PUBLISHED ON : அக் 21, 2026 12:00 AM

‘‘கு ளத்தை ஆக்கிரமிச்சிட்டாரு வே...’’ என, விவாதத்தை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
‘‘யாருப்பா அது...’’ என கேட்டார் அன்வர்பாய்.
‘‘சென்னையை ஒட்டியிருக்கிற பூந்தமல்லி குமணன்சாவடியில், ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் இருக்கு... இந்த கோவிலுக்கு பின்னாடி, செட்டிக்குளம்னு ஒரு சின்ன குளம் இருந்துச்சு வே...
‘‘மொத்தம், 38 ஆயிரத்து 810 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த குளம், அப்பகுதிக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும், முன்னோருக்கு காரியம் செய்யும் இடமாகவும் இருந்துச்சு... பூந்தமல்லி நகராட்சி முன்னாள் தலைவரும், அ.தி.மு.க., பிரமுகருமான ஒருத்தர், 2014ல் இந்த குளத்தை, மண்ணை கொட்டி மூடி ஆக்கிரமிச்சிட்டாரு வே...
‘‘இதை கண்டுபிடிச்ச வருவாய் துறையினர், 2016ல ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை துார்வாரி தண்ணீர் தேங்க வழி ஏற்படுத்தினாவ... ஆனா, சில வருஷங்கள்லயே அதே அ.தி.மு.க., பிரமுகர், மறுபடியும் குளத்தை மூடி, அங்கன கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்காரு வே...
‘‘இந்த நிலத்தின் இன்றைய மதிப்பு 50 கோடி ரூபாய் இருக்கும்... ‘ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை மீட்கணும்’னு, இந்த பகுதி மக்கள் கேட்காவ வே...’’ என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
‘‘ஞானம், தள்ளி உட்காருங்க...’’ என்ற அந்தோணிசாமியே, ‘‘ஆட்சி மாறியும் அதிகாரிகள் மாறலைங்க...’’ என்றபடியே தொடர்ந்தார்...
‘‘தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ், சமீபத்துல சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு தன் மனைவியுடன் வந்தாரு... அய்யனார் சன்னிதியில் சில பரிகார பூஜைகளை செஞ்சாருங்க...
‘‘அவருக்கு கோவில் அதிகாரிகளும், ஊழியர்களும் ஓடியாடி பணிவிடைகள் செஞ்சாங்க... அவர் வந்திருக்கும் தகவல் கிடைச்சு, பத்திரிகையாளர்கள் வந்து படம் எடுத்தாங்க...
ஆனா, கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் எல்லாம் அவங்களை சூழ்ந்து, ‘படம் எல்லாம் எடுக்காதீங்க’ன்னு தடுத்துட்டாங்க... ‘ஆட்சி மாறியும் இவங்களது தி.மு.க., விசுவாசம் மாறலையே’ன்னு, அங்கிருந்த பக்தர்கள் எல்லாம் புலம்பினாங்க...’’ என்றார் அந்தோணிசாமி.
‘‘அதிகாரிகள் ஒத்துழைக்க மாட்டேங்கறா ஓய்...’’ என்றார் குப்பண்ணா.
‘‘எந்த துறையில பா...’’ என கேட்டார் அன்வர்பாய்.
‘‘தமிழக அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்கள்ல, அஞ்சு வருஷங்களுக்கு மேல தற்காலிக ஊழியர்களா இருக்கறவாளை பணி நிரந்தரம் செய்ய முடிவெடுத்திருக்கா... இது சம்பந்தமா, துறையின் கமிஷனர் வினய், ஒரு உத்தரவு போட்டார் ஓய்...
‘‘அதாவது, பணி நிரந்தரத்துக்கு தகுதியான பணியாளர்கள் பட்டியல் மற்றும் இறந்தவா பற்றிய விபரங்களை, ஆகஸ்ட் 4க்குள்ள தனக்கு அனுப்பும்படி கேட்டிருந்தார்... மொத்தம் 1,493 பணியாளர்கள் பட்டியல் அனுப்ப வேண்டிய இடத்துல, இதுவரைக்கும் 222 பேரோட விபரங்கள் மட்டும் தான் கமிஷனருக்கு வந்திருக்கு ஓய்..
‘‘தமிழகத்துல இருக்கற 25 மண்டல இணை கமிஷனர்கள்ல, கடலுார், சேலம், தர்மபுரி, பெரம்பலுார், துாத்துக்குடி ஆகிய அஞ்சு மண்டல இணை கமிஷனர்கள், ஒரு பெயரைக்கூட அனுப்பல... கடந்த ஆட்சிகள்ல தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் பண்றதுக்கு, 2 லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் வரைக்கும் அதிகாரிகள், ‘கட்டிங்’ வசூல் பண்ணுவா ஓய்...
‘‘இந்த ஆட்சியில அப்படி செய்ய முடியாதுங்கறதால, யாரும் பட்டியல் அனுப்பறதுல ஆர்வம் காட்டல... இதனால, அதிகாரிகள் மீது அமைச்சர் ரமேஷ் அதிருப்தியில இருக்கார் ஓய்...’’ என முடித்தார் குப்பண்ணா.
அரட்டை முடியவும், அனைவரும் கிளம்பினர்.
