை ஆரம்பித்து நடத்தி வருகிறோம்.
குக்கிராமத்தில் பிறந்த எனக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்வுக்கு காரணம் ஒன்றுதான்... அது, ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும், அதை அடைந்த தேடலும்!

