PUBLISHED ON : பிப் 22, 2023 12:00 AM

கடந்த, 51 ஆண்டு பாரம்பரியத்தை தாங்கி நிற்கும் நிறுவனமாக வளர்ந்துள்ள, சென்னை வடபழநியில் உள்ள, 'கமலா சினிமாஸ்' திரையரங்கின் இணை இயக்குனர், விஷ்ணு கமல்:
எங்கள் திரையரங்கை துவக்கியவர், மதுரையை பூர்வீகமாக கொண்ட வி.என்.சிதம்பரம். எம்.ஜி.ஆர்., சிவாஜியை பார்த்து, சினிமா துறையில் அவருக்கு ஆர்வம் அதிகரித்தது.
'ரீல் பெட்டி' வாயிலாக இயக்கத் துவங்கிய கமலா சினிமாஸ், இன்று, '3டி புரொஜெக்டர்கள்' உடன், நவீன திரையரங்காக மாறி, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.
எங்கள் தாத்தா திரையரங்கை துவக்கிய போது, 1,200 சீட்டுகள், மின்விசிறி வசதியுடன் கூடியதாக இருந்தது. அடுத்த தலைமுறையினர், 2009ல் நிர்வாகத்திற்குள் நுழைந்த போது, 'சவுண்ட் சிஸ்டம், புரொஜெக்டர், ஏசி' என, எல்லாவற்றையும் மாற்றினர்.
அதுவரை ஒரு திரையரங்காக இருந்த கமலா சினிமாஸ், இரு திரையரங்குகளாக மாறியது.
படம் பார்க்க வரும் மக்கள் வாயிலாகவே, எங்களுக்கு வருமானம் வருகிறது. அவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். அதனால், டிக்கெட் விலையிலும், தியேட்டரில் விற்பனையாகும், 'ஸ்நாக்ஸ்' விலையிலும், நாங்கள் எப்போதும் கவனமாக இருக்கிறோம்.
பள்ளியில் படிக்கும் போது, அப்பாவுக்கு உதவியாக இயங்க ஆரம்பித்தேன். தியேட்டரில் டிக்கெட் வினியோகம், ஸ்நாக்ஸ் வினியோகம், 'டெக்னிக்கல்' சார்ந்த விஷயம் என எல்லாவற்றிலும் அனுபவங்களை வளர்த்துக் கொண்டேன்.
என், 17 வயதில் என்னை நம்பி, 'பிசினசை' ஒப்படைத்து விட்டனர். படிப்பு மற்றும் பிசினஸ் இரண்டையும் ஒன்றாக கவனிப்பது, மிக பெரிய பொறுப்பு; ஆனால், அதை என் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையாக பார்த்தேன்.
நான் பிசினசுக்குள் நுழைந்த போது, கொரோனா தொற்று நாட்டையை உலுக்கியது. எங்கள் பிசினசில் பெரிய அளவில் சறுக்கலை சந்தித்தோம். கொரோனாவுக்கு பின், மெதுவாக சூழல் மாறியது. இன்று, மீண்டும் பழைய நிலைக்கு வந்து விட்டோம்.
பொதுவாக தியேட்டர் பிசினஸ் என்பது, போட்டி நிறைந்த தொழில்; 'ஓ.டி.டி., பிளாட்பார்ம்' கூடுதல் போட்டியானது. ஆனாலும், டிக்கெட் விலையை அதிகரிக்காமல், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை பின்பற்றுகிறோம்.
புதன் கிழமைகளில் திரையரங்கில் கூட்டம் இருக்காது. மக்கள் கூட்டத்தை அதிகரிக்க, அன்று மட்டும் டிக்கெட்டை, 99 ரூபாய்க்கு வினியோகம் செய்கிறோம். முந்தைய தலைமுறையினரின் வழிகாட்டுதலுடன், மக்களின் ஆதரவுடன், கமலா சினிமாஸ் இன்னும் விரிவடையும்.
