PUBLISHED ON : ஏப் 30, 2026 12:00 AM

சிறப்பான நிதி நிர்வாகம் பற்றி கூறும், திருவாரூர் மாவட்டம், கீழப்பெருமழை கிராமத்தை சேர்ந்த அ.கதிர்வேல்:
நான் பார்த்த எங்கள் வீட்டு நிதி அமைச்சர்கள் மூவர். ஒருவர் என் அம்மா; இன்னொருவர் என் மனைவி; மற்றொருவர் என் மகள். பணத்தை நிர்வகிப்பதில், திறமையான பெண்ணாக நான் முதலில் பார்த்தது, என் அம்மாவைத் தான்.
என் அப்பா மூன்றாவது வகுப்பு வரை படித்து விட்டு, விவசாயத்தை கவனித்து வந்தார். என் அம்மா ஆடு, கோழிகள் வளர்த்து, அதன் வாயிலாக கிடைத்த பணத்தை சேமித்து வந்தார். என்னை கல்லுாரிக்கு அனுப்பி படிக்க வைக்க முடியாததால், அஞ்சல் வழிக் கல்வி மூலம், மேற்படிப்பு வரை விவசாயத்தை கவனித்துக் கொண்டே படித்தேன்; உரக்கடை ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தினேன்.
என் அம்மாவின் சிக்கனம், பண நிர்வாகம் தான் என் செயல்பாடுகள் சிறப்பாக அமைய காரணம் என்பேன். திருமணத்திற்கு பின், குடும்பத்தின் நிதி அமைச்சராக, என் மனைவி மாறினார். 2007ல் சொந்த வீடு கட்டினேன். சில காரணங்களால், பொருளாதார கஷ்டம் வந்து, கடனாளி ஆனேன்.
அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில், சிங்கப்பூர் சென்றேன். வரவு, செலவு மற்றும் குழந்தைகள் படிப்பு என, அனைத்தையும் என் மனைவிதான் பார்த்துக் கொண்டார். பணம் சம்பாதிப்பது ஒரு கலை என்றால், அதை சரியாக நிர்வகிப்பதும் ஒரு கலைதான். பணத்தை சரியாக நிர்வகிக்கா விட்டால், சம்பாதித்தும் பயன் இருக்காது.
என் மனைவி மிகச் சரியாக பணத்தை நிர்வகித்தார். பணத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதில், என் மனைவி எனக்கு இன்னொரு திறமையான பெண்.
என் மகளுக்கு திருமணமாகி, சென்னையில் வசித்தார். சென்னையில் அவர் வீடு வாங்கும்போது, கையில் இருந்த நகைகள் அனைத்தையும் விற்று, பற்றாக்குறைக்கு கடன் வாங்கினார். ஆனால், அந்தக் கடனை வெகு சிக்கிரம் அடைத்து முடித்ததை கண்டு வியந்து போனேன்.
தற்போது, வீடு வாங்குவதற்காக விற்ற நகைகளை விட, அதிகமாகவே நகைகள் வாங்கி சேமித்து உள்ளார். கிராமத்திலும் ஒரு வீடு கட்டியுள்ளார்; விவசாய நிலங்களும் வாங்கியுள்ளார்.
ஆனால், தவணையில் பொருட்கள் வாங்குவதும், கடனுக்கு பொருட்களை வாங்குவதையும் அவர் எப்போதும் செய்வதில்லை. 'பணம் வரும்போது, அதை சரியாக முதலீடு செய்து விட்டால், எதிர்காலத்தில் பெரிய பலன் தரும்' என்று சொல்வார் என் அம்மா. அவர் சொல்லித் தந்த பாடங்கள் எல்லாமே, எங்களுக்கு வளம் தரும் மந்திரங்கள்!
தொடர்புக்கு: 82487 73355.
