PUBLISHED ON : அக் 17, 2026 12:00 AM

நா ளிதழை மடித்தபடியே, ‘‘சில மாசங்கள்லயே, 30 லட்சம் ரூபாய் சம்பாதிச்சிட்டாரு வே...’’ என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
‘‘யாருப்பா அந்த வசூல் அதிகாரி...’’ என, பட்டென கேட்டார் அன்வர்பாய்.
‘‘கோவை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கு, சில மாசங்களுக்கு முன்னாடி ஒரு அதிகாரி வந்தாரு... இவர் ஏரியாவுல, வாரத்துல நாலு முதல் எட்டு பேர் வரை சாலை விபத்துகள்ல இறந்து போயிடுதாவ வே...
‘‘இப்படி உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகன உரிமையாளர்களிடம், 30 ஆயிரம் ரூபாய் வரை போலீஸ் அதிகாரி கறந்துடுதாரு... ஒரு வழக்குல கணிசமா, ‘கட்டிங்’ வாங்கிட்டு, விபத்து ஏற்படுத்திய டிரைவர் பெயரையே மாத்திட்டாரு வே...
‘‘எந்த பயமும் இல்லாம லஞ்சத்தை ஸ்டேஷன்லயே வாங்குதாரு... அதுக்குள்ள, 30 லட்சம் ரூபாய் வரை சம்பாதிச்சிட்டாரு... வசூல் விவகாரத்துல, பக்கத்து ஏரியா பெண் போலீஸ் அதிகாரி தான், இவருக்கு குருவா இருக்காங்க வே...’’ என்றார் பெரியசாமிஅண்ணாச்சி.
‘‘வாங்க விஸ்வநாதன்... நிர்மலா ஊருக்கு போயாச்சா...’’ என நண்பரிடம் விசாரித்த அந்தோணிசாமியே, ‘‘தனியார் நிறுவனத்துக்கு சாதகமா இருக்காங்க...’’ என்றபடியே தொடர்ந்தார்...
‘‘மதுரை மாநகராட்சி பகுதியில துாய்மை பணிகளை, ‘அவர் லேண்ட்’ என்ற தனியார் நிறுவனம் செஞ்சிட்டு இருக்கு... இதன் ஒப்பந்தம், வர்ற நவம்பர்ல முடியுதுங்க...
‘‘இதன் செயல்பாடுகள் சரியில்லாததால ஒப்பந்தத்தை புதுப்பிக்கக் கூடாதுன்னு, தி.மு.க., – அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க... ஆனா, இந்த நிறுவனத்தை அனுப்ப அதிகாரிகளுக்கு மனசில்லைங்க...
‘‘இந்த நிறுவனத்தை வெளியேற்றணும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில போன வாரம் துாய்மை பணியாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினாங்க... சங்க நிர்வாகிகளுடன் மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குமார் தலைமையில அதிகாரிகள் பேச்சு நடத்தினாங்க...
‘‘அப்ப, ‘அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை புதுப்பிக்க மாட்டோம்னு எழுதிக் குடுங்க’ன்னு நிர்வாகிகள் கேட்கவே, அதிகாரிகள் ஆடிப் போயிட்டாங்க... இதனால, அங்கயே பேசி முடிக்க வேண்டிய பஞ்சாயத்தை, ‘நீங்க சென்னையில் நகராட்சி நிர்வாக இயக்குநரிடம் பேசிக்கிடுங்க’ன்னு சொல்லி, பந்தை தள்ளி விட்டுட்டாங்க...’’ என்றார் அந்தோணிசாமி.
‘‘போலி ‘பில்’களை போட்டு வாரி குவிக்கறார் ஓய்...’’ என்றார் குப்பண்ணா.
‘‘எந்த அதிகாரியை சொல்றீங்க...’’ என கேட்டார் அந்தோணிசாமி.
‘‘திருச்சி மாவட்டம், வையம்பட்டி யூனியன்ல ஒரு அதிகாரி இருக்கார்... இவர் பல பகுதிகள்ல ஆழ்துளை கிணறு போட்டதாகவும், ‘எலக்ட்ரிக்கல்’ வேலைகள் செஞ்சதாகவும் போலி பில்களை வச்சு பணத்தை சுருட்டறார் ஓய்...
‘‘மணப்பாறையில் இருக்கற ஒரு எலக்ட்ரிக்கல் கடையில தான் போலி பில்களை வாங்கறார்... கட்டட அனுமதி, வீட்டு வரி விதிப்பு, ஊராட்சிகள் வைக்கற பில்களுக்கு ஒப்புதல்னு எதா இருந்தாலும், பணத்தை வெட்டுனா மட்டும் தான் கையெழுத்து போடுவார் ஓய்...
‘‘இந்த வகையில, மாசம் 1 லட்சம் ரூபாய்க்கு மேல சம்பாதிக்கறார்... மதியம் சாப்பிட்டதும், ஆபீஸ்ல இருக்கற ஓய்வறைக்கு போய் துாங்கிடறார்... சாயந்தரம் 5:00 மணிக்கு எழுந்து வர்றவர், ராத்திரி 9:00 மணி வரை ஆபீஸ்ல உட்கார்ந்துண்டு, மற்ற பெண் ஊழியர்களையும் இருக்கும்படி கட்டாயப்படுத்தறார் ஓய்...’’ என முடித்தார் குப்பண்ணா.
‘‘நிஜஸ்டன் ஜோ இப்படி உட்காருங்க...’’ என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்கள் கிளம்பினர்.
