தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/சி.எம்.டி.ஏ.,வில் மீண்டும் கட்சி நிதி வசூல் துவக்கம்?

சி.எம்.டி.ஏ.,வில் மீண்டும் கட்சி நிதி வசூல் துவக்கம்?

சி.எம்.டி.ஏ.,வில் மீண்டும் கட்சி நிதி வசூல் துவக்கம்?


PUBLISHED ON : அக் 18, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 18, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏ லக்காய் டீயை உறிஞ்சியபடியே, “மாவட்டச் செயலர் பதவியை குறி வச்சு களமிறங்கிட்டாரு பா...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

“எந்த கட்சியிலங்க...” என கேட்டார் அந்தோணிசாமி.

“த.வெ.க.,வில், சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலர் வீதம் நியமிக்கிறாங்க... ஆனா, மதுரை திருமங்கலம் தொகுதிக்கு இன்னும் மாவட்டச் செயலர் நியமிக்கல பா...

“இந்த தொகுதி தி.மு.க., – எம்.எல்.ஏ., மணிமாறன், அந்த கட்சியில மாவட்டச் செயலரா இருக்காரு... அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரான உதயகுமாரும், இந்த தொகுதி அடங்கிய பகுதிக்கு மாவட்டச் செயலரா இருக்காரு பா...

“அ.தி.மு.க.,வில், மருத்துவ அணி மாநில இணை செயலரா இருந்த மதுரை டாக்டர் சரவணன், ஆட்சி மாறியதும் த.வெ.க.,வுல சேர்ந்துட்டாரு... மணிமாறன், உதயகுமாருக்கு போட்டியா திருமங்கலத்தில் த.வெ.க.,வை வலுவாக்க, அந்த தொகுதி மாவட்டச் செயலர் பதவிக்கு குறி வச்சிருக்காரு பா...

“இந்த தொகுதியில, த.வெ.க., சார்பில் கர்ப்பிணியருக்கு சமுதாய வளைகாப்பு, இலவச மருத்துவ முகாம்னு பல நிகழ்ச்சிகளை நடத்திட்டு இருக்காரு... உள்ளாட்சி தேர்தல்ல, திருமங்கலம் தொகுதிக்குள்ள இருக்கிற உள்ளாட்சி அமைப்புகள்ல, த.வெ.க.,வுக்கு 100 சதவீதம் வெற்றி கிடைக்கணும்னு திட்டமிட்டு, களமிறங்கியிருக்காரு பா...” என்றார் அன்வர்பாய்.

“அமைச்சர் குற்றச்சாட்டால அதிகாரிகளுக்கு உத்தரவு பறந்திருக்கு வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

“த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சரா இருக்காரே... இவர் தலைமையில, 11 மாவட்டங்களைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் மாநாடு சமீபத்துல சென்னையில நடந்துச்சுல்லா...

“இதுல பேசிய ஆனந்த், ‘ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கைகள் வச்சா, நீங்க செய்றதில்லை... ஆனா, மற்ற கட்சியினர் கோரிக்கைகளை மட்டும் உடனே செஞ்சு குடுத்துடுறீங்க’ன்னு குற்றஞ் சாட்டினாரு வே...

“இதனால, இந்த துறையின் அனைத்து நிலையிலான அதிகாரிகளுக்கும், சென்னை உயர் அதிகாரிகளிடம் இருந்து ஒரு வாய்மொழி உத்தரவு போயிருக்கு... அதாவது, ‘டெண்டர் பணிகள் இல்லாம தெருவிளக்குகள் மாற்றம், கழிவுநீர் அடைப்புகள் சரி செய்றது மாதிரியான பணிகளை செய்யும்படி த.வெ.க., – எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை வச்சா, உடனுக்குடன் செஞ்சு குடுங்க’ன்னு உத்தரவு போட்டிருக்காவ வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

“வசூல் புகார்ல மாற்றப்பட்டவர், மறுபடியும் அதே பதவிக்கு வந்துட்டாருங்க...” என்றார் அந்தோணிசாமி.

“எந்த துறையில ஓய்...” என கேட்டார் குப்பண்ணா.

“சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வின் கட்டட அனுமதி பிரிவில், தி.மு.க., ஆட்சியில ஒரு அதிகாரி இருந்தாருங்க... அப்போதைய அமைச்சரா இருந்த சேகர்பாபுவுக்கு, கட்டட அனுமதி விண்ணப்பதாரர்கள் குறித்த விபரங்கள் எல்லாம் இவர் வாயிலா தான் போகுமுங்க...

“இதன் வாயிலா, அப்ப நடந்த கட்சி நிதி வசூலுக்கு இவர் துணையா இருந்தாரு... ஆட்சி மாறியதும், அந்த அதிகாரியை முழுமை திட்டப் பிரிவுக்கு மாத்திட்டாங்க...

“ஆனா, என்ன நடந்துச்சுன்னு தெரியல... அவர் மீண்டும் பழைய பதவிக்கே வந்துட்டாரு... இதனால, ‘மறுபடியும் கட்சி நிதி வசூல் தொடங்கிடுமோ’ன்னு, கட்டுமான நிறுவனத்தினர் பயப்படுறாங்க...” என முடித்தார் அந்தோணிசாமி.

“ரவிகுமார், நாளைக்கு பார்க்கலாம் பா...” என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us