தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/திருட்டு பைக்குகளை வாங்கி விற்கும் போலீஸ்காரர்!

திருட்டு பைக்குகளை வாங்கி விற்கும் போலீஸ்காரர்!

திருட்டு பைக்குகளை வாங்கி விற்கும் போலீஸ்காரர்!

4


PUBLISHED ON : அக் 20, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 20, 2026 12:00 AM

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பி ல்டர் காபியை உறிஞ்சியபடியே, “புது பஸ்கள் ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டியிருக்கா ஓய்...” என்றபடியே, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.

“எந்த ஊருல பா...” என கேட்டார் அன்வர்பாய்.

“அரசு போக்குவரத்து கழகங்கள்ல, பாடாவதி பஸ்களை பயன்பாட்டில் இருந்து நீக்கிட்டு, புது பஸ்களை வாங்கி பயன்படுத்தறா... இந்த பஸ்களை மண்டல வாரியா ஒதுக்கீடு பண்ணுவா ஓய்...

“திண்டுக்கல் மண்டலத்துக்கு நகர் மற்றும் புறநகர் சேவைக்கு, 44 புது பஸ்களை சமீபத்துல ஒதுக்கினா... ஆனா, அந்த புது பஸ்களை எல்லாம் மதுரை மண்டலத்துக்கு அதிகாரிகள் திருப்பி விட்டுட்டா ஓய்...

“அதுக்கு பதிலா, அந்த மண்டலத்துல மறுகட்டமைப்பு செய்து பயன்படுத்திட்டு இருந்த பஸ்களை, திண்டுக்கல் மண்டலத்துக்கு தள்ளி விட்டுட்டா... இதனால, திண்டுக்கல் மண்டல டிரைவர்கள், கண்டக்டர்கள் எல்லாம் கடும் அதிருப்தியில இருக்கா... ‘பஸ்கள் ஒதுக்கீட்டில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டலாமோ’ன்னும், புலம்பறா ஓய்...” என்றார் குப்பண்ணா.

உடனே, “ஊழியர்களை ஒருமையில பேசி திட்டுதாரு வே...” என, அடுத்த தகவலுக்கு மாறினார் பெரியசாமி அண்ணாச்சி.

“யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி.

“டி.என்.பி.எஸ்.சி., மூலம் கடந்த வருஷம் தேர்வு செய்யப்பட்ட 60 ஊழியர்கள், துாத்துக்குடி மாநகராட்சியில் வேலை பார்த்துட்டு இருக்காவ... மாநகராட்சி துணை கமிஷனர் பதவி காலியா இருக்கிறதால, உதவி கமிஷனர் ஒருத்தர் தான் அவரது பொறுப்பை சேர்த்து கவனிக்காரு வே...

“இவர், புதிய ஊழியர்களிடம் எல்லா வேலைகளையும் குடுத்துடுதாரு... அதுவும் இல்லாம, அவங்களை ஒருமையில பேசி திட்டுதாரு... அவரை பார்க்க போற பெண் ஊழியர்களை ரொம்ப நேரம் காக்க வைக்காரு வே...

“பொறுப்பு அதிகாரி யின் வெறுப்பான செயல்பாடுகள் பத்தி, உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிச்சும் அவங்க கண்டுக்கல... இதனால, புதுசா வேலைக்கு வந்தவங்க எல்லாம் நொந்து போயிருக்காவ வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

“வெங்கட்ராமன், இதையும் கேட்டுட்டு கிளம்புங்க...” என நண் பரிடம் கூறிய அந்தோணி சாமியே, “திருட்டு வாகனங்களை வாங்கி வித்துட்டு இருக்காருங்க...” என்றபடியே தொடர்ந்தார்...

“திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் ஒரு போலீஸ்காரர் இருக்காரு... இவர், உயர் அதிகாரிகளை, ‘கவனிச்சு’ காவலர் குடியிருப்பு தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுற வேலையை வாங்கிட்டாருங்க...

“ஆனா அதை செய்யாம, தன் சொந்த ஊர்ல நண்பர்களுடன் சேர்ந்து, மது குடிச்சிட்டு ஜாலியா வலம் வர்றாரு... ஏற்கனவே திருமணம் முடிச்ச இவர், போலீஸ் குடியிருப்புல இருந்த ஒருத்தரது மனைவியை, ‘பிக்கப்’ பண்ணி, தன் சொந்த ஊர்ல குடும்பம் நடத்தினாருங்க...

“இதனால, இவரது முதல் மனைவி பிரிஞ்சு போயிட்டாங்க... இவரது அடாவடி தாங்க முடியாம, குடும்பம் நடத்திட்டு இருந்த பெண்ணும் பிரிஞ்சு போயிட்டாங்க... இதனால, முழு நேரமும் போதையில மிதக்கிறவர், செலவுக்காக பைக் திருட்டு கும்பலுடன் கைகோர்த்துட்டாருங்க...

“திருட்டு பைக்குகளை வாங்கி, வித்துட்டு இருக்காரு... இவர் இப்ப பயன்படுத்தும் பைக்கே திருட்டு பைக் தான்... சமீபத்துல, தொட்டியத்துல போலீசார் வாகன சோதனையில சிக்கியவர், போலீஸ்னு சொல்லி தப்பிச்சிட்டாருங்க...” என முடித்தார் அந்தோணிசாமி.

“சாமிநாதன், இப்படி உட்காருங்க பா...” என்ற படியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us