த.வெ.க., அரசில் காரியம் சாதிக்கும் தி.மு.க., 'மாஜி'க்கள்!
த.வெ.க., அரசில் காரியம் சாதிக்கும் தி.மு.க., 'மாஜி'க்கள்!
PUBLISHED ON : மே 19, 2026 12:06 AM

“கேட்ட தொகுதியை குடுத்திருந்தா, ஜெயிச்சிருப்பேன்னு புலம்பிண்டு இருக்கார் ஓய்...” என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார் குப்பண்ணா.
“யாருங்க அது...” என கேட்டார், அந்தோணிசாமி.
“சட்டசபை தேர்தல்ல, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இருந்த த.மா.கா.,வுக்கு அஞ்சு தொகுதிகளை ஒதுக்கினால்லியோ... ஆனா, ஒண்ணுல கூட அந்த கட்சி ஜெயிக்கல ஓய்...
“தி.மு.க., ஆட்சியில் அமைச்சரா இருந்த சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் போட்டியிட்டு ஜெயிச்சிருக்கார்... இவரை எதிர்த்து போட்டியிட்ட, த.மா.கா.,வின் விடியல் சேகர், 50,000 ஓட்டுகள் வாங்கி, ரெண்டாவது இடத்துக்கு வந்தார் ஓய்...
“விடியல் சேகர் கேட்டது, தன்னோட சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தொகுதியை தான்... ஆனா, அதை தர மறுத்த அ.தி.மு.க., அங்க போட்டியிட்டு ஜெயிச்சிடுத்து... 'எனக்கு மட்டும் காங்கேயத்தை குடுத்திருந்தா, த.மா.கா., சார்பில் நானும் எம்.எல்.ஏ.,வாகி சட்டசபைக்குள்ள போயிருப்பேன்'னு, தன் ஆதரவாளர்களிடம் சேகர் புலம்பிண்டு இருக்கார் ஓய்...” என்றார், குப்பண்ணா.
“பெண் அமைச்சரை வரவேற்க போகல பா...” என, அடுத்த தகவலுக்கு மாறிய அன்வர்பாயே தொடர்ந்தார்...
“விருதுநகர் மாவட்டம், சிவகாசி தொகுதியில், த.வெ.க., சார்பில் ஜெயிச்ச கீர்த்தனா, அதிமுக்கியமான தொழில் துறைக்கு அமைச்சராவும் ஆகிட்டாங்களே... இவங்க, தேர்தலுக்கு முன்னாடி, விருதுநகர்ல சுயேச்சையா போட்டியிட முடிவு பண்ணி, அங்க பிரசாரம் பண்ணிட்டு இருந்தாங்க பா...
“அப்புறமா, கடைசி நேரத்தில் த.வெ.க.,வில் சேர்ந்து, சிவகாசியில் நின்னு ஜெயிச்சிட்டாங்க... சமீபத்துல தொகுதிக்கு வந்த இவங்கள, த.வெ.க., மாவட்ட செயலரான மாரிசெல்வம் வரவேற்க வரல பா...
“ஏன்னா, மாரிசெல்வம், 22 வருஷங்களா விஜய் ரசிகர் மன்ற பணிகள்ல ஈடுபட்டு, அப்படியே கட்சிக்கு வந்தவர்... இவருக்கு சீட் கேட்டும் தராம, கீர்த்தனாவுக்கு தந்து அவங்க அமைச்சராகிட்டதால, மாரிசெல்வம் கடும் விரக்தியில இருக்காரு பா...
“அதனால தான், கீர்த்தனாவை வரவேற்க போகலையாம்... இதனால, 'மாவட்டத்துல இருக்கிற அதிருப்தியாளர்களை சமாளிக்கிறதே கீர்த்தனாவுக்கு பெரும் சவாலா இருக்கும்'னு த.வெ.க.,வினர் சொல்றாங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“இன்னும் காரியங்களை சாதிச்சிட்டு இருக்காவ வே...” என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
“யாரை சொல்றீங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“தமிழகத்தில் த.வெ.க., ஆட்சி நடந்தாலும், முதல்வர், அமைச்சர்கள் எல்லாருமே நிர்வாகத்துக்கு புதுசுல்லா... அவங்களுக்கு நிர்வாகம் பிடிபடவே சில மாசங்கள் ஆகிடும் வே...
“இதனால, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சிலர், இன்னும் தங்களது பழைய துறையின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பல காரியங்களை சாதிக்காவ... முக்கியமா, அவங்க அமைச்சர்களா இருந்தப்ப அறிவிச்ச திட்டங்கள் மற்றும் டெண்டர்களை எடுத்த கான்ட்ராக்டர்களுக்கு, முன்தேதியிட்டு பணி ஆணை வழங்கும்படி உத்தரவு போடுதாவ... அவங்க மீதுள்ள விசுவாசம் காரணமா, அதிகாரிகளும் அவங்க பேச்சை கேட்டு நடக்காவ வே...” என முடித்தார், அண்ணாச்சி.
பெஞ்சில் புதியவர்கள் அமர, பெரியவர்கள் இடத்தை காலி செய்தனர்.
