டாக்டர்களிடம் ‘கமிஷன்’ கேட்கும் கறார் பெண் அதிகாரி!
டாக்டர்களிடம் ‘கமிஷன்’ கேட்கும் கறார் பெண் அதிகாரி!
PUBLISHED ON : அக் 19, 2026 12:00 AM

பெ ஞ்சில் அமர்ந்ததுமே, “சம்பளம் குடுத்து வேலை வாங்கியிருக்காங்க...” என, விவாதத்தை ஆரம்பித்த அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
“வழக்கமா இடைத்தேர்தல் நடக்கிற தொகுதிகள்ல, தி.மு.க., சார்பில் தங்களுக்கு ஒதுக்கப்படும் பகுதிகள்ல, மாவட்டச் செயலர்கள், தங்களது ஊர்கள்ல இருந்து கட்சியினரை அழைச்சிட்டு போய் பம்பரமா வேலை பார்ப்பாங்க...
“கட்சியினருக்கு தங்கும் இடம், சாப்பாடுன்னு எல்லா செலவுகளையும் அவங்களே ஏத்துக்குவாங்க... இப்ப தி.மு.க.,வில் மறுசீரமைப்பு நடத்துறதுல நிறைய மாவட்டச் செயலர்கள் பதவி பறிபோகும்னு தகவல்கள் பரவுதுங்க...
“இதனால, ரெண்டு தொகுதி இடைத்தேர்தல் பணிகள்ல மாவட்டச் செயலர்கள் பெருசா ஆர்வம் காட்டல... இது, தலைமையின் கவனத்துக்கு போகவும், தேர்தல்ல பணியாற்றிய நிர்வாகிகளுக்கு தினமும் 1,000 ரூபாய் வீதம் சம்பளம் தந்து, வேலை பார்க்க சொல்லியிருக்கு... ‘அதனால தான், ரெண்டு தொகுதிகள்லயும் ரெண்டாவது இடத்துக்கு வர முடிஞ்சது’ன்னு, தி.மு.க., வட்டாரங்கள்ல பேசிக்கிறாங்க...” என்றார் அந்தோணிசாமி.
“அரசு டாக்டர்கள் பணியிடங்களை குறைக்கறா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“அரசு மருத்துவமனைகள்ல, கூட்டம் நிரம்பி வழியுது... டாக்டர்களை குறைச்சா எப்படி சரியா வரும் பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“இதையே தான் அரசு டாக்டர்களும் கேக்கறா... தமிழகத்துல, 37 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் இருக்கு... இங்க இருக்கற, 1,286 டாக்டர்களை பணி நிரவல் என்ற பெயர்ல, 1,195 பேரா குறைக்க தி.மு.க., ஆட்சியில முடிவு பண்ணி, 2025 மார்ச் 19ல் அரசாணை போட்டா ஓய்...
“இந்த அரசாணையை த.வெ.க., அரசு அப்படியே அமல்படுத்தறது... முதல் கட்டமா 500 படுக்கைகள் வரை இருக்கற கடலுார், ஈரோடு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, பெரம்பலுார், தஞ்சை, திருப்பத்துார், தென்காசி ஆகிய மாவட்ட மருத்துவமனைகள்ல இருக்கற மொத்த டாக்டர்களான 514 பேரை, 454 பேரா குறைக்க போறா...
“ஏற்கனவே, ‘இந்த மருத்துவமனைகளுக்கு மொத்தமா இன்னும் 419 டாக்டர்கள் தேவைன்னு நாங்க கேட்டுண்டு இருக்கற சூழல்ல, 60 பேரை தடாலடியா குறைச்சா, எங்களுக்கு பணிப்பளு அதிகரிக்கும்’னு, அரசு டாக்டர்கள் எல்லாம் புலம்பறா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“என்கிட்டயும் அரசு மருத்துவமனை தகவல் ஒண்ணு இருக்குல்லா...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“அரசு மருத்துவமனைகள்ல, உயர் அறுவை சிகிச்சை செய்ற டாக்டர்களுக்கு, நோயாளியின் காப்பீட்டு தொகையில இருந்து ஊக்கத்தொகை தருவாவ... சென்னையில, ஒரு அரசு மருத்துவமனையில் இருக்கிற அதிகாரியான பெண் டாக்டர், ஊக்கத்தொகையை விடுவிக்க டாக்டர்களிடம், ‘கமிஷன்’ கேட்கிறாங்க... தர மறுத்தா, அவங்களுக்கான தொகையை விடுவிக்காம, மாசக் கணக்குல இழுத்தடிக்கிறாங்க வே...
“இது போக, பெண் அதிகாரி பொறுப்புல வர்ற சிறுநீரகவியல் துறையில, ‘ஆப்பரேஷன்’களே செய்யாம, செஞ்சதா கணக்கு காட்டி காசு பார்க்கிறாங்க... நர்ஸ்களுக்கு, ‘நைட் டியூட்டி’ ஒதுக்காம இருக்கவும், ‘ரேட்’ நிர்ணயம் பண்ணி வசூல் பண்ணுதாங்க வே...
“எல்லாத்துக்கும் மேலா ஆண் டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்களை வா, போன்னு மரியாதை இல்லாமலும் பேசுறதால அவங்க எல்லாம் கடும் விரக்தியில இருக்காவ...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
ஒலித்த மொபைல் போனை எடுத்த அன்வர்பாய், “ஹலோ... என்னது ராயப்பேட்டையில இருந்து ஆயிஷாவா... சாரி ராங் நம்பர்...” என கூறி வைத்தார்.
உடனே, “கடலுார் மாவட்ட த.வெ.க., நிர்வாகி, தி.மு.க., ஆட்சியில முடிஞ்ச திட்டங்களுக்கு, ‘பில்’ தொகை கேட்டு வர்ற கான்ட்ராக்டர்களிடம், முன்னாள் நகராட்சி தலைவரான இவரது மாமா சொல்லி குடுத்து, 1 சதவீதம், ‘கட்டிங்’ வாங்கறதா பேசியிருந்தோமுல்லா... அது உண்மை இல்லையாம்... அவரது பெயரை கெடுக்க, யாரோ இப்படி தவறா பரப்பி விடுதா வன்னு தகவல் வந்திருக்கு வே...” என பெரியசாமி அண்ணாச்சி கூறி முடிக்கவும், நண்பர்கள் கிளம்பினர்.
