/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ஜல்லிக்கட்டு காளைகளும் பாசமுள்ள பிராணிகளே!
/
ஜல்லிக்கட்டு காளைகளும் பாசமுள்ள பிராணிகளே!
PUBLISHED ON : ஜன 21, 2024 12:00 AM

மதுரை, அலங்காநல்லுார் அருகே தண்டலை செவக்காடு கிராமத்தில், ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும், சுரேந்திரன் என்ற விவசாயியின், 7 வயது மகள், கிரிஷ்சிகா:
நான், 2ம் வகுப்பு படிக்கிறேன். மாடு என்றால் அவ்வளவு பிடிக்கும். பள்ளிக்கூடம் போறதுக்கு முன்னாடியும், போயிட்டு வந்த பிறகும் மாடுகளைத் தான் பார்ப்பேன். எங்கப்பா, அம்மா என்னைய ஒண்ணுமே சொல்ல மாட்டாங்க.
தவிடு, பருத்தி விதைன்னு நான் தீவனம் வச்சா தான் அதுக நல்லா சாப்பிடும். என் மேல் பாசமாக இருக்கும்; ஒரு முறை கூட என்னை முட்டவோ, பாயவோ வந்ததில்லை.
நான் தான் இந்த மாடுகளை வளர்க்கிறேன்.
சுரேந்திரன்: நானும், என் சகோதரர் மகேந்திரனும் இணைந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டுக் காளைகள் வளர்க்கிறோம்.
ராமு, கருப்பு, சண்டியர், எம்.ஜி.ஆர்., என நான்கு ஜல்லிக்கட்டு மாடுகள் எங்களிடம் உள்ளன. இதுவரைக்கும் சுமார், 40 போட்டிகளில் அவிழ்த்து விட்டிருக்கிறோம்; எதிலும் தோற்றது கிடையாது.
தங்கக்காசு, சைக்கிள், பீரோ, அண்டா என, பல பரிசுகளை ஜெயிச்சிருக்காங்க. மதுரை அலங்காநல்லுாரில் துவங்கி, புதுக்கோட்டை, சிவகங்கை, திருப்பூர், கோவை, என, தமிழகத்தில் நடக்குற எல்லா போட்டிகளிலும் ஜெயிச்சிருக்காங்க.
மாடுகளை வாங்குறது மட்டும் தான் நாங்க. அதுகளும் ஒரு பிள்ளை மாதிரி தான்.
அதனால, அதுகளைப் பராமரிக்குறதுக்குன்னே ஒரு ஆள் வேண்டும். அந்த வேலையை என் மகளும், மகன்களும் பார்த்துக் கொள்கின்றனர்.
பக்கத்து வீட்டில் உள்ள சிறு வயது பிள்ளைகள், அவர்கள் சம வயது இருப்போருடன் தான் விளையாடுவர்.
ஆனால், என் மகள் காளைகளுடன் தான் இருப்பாள். சமயங்களில் நாங்கள் காளைகளிடம் போனாலே, வெறிச்சி முட்ட வரும்; ஆனால், என் மகளிடம் ஒருநாளும் மூர்க்கமாக நடந்து கொண்டதில்லை.
மகள் தீவனம் வைக்கிற வேலைகளை பார்த்துக் கொள்வாள். மகன்கள், காளைகள் மண்ணில் கொம்பு குத்திப் பழக்குவது, நீச்சலடிக்க வைப்பது என, மற்ற வேலைகளை பார்த்துக் கொள்வர்.
ஜல்லிக்கட்டு மைதானத்தில் களம் காணும் காளைகள், பார்ப்பதற்கு ஆக்ரோஷமாக, கோபம் கொண்ட மூர்க்கனாகத் தோற்றமளிக்கும்.
ஆனால், அவை உண்மையில், தன்னை வளர்ப்போரிடத்தில் வீட்டுப் பிள்ளைகள் போல பாசத்துடன் வளரும் வீட்டுப் பிராணிகள் தான். அதற்கு என் மகள் வளர்க்கும் காளைகளே உதாரணம்.
இயற்கையோடு வாழ் இயற்கைக்கு திரும்பு என்பது தான் இலக்கு!
திருவண்ணாமலையில் ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள புளியனுார் கிராமத்தில், காட்டுப் பள்ளியை நடத்தி வரும், 'குக்கூ' சிவராஜ்:
இந்த
உலகில், குழந்தைகளின் இயல்பு காணாமல் போய்
விட்டது. அதை மீட்டெடுக்கும் முயற்சியில் துவங்கப்பட்டது தான், 'குக்கூ' காட்டுப்பள்ளி.
இப்பகுதியில் வாழும் குழந்தைகள் தான் இந்தப் பள்ளியின் மாணவர்கள். இதைப் பள்ளிக்கூடம் என்று சொல்வதை விட, 'குக்கூ குழந்தைகள் இயக்கம்' என்று சொல்வது தான் சரி.
மலைக் கிராமங்களில் நுாலகம் அமைப்பது, அரசு பள்ளிகளில் கலை பயில் முகாம் நடத்துவது, புத்தகங்கள் வெளியிடுவது என, முழுக்க குழந்தைகளை சார்ந்தும், சூழலியலைச் சார்ந்துமாக செயல்படுகிறது இப்பள்ளி.
இங்குள்ள குழந்தைகளுக்கு கலை, கைத்தொழில், இலக்கியம் வழியாக மாற்றுக்கல்வியை அளிப்பது தான் இதன் நோக்கம். குறிப்பாக, 'இயற்கையோடு வாழ்; இயற்கைக்குத் திரும்பு' என்பது தான் இலக்கு.
இங்கு கல்வி கற்க வரும் குழந்தைகளுக்கு, இயற்கைக்கும், மனிதர்களின் தேவைகளுக்கும் இடையே சமநிலையை நோக்கமாக கொண்டு சொல்லிக் கொடுக்கிறோம்.
குழந்தைகளின் படைப்பாற்றலைத் துாண்டி, இயற்கை, இசை, மரபுக் கலைகள், நாடகம், இயற்கை விவசாயம், சுற்றுச்
சூழல் விழிப்புணர்வு, சமூகம் - அரசியல் பற்றிய பேச்சுகள், புத்தகங்கள், சினிமா விமர்சனங்களையும் அறிமுகப்
படுத்துகிறோம்.
குழந்தைகளை, அவர்கள் சொந்த வழியில் கண்டறிய இந்த மாற்றுக்கல்வி பயன்படும். நமக்கு என ஒரு மரபு இருக்கும், அது துண்டிக்கப்படக் கூடாது; தொடரணும். அதற்கு இந்த மாற்றுக்கல்வி பயன்படும்.
'தும்பி' என்ற சிறார் மாத இதழையும் நடத்துறோம். வண்ணங்கள் நிறைந்த ஓவியக் கதை உலகை குறைந்த செலவில் கிராமத்துக் குழந்தைகளுக்கு தமிழில் படிக்கச் செய்வது தான் இதன் நோக்கம்.
அதேபோல காந்தியம், சூழலியல், தற்சார்பு, கல்வி, வேளாண்மை, இறைமை, வாழ்வியல், தத்துவம், குழந்தைகள் சார்ந்த புத்தகங்களை அழகழகான வடிவ நேர்த்தியுடன், 'தன்னறம் நுால்வெளி' என்ற பதிப்பகம் வாயிலாக கொடுக்கிறோம்.
தற்போது சமீப காலமாக, 'ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம்' வாயிலாக, தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளில் இருக்கும் பழங்கிணறுகளை துார்வாரி, மறுபடியும் பயன்படுத்துகிற அளவுக்கு மாற்றிக் கொடுக்குறோம்.

