PUBLISHED ON : மார் 08, 2024 11:10 PM

உணவு டெலிவரி நிறுவனமான, 'சொமேட்டோ'வில் டெலிவரி பார்ட்னராக பணியாற்றும், மாற்றுத்திறனாளிகளான புதுச்சேரியைச் சேர்ந்த சிவகாமி, ஷர்மிளா:
சிவகாமி: பிறந்து வளர்ந்தது எல்லாமே புதுச்சேரி. ஒன்றரை வயதிலேயே போலியோவில் கால்கள் முடங்கின. 6 வயதில் மாற்றுத்திறனாளிகளுக்கான விடுதியில் தங்கி படித்தேன்.
சிறிது நாளில் அப்பா இறந்து விட்டார். வருமானம் நின்றதால், பல இடங்களில் வேலை கேட்டேன்.
வாரம், 200 ரூபாய் சம்பளத்தில், இரண்டாவது மாடியில் உள்ள அப்பள கம்பெனி ஒன்றில் வேலை கிடைத்தது. கஷ்டப்பட்டு வேலை செய்தேன். உறவினரை திருமணம் செய்து, இரு குழந்தைகள் பிறந்தனர்.
பின், கணவருக்கு விபத்து ஏற்பட்டு கால் உடைந்தது. அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல், நிலைகுலைந்து போனோம்.
அப்போது தான் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக மூன்று சக்கர பைக் தருவதாகவும், அவர்களே சொமேட்டோவில் ஆறு மாத சம்பளத்திற்கு டெலிவரி பார்ட்னர் வேலை வாங்கி தருவதாகவும் நண்பர் ஒருவர் கூறினார்.
அப்படித்தான் வேலையும், இந்த வண்டியும் கிடைத்தது. முதல் ஆர்டரில், சம்பந்தப்பட்ட இடத்தை அடைய காலதாமதமானது. அடுத்த நாள், என் மகள் தான் எனக்கு 'மேப்' எப்படி பார்ப்பது என்பது முதல் அனைத்தையும் சொல்லிக் கொடுத்தாள்.
இப்போது கணவரையும், பிள்ளைகளையும் நன்றாக பார்த்துக் கொள்கிறேன்.
ஷர்மிளா: உப்பளம் வாணரப்பேட்டையில் தான் சொந்த வீடு. பெற்றோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். போலியோவால் கால்களை இழந்தேன். டீச்சர் டிரெய்னிங், யோகா ஆசிரியை, டெய்லரிங் என அடுத்தடுத்து முடித்தேன்.
திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்தனர்; ஆனால், 'செட்' ஆகல. பின், நானே திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்.
நண்பர்கள் எனக்கு டெய்லர் கடை வைத்து கொடுத்தனர். ஒரு நாள் தடுமாறி கீழே விழுந்து போலியோவில் பாதிக்கப்பட்ட காலிலேயே விபத்து ஏற்பட்டு, படுத்த படுக்கையானேன். வருமானம் நின்று போனது.
அதிலிருந்து மீண்டு, பின், தனியார் நிறுவனம் வாயிலாக மூன்று சக்கர பைக் கிடைத்து, சொமேட்டோவில் பணியில் சேர்ந்தேன்.
சக ஊழியர்களே நண்பர்களாகி பல உதவிகள் செய்கின்றனர். இப்போதும் மாலைப் பொழுதில் தொண்டு நிறுவனம் நடத்தும் குழந்தைகள் இல்லத்துக்கு சென்று டியூஷன் எடுப்பேன்.
நடக்க முடியாத நிலையிலும், இந்த வேலை எங்கள் தோளில் சிறகு மாட்டி விட்ட மாதிரியே உள்ளது; தொடர்ந்து பறப்போம்.

