/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கணவர் கொடுத்த ஆதரவால் தான் சாத்தியமானது!
/
கணவர் கொடுத்த ஆதரவால் தான் சாத்தியமானது!
PUBLISHED ON : ஜூலை 08, 2025 12:00 AM

'டாக்சி' டிரைவர் தொழிலில் கலக்கும் சென்னையைச் சேர்ந்த ஸ்வேதா:
திருவண்ணாமலை மாவட்டம், மணலுார்பேட்டை தான் என் சொந்த ஊர். 10ம் வகுப்பு வரை தான் படித்துள்ளேன். கணவர் லாரி ஓட்டுநர். சென்னையில் வாடகை வீட்டில் தான் குடி இருக்கிறோம்.
திருமணத்துக்கு பின் குடும்ப கஷ்டம். எங்களுக்கு மூன்று குழந்தைகள். ஆரம்பத்தில் டெய்லரிங் வேலை பார்த்தேன்; பெரிதாக வருமானமில்லை. அதன்பின் கார்மென்ட்ஸ் வேலைக்கு சென்றேன். அதுவும் குழந்தைகளின் படிப்புக்கு சுத்தமாக போதவில்லை.
'நான் கார் ஓட்டலாம் என்று நினைக்கிறேன்' என, கணவரிடம் கூறினேன். அவரும் சம்மதித்தார். என்னிடம் இருந்த சிறிது நகையை அடகு வைத்தும், லோன் போட்டும் கார் வாங்கினோம்.
கார் ஓட்ட கணவர் தான் கற்றுக் கொடுத்தார். ஒரே வாரத்தில் நன்கு ஓட்ட கற்றுக் கொண்டேன்.
இப்போது எட்டு மாதங்களாக காரில் வாடிக்கையாளர்களை ஏற்றிச் செல்கிறேன். காலையில் சமைத்து வைத்துவிட்டு வந்து விடுவேன்.
வேலை முடிந்து, வீட்டுக்கு செல்ல இரவு, 9:00 மணி ஆகிவிடும். அது வரை என் பிள்ளைகளே அவர்களது தேவைகளை பார்த்துக் கொள்வர்.
'சில நேரங்களில் நல்ல வாடிக்கையாளர்களும் வருவர்; குடித்துவிட்டு தகராறு செய்வோரும் வருவர்' என, ஆரம்பத்திலேயே கணவர் கூறி இருந்ததால், அது மாதிரியான வாடிக்கையாளர்களை கையாளுவது கஷ்டமாக தெரியவில்லை.
ஆனால், பணி நேரத்தில் ஏற்படும் இயற்கை உபாதை பிரச்னை மட்டும் தான் சங்கடத்தை கொடுக்கும்.
அதே மாதிரி கார் ஓட்டி செல்லும்போது, 'இந்த வேலைக்கு மட்டும் தான் பொண்ணுங்க வராம இருந்தீங்க... இப்ப இதற்கும் வந்து விட்டீங்களா?' என்று சொல்லி சிலர் திட்டி இருக்கின்றனர். சாலையில் செல்லும்போது, 'சேஸ்' செய்து, வழி விடாமல் அழ வைத்துள்ளனர்.
ஆனால், பெண் வாடிக்கையாளர்கள் சிலர், 'பரவாயில்லையே... நீங்கள் சூப்பரா கார் ஓட்டுகிறீர்கள்' என்றும், 'எங்களால் முடியாததை நீ பண்றம்மா' என்று பெருமையாக சிலர் பேசுவர்.
இதெல்லாம் என் கணவர் கொடுத்த ஆதரவால் தான் சாத்தியமானது என்று நினைத்து பெருமைப்பட்டு கொள்வேன்.
ஆரம்பத்தில் உறவினர்கள் கூட, 'பொண்ணா இருந்து கார் ஓட்டுறா பாரு' என கூறி, தகாத வார்த்தைகளால் அவமானப்படுத்தி இருக்கின்றனர்.
ஆனால், இப்போது அவர்களே நாங்கள் நல்ல நிலையில் இருப்பதை பெருமையாக பார்க்கின்றனர்.
வைராக்கியத்துடன் கார் ஓட்டி லோன் முழுதையும் அடைத்து விட்டேன். குடும்பத்தையும் நன்கு பார்த்துக் கொள்கிறேன். கூடிய விரைவில் சென்னையில் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும்.