PUBLISHED ON : டிச 09, 2024 12:00 AM

புதுக்கோட்டை மாவட்டம், கொடும்பாளூர் அரசு மருத்துவமனையில், வட்டார மருத்துவ அலுவலராக பணிபுரிந்து வரும் ராகவி ரவிச்சந்திரன்:
சின்ன வயசுல, எனக்கு உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டலுக்கு சென்று, டாக்டர்களை பார்க்கும் போது தான், எனக்கும் டாக்டர் ஆகணும் என்ற ஆசை வந்தது.
'நான் டாக்டர் ஆகணும்'னு சொன்னபோது, 'உங்கப்பாவால் அதெல்லாம் படிக்க வைக்க முடியாது'ன்னு தான் என்னை சுத்தியிருந்த எல்லாரும் சொன்னாங்க. அதையும் மீறி, என் மேல நம்பிக்கை வைத்துபடித்தேன்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மாவட்ட அளவில் இரண்டாவது மதிப்பெண்ணை நான் எடுத்ததால், நாமக்கல்லில் இருக்கிற தனியார் பள்ளி நிர்வாகம், என்னை அங்கு இலவசமாக பிளஸ் 1 சேர்த்துக் கொண்டது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் மருத்துவ படிப்புக்கு, 200க்கு, 199, 'கட் ஆப்' எடுத்தேன்.
தமிழகத்தில் பல முக்கியமான மருத்துவக் கல்லுாரிகளிலும் 'சீட்' கிடைத்தது; நான், தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரியை தேர்ந்தெடுத்தேன்.
என் மதிப்பெண்களை பார்த்து உதவிய பல நல்ல உள்ளங்களால் தான், என்னோட, 'ஹாஸ்டல் பீஸ்' கட்டப்பட்டது.
நான்கரை ஆண்டு மருத்துவ படிப்பை தொடர்ந்து, 'ஹவுஸ் சர்ஜன்' செய்ய ஆரம்பித்த போது, முதல் சம்பளம் கிடைத்தது.
முதல் மாத சம்பளத்தை வாங்கியபோது, கிடைத்த நம்பிக்கைக்கு இணையில்லை. 'இனி எந்த தேவைக்கும், யாரிடமும் போய் நிற்க வேண்டாம்; நம் குடும்பத்தை நாமே பார்த்துக் கொள்ளலாம்' என்று நினைத்த போது, அவ்வளவு ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும் இருந்தது.
நான் வேலைக்கு போக ஆரம்பித்து, ஏழு ஆண்டுகள் ஆகின்றன. முதலில் எங்கப்பா, அம்மாவுக்கான அடிப்படை தேவைகள், வசதிகளை செய்து கொடுத்தேன்.
அதன் பின், ஒரே ஒரு அறையை வீடாக நினைத்து வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, சிறிய வீடு ஒன்று கட்டியுள்ளேன்.
என் பள்ளிக்கால நண்பர் ஒருவரின் அறக்கட்டளையுடன் இணைந்து, 'கற்க தோள் கொடு' என்ற திட்டத்தை செயல்படுத்துகிறேன்.
பல சூழ்நிலைகளால் படிக்க முடியாமல் இருக்கும் குழந்தைகளுக்கு, குறிப்பாக தாய், தந்தையை இழந்த அல்லது வறுமையில் இருக்கும் பெண் குழந்தைகளின் உயர் கல்விக்கு உதவிகள் செய்கிறேன்.
என் படிப்புக்கு உதவிய நல் உள்ளங்கள் போல, உங்களுக்கு தெரிந்த பெண் பிள்ளைகளோட படிப்புக்கு பொருளாதார ரீதியாகவோ, கல்வி வழிகாட்டியாகவோ நீங்களும் உதவலாம்.
அப்படி உதவி கிடைத்து முன்னேறி வர்ற பொண்ணுங்க, நம்மை மாதிரி இருக்குற மத்தவங்களையும் ஜெயிக்க வைக்கலாம். இது ஒரு தொடர் ஓட்டம்... வாங்க முன்னெடுப்போம்!