/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பல குழந்தைகள் நல்ல நிலைக்கு மாறியுள்ளனர்!
/
பல குழந்தைகள் நல்ல நிலைக்கு மாறியுள்ளனர்!
PUBLISHED ON : ஜூன் 19, 2025 12:00 AM

'ஆட்டிசம்' உள்ளிட்ட பாதிப்புகள் கொண்ட சிறப்பு குழந்தைகளை வாழ்வியல் முறை வாயிலாக மாற்றி வரும், தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியில் செயல்படும், வனப்பேச்சி வாழ்வியல் மையத்தின் உரிமையாளர் வானதி பாலசுப்பிரமணியன்:
சிறப்பு குழந்தைகளுக்கான ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன். எங்களுடையது சிகிச்சை மையம் அல்ல; வாழ்வியல் மையம். அதாவது எல்லா குழந்தைகளும், அவரவர் வீட்டில் எப்படி தன்னிச்சையாக செயல்களை செய்கின்றரோ, அதேபோல் இங்கு வரக்கூடிய குழந்தைகளையும் பழக்கப்படுத்துவது மட்டுமே என்னுடைய பிரதான வேலை.
'ஆட்டிசம், டவுண் சின்ட்ரோம்' குழந்தைகளை பார்த்தாலே தெரியும். அதேநேரத்தில், அடையாளம் காண முடியாத அளவுக்கு இயல்பானவர்களை போல் இருக்கும் சில குழந்தைகளும்கூட, இதே மனநிலையில் இருக்கின்றனர்.
அவர்களுக்கான பிரச்னை என்ன என்பதை அறிந்து, அதற்கேற்ப சில பயிற்சிகளை அளித்தாலே, அவர்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
இதற்கு, அந்த குழந்தைகளின் பெற்றோரும் உடனிருக்க வேண்டும். தன் கையால் எடுத்து சாப்பிடும் வயது வந்தபின்னும் கூட, சில குழந்தைகளுக்கு எப்படி சாப்பிட வேண்டுமென்று தெரிவதில்லை; ஆனால், இங்கு வந்தபின் அவர்களாகவே சாப்பிடுகின்றனர்.
இங்கு தினமும் காலையில் சிறுதானிய கூழுடன், துவையல் கொடுப்போம். மதியம், பாதியளவு பட்டை தீட்டப்பட்ட பாரம்பரிய அரிசி சாதம், கூட்டு, காய்கறி பொறியல், அவியல் தருவோம்.
இரவில் அதிகபட்சமாக, 7:00 மணிக்குள் சாப்பாட்டை முடித்து விடுவோம். கம்பு அல்லது கேழ்வரகில், கருப்பு உளுந்து சேர்த்து அரைக்கப்பட்ட மாவில் இட்லி தயார் செய்து கொடுப்போம். 'ஸ்நாக்ஸ்' என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.
காலையில் விழித்தது முதல் இரவு துாங்கும் வரை, ஒரு வீட்டில் என்னென்ன நடக்குமோ அதை முறைப்படுத்தி செய்கிறோம். அவற்றை இந்த குழந்தைகள் பார்த்து புரிந்து செய்கின்றனர். யாரையும், 'இதை செய், அதை செய்' என்று வற்புறுத்த மாட்டோம்; அவர்களாகவே கற்று, அதை செயல்படுத்துகின்றனர்.
எத்தனையோ மையங்களுக்கு சென்று, விரக்தியின் விளம்பில் இங்கு வருவோருக்கு நம்பிக்கை கொடுக்கிறோம். பல குழந்தைகள் எங்களிடம் வந்து நல்ல நிலைக்கு மாறி இருக்கின்றனர். என்னிடம் வருவோரை, 'தெரபி சென்டர் மனநிலையுடன் வராதீர்கள். இது இயற்கை சூழலில் அமைந்திருக்கும் ஒரு வாழ்வியல் மையம்' என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி புரிய வைக்கிறேன்.
'எனக்கு சிறிது அவகாசம் கொடுங்கள். கூடவே, ஆழமான நம்பிக்கையும் வையுங்கள். இந்த செல்லக்குழந்தைகளை சிறகடித்து பறக்க வைப்பது என் பொறுப்பு' என்றும் கூறுவேன்.